தொடரும் மோதல்களால் வெளிநாட்டுத் தொழிலாளர் பணப்பரிமாற்றம் சற்றே சரிவு
அமெரிக்க டொலர் வலுவடைந்ததும் இந்தச் சரிவுக்கு ஒரு காரணம்
தற்போது புதிய கொள்கை மாற்றங்கள் எதுவும் பரிசீலனையில் இல்லை
—————–
வெளிநாட்டுத் தொழிலாளர் பணப்பரிமாற்றத்தில் அண்மையில் சிறிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ள போதிலும், வாகன இறக்குமதி கட்டுப்பாடுகளைத் தளர்த்தும் முடிவை மறுபரிசீலனை செய்யும் உடனடித் திட்டம் எதுவும் அரசாங்கத்திடம் இல்லை என்று வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர் ஆர்.எம். ஜயவர்தன தெரிவித்துள்ளார். தற்போதைய இறக்குமதி அளவுகள் நிர்வகிக்கக்கூடிய மட்டத்திலேயே இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
பிரதி அமைச்சர், மத்திய கிழக்கில் நிலவும் மோதல்கள் காரணமாக வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தொழிலாளர்களிடமிருந்து வரும் பணப்பரிமாற்றம் குறைந்துள்ளதாகக் குறிப்பிட்டார்.
அமெரிக்க டொலர் வலுவடைந்து வருவதால், அதன் மதிப்பு மேலும் உயரும் என்ற எதிர்பார்ப்பில் தொழிலாளர்கள் தமது உழைப்பை அங்கேயே வைத்திருக்க முற்படுவதும் இந்த வீழ்ச்சிக்கு ஒரு காரணம் என்று அவர் விளக்கினார். மேலும், தற்போதைய புவிசார் அரசியல் சூழலால் ஏற்பட்டுள்ள வேலை பாதுகாப்பற்ற நிலை காரணமாகவும் தொழிலாளர்கள் பணத்தை அனுப்புவதை நிறுத்தி வைத்துள்ளதாக அவர் கூறினார்.
இருப்பினும், மத்திய கிழக்கு நெருக்கடியால் பணப்பரிமாற்றத்தில் ஏற்படும் சரிவு பெரிய அளவில் இருக்காது என அரசாங்கம் எதிர்பார்ப்பதாக பிரதி அமைச்சர் தெளிவுபடுத்தினார். அதன்படி, வாகன இறக்குமதி தடையை நீக்கும் கொள்கை முடிவை மீண்டும் மாற்ற வேண்டிய அவசியம் தற்போது இல்லை என்றும், புதிய கொள்கை மாற்றங்கள் எதுவும் தற்போது பரிசீலனையில் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
“கடந்த ஆண்டு, நீண்டகாலமாகத் தேங்கியிருந்த கேள்வி காரணமாக சுமார் 1.8 பில்லியன் டொலர் பெறுமதியான வாகனங்களை இறக்குமதி செய்தோம். இந்த ஆண்டு இறக்குமதி அளவு அந்த அளவிற்கு உயரும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை,” என அவர் தெரிவித்தார்.
இந்த ஆண்டு வாகன இறக்குமதி அளவைசமாளிக்க முடியும் என்றும், வெளிநாட்டு செலாவணி வெளியேற்றம் ஏற்றுக்கொள்ளக்கூடிய வரம்பிற்குள்ளேயே இருக்கும் என்றும் அரசாங்கம் நம்புவதாக ஜயவர்தன வலியுறுத்தினார்.
நிதி அமைச்சும், ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவினால் நியமிக்கப்பட்ட பல குழுக்களும் நாட்டின் வெளிநாட்டுத் துறை செயல்பாடுகளைத் தொடர்ச்சியாகக் கண்காணித்து வருவதாக அவர் மேலும் கூறினார். நிலைமை மோசமடைந்தாலோ அல்லது வெளிப்புற முன்னேற்றங்கள் கொள்கை மாற்றத்தை அவசியப்படுத்தினாலோ, உடனடித் திருத்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இலங்கையில் வெளிநாட்டுத் தொழிலாளர் பணப்பரிமாற்றம் 2024 இல் 6.6 பில்லியன் டொலராக இருந்தது, அது 2025 இல் 8 பில்லியன் டொலராக (22.8% அதிகரிப்பு) பதிவாகியுள்ளது. இந்த ஆண்டு ஜனவரியில் 751 மில்லியன் டொலராகவும், பெப்ரவரியில் 729 மில்லியன் டொலராகவும், மார்ச் மாதத்தில் 814.5 மில்லியன் டொலராகவும் பணப்பரிமாற்றம் வளர்ச்சி கண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது