ஈரானின் அதி உயர் தலைவரான மொஜ்தபா கமேனி (Mojtaba Khamenei), போரின் தொடக்கத்தில் அவரது தந்தையைக் கொன்ற வான்வழித் தாக்குதலில் ஏற்பட்ட கடுமையான முகம் மற்றும் கால் காயங்களில் இருந்து இன்னும் குணமடைந்து வருகிறார் என்று அவரது உள்வட்டத்திற்கு நெருக்கமான மூன்று நபர்கள் ரொய்ட்டர்ஸிடம் தெரிவித்தனர்.

மத்திய தெஹ்ரானில் உள்ள அதி உயர் தலைவரின் வளாகத்தின் மீது நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் கமேனியின் முகம் சிதைக்கப்பட்டதாகவும், அவருக்கு ஒன்று அல்லது இரண்டு கால்களிலும் பலத்த காயம் ஏற்பட்டதாகவும் விடயமறிந்த அந்த மூன்று வட்டாரங்கள் தெரிவித்தன.
56 வயதான அவர், தனது காயங்களில் இருந்து குணமடைந்து வருவதாகவும், மனரீதியாகத் தெளிவாக இருப்பதாகவும் அந்த நபர்கள் தெரிவித்தனர். முக்கியமான விஷயங்களைப் பற்றி விவாதிப்பதற்கான பெயர் வெளியிட விரும்பாத அவர்கள், அவர் ஆடியோ கான்பரன்சிங் (Audio Conferencing) மூலம் மூத்த அதிகாரிகளுடனான கூட்டங்களில் பங்கேற்பதாகவும், போர் மற்றும் வாஷிங்டனுடனான பேச்சுவார்த்தைகள் உள்ளிட்ட முக்கிய முடிவுகளில் ஈடுபட்டுள்ளதாகவும் இருவர் தெரிவித்தனர்.
கமேனியின் உடல்நிலை அவரை அரசு விவகாரங்களை நடத்த அனுமதிக்குமா என்ற கேள்வி, பல தசாப்தங்களில் ஈரான் சந்திக்கும் மிக மோசமான ஆபத்தான தருணத்தில் எழுந்துள்ளது. பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் சனிக்கிழமையன்று அமெரிக்காவுடனான உயர்மட்ட அமைதிப் பேச்சுவார்த்தைகள் தொடங்கவுள்ள நிலையில் இது முக்கியத்துவம் பெறுகிறது.
கமேனியின் இருப்பிடம், நிலைமை மற்றும் ஆட்சி செய்யும் திறன் ஆகியவை இன்னும் பொதுமக்களுக்கு ஒரு மர்மமாகவே உள்ளன. மார்ச் 8-ஆம் தேதி அவர் தனது தந்தைக்குப் பதிலாக நியமிக்கப்பட்டதிலிருந்தோ அல்லது வான்வழித் தாக்குதலுக்குப் பின்னரோ அவரது புகைப்படம், வீடியோ அல்லது ஆடியோ பதிவு எதுவும் வெளியிடப்படவில்லை.
கமேனியின் காயங்களின் அளவு அல்லது அவர் ஏன் இன்னும் எந்தப் படங்களிலும் அல்லது பதிவுகளிலும் தோன்றவில்லை என்பது குறித்த ரொய்ட்டர்ஸின் கேள்விகளுக்கு ஐக்கிய நாடுகள் சபைக்கான ஈரானின் தூதரகம் பதிலளிக்கவில்லை.
பிப்ரவரி 28 அன்று, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தொடங்கிய போரின் முதல் நாளில், அவரது தந்தையும் முன்னோடியுமான அயதுல்லா அலி கமேனியைக் கொன்ற தாக்குதலில் மொஜ்தபா கமேனி காயமடைந்தார். இந்தத் தாக்குதலில் மொஜ்தபா கமேனியின் மனைவி மற்றும் உறவினர்களும் கொல்லப்பட்டனர்.
கமேனியின் காயங்களின் அளவு குறித்து அதிகாரப்பூர்வ ஈரானிய அறிக்கை எதுவும் இல்லை. இருப்பினும், அவர் அதி உயர் தலைவராக பெயரிடப்பட்ட பிறகு, அரசு தொலைக்காட்சியின் செய்தி வாசிப்பாளர் அவரைப் போரில் கடுமையாக காயமடைந்தவர்களைக் குறிக்கும் “ஜான்பாஸ்” (janbaz) என்ற சொல்லால் குறிப்பிட்டார்.
மார்ச் 13 அன்று அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் (Pete Hegseth), கமேனி “காயமடைந்துள்ளார் மற்றும் சிதைந்து போயிருக்க வாய்ப்புள்ளது” என்று கூறிய அறிக்கையுடன் கமேனியின் காயங்கள் பற்றிய விவரங்கள் ஒத்துப்போகின்றன. அமெரிக்க உளவுத்துறை மதிப்பீடுகளை அறிந்த ஒரு ஆதாரம், கமேனி ஒரு காலை இழந்ததாக நம்பப்படுவதாகவிடயமறிந்த வட்டாரங்கள் ரொய்ட்டர்ஸிடம் தெரிவித்தன.
மத்திய புலனாய்வு அமைப்பு (CIA) கமேனியின் நிலை குறித்து கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டது. இஸ்ரேல் பிரதமர் அலுவலகமும் கேள்விகளுக்கு பதிலளிக்கவில்லை.
மத்திய கிழக்கு நிறுவனத்தின் மூத்த ஆய்வாளர் அலெக்ஸ் வடங்கா கூறுகையில், காயங்களின் தீவிரத்தைப் பொருட்படுத்தாமல், அனுபவமற்ற புதிய தலைவர் தனது தந்தை செலுத்திய அதே அளவிலான அதிகாரத்தைச் செலுத்த வாய்ப்பில்லை என்று கூறினார்.
அவரது உலகக் பார்வை பற்றி எங்களுக்கு அதிகம் தெரியாது
ஈரானின் இறையாண்மை அமைப்பில், உச்ச அதிகாரம் என்பது உச்ச தலைவரால் செலுத்தப்படுகிறது. அவர் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதியை மேற்பார்வையிடுவதோடு, புரட்சிகர காவலர் (Revolutionary Guards) உள்ளிட்ட அமைப்புகளை நேரடியாகக் கட்டளையிடுகிறார்.
அவரது தந்தை அலி கமேனி பல தசாப்தங்களாக தனது அதிகாரத்தை நிலைநாட்டியிருந்தார். ஆனால், அவரது மகன் மொஜ்தபாவிடம் அதே போன்ற முழுமையான அதிகாரம் இல்லை என்று ஈரானிய ஆதாரங்கள் கூறுகின்றன. அவரது தந்தையின் படுகொலைக்குப் பிறகு அவரை உயர்மட்ட பதவிக்கு கொண்டு வர உதவிய புரட்சிகர காவலர்கள், போரின் போது மூலோபாய முடிவுகளில் ஆதிக்கம் செலுத்தும் குரலாக உருவெடுத்துள்ளனர்.
ஈரானிய சமூக ஊடகங்களில் கமேனியின் வருகை பற்றி பரவலாக விவாதிக்கப்படுகிறது. , “மொஜ்தபா எங்கே?” (Where is Mojtaba?) என்ற வாசகத்துடன் ஒரு வெற்று நாற்காலியின் படம் மீம் (Meme) ஆகப் பகிரப்பட்டு வருகிறது.
இருப்பினும், அரசு ஆதரவாளர்கள் சிலர், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் வான்வழித் தாக்குதல்களின் அச்சுறுத்தலைக் கருத்தில் கொண்டு கமேனி தலைமறைவாக இருப்பது முக்கியம் என்று கூறுகின்றனர். கியோம் (Qom) நகரைச் சேர்ந்த பசிஜ் போராளி முகமது ஹொசைனி கூறுகையில், “அவர் ஏன் பகிரங்கமாகத் தோன்ற வேண்டும்? இந்த குற்றவாளிகளுக்கு இலக்காகவா?” என்று கேள்வி எழுப்பினார்.