ஈரானின் புரட்சிகர காவல் படையுடன் தொடர்புடைய தஸ்னிம் செய்தி நிறுவனம் ஈரான் வான்பரப்பில் அமெரிக்க போர் விமானம் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும் அதன் விமானியை அமெரிக்கா தேடி வருவதாகவும் தெரிவித்துள்ளது.
வியாழக்கிழமை காலை ஹோர்முஸ் நீரிணையில் உள்ள கெஷ்ம் தீவில் (Qeshm Island) போர் விமானி சுட்டு வீழ்த்தப்பட்டதாக IRGC வெளியிட்ட தகவலை அமெரிக்க மத்திய கட்டளை மையம் (Centcom) மறுத்திருந்தது.
தற்போது தஸ்னிம் வெளியிட்டுள்ள புதிய செய்திக்கும், அமெரிக்காவின் முந்தைய மறுப்புக்கும் தொடர்பு உள்ளதா என்பது தெளிவாகத் தெரியவில்லை. இது குறித்து கூடுதல் விவரங்களைப் பெற பிபிசி அமெரிக்க மத்திய கட்டளை மையத்தைத் தொடர்பு கொண்டுள்ளது.
அமெரிக்க ஹெலிகாப்டர்கள், விமானங்கள் மற்றும் உளவு ட்ரோன்கள் இந்தத் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளதாக தஸ்னிம் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், ஈரானிய அரசுத் தொலைக்காட்சியின் உள்ளூர் அலைவரிசை ஒன்றில், அமெரிக்க விமானியை உயிருடன் பிடிப்பவர்களுக்கு சன்மானம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், இந்தத் தகவல்களை பிபிசி இன்னும் உறுதிப்படுத்தவில்லை.