BBC
ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேல் போர் தொடங்கியதில் இருந்து பெரும்பாலான சுற்றுலாப் பயணிகள் துபாயை விட்டு வெளியேறியுள்ளனர்.
கடந்த ஆண்டு 19.59 மில்லியன் சர்வதேச பார்வையாளர்களை வரவேற்றதன் மூலம் உலகளவில் அதிக மக்கள் பார்வையிடும் நகரங்களில் ஒன்றாக துபாய் விளங்கியது. ஆனால், ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேல் போரானது தற்பொழுது இங்குள்ள பார்வையாளர்களின் எண்ணிக்கையில் பேரழிவுகரமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், உள்ளூர் வணிகங்களையும் கடுமையான போராட்டத்திற்கு தள்ளியுள்ளது.
வழமையாக மாலை வேளைகளில் துபாயின் உணவகங்கள் சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூர்வாசிகளால் நிரம்பி வழிவதுடன், வாடிக்கையாளர்களின் சலசலப்புடன் பரபரப்பாகக் காணப்படும். ஆனால் கடந்த ஒரு மாத காலமாக, அந்த மேசைகளில் பெரும்பாலானவை வெறிச்சோடிக் கிடக்கின்றன.

நடாஷா சிடெரிஸ் (Natasha Sideris) என்பவருக்கு இந்த மாற்றம் திடீரெனவும் அதிர்ச்சியளிப்பதாகவும் ஏற்பட்டுள்ளது. அவர் 2014 ஆம் ஆண்டு துபாயில் தனது முதல் உணவகத்தைத் திறந்தார். கடந்த தசாப்தத்தில் (10 ஆண்டுகளில்), அவரது ‘தாஷாஸ்’ (Tashas) விருந்தோம்பல் குழுமம் நாடு முழுவதும் 14 கிளைகளுடன் விரிவடைந்து, 1,000 க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கியது. ஆனால் ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேல் போரானது தற்போது அவரது வணிகத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
உள்ளூர்வாசிகள் மற்றும் வெளிநாட்டுப் பணியாளர்கள் (Expats) மத்தியில் மிகவும் பிரபலமான தனது உணவகங்களின் வருவாய் 50 சதவீதத்திற்கும் மேல் வீழ்ச்சியடைந்துள்ளதாக சிடெரிஸ் கூறுகிறார். எனினும், சுற்றுலாப் பயணிகளை மட்டுமே பெரிதும் நம்பியிருக்கும் கிளைகள் 70% முதல் 80% வரை மிக மோசமான வீழ்ச்சியைக் கண்டுள்ளன. இந்த நெருக்கடி நிலை காரணமாக, அவரே உட்பட அனைத்து ஊழியர்களின் சம்பளத்தையும் 30% குறைக்க வேண்டிய கட்டாயத்திற்கு அவர் தள்ளப்பட்டுள்ளார்.
“தற்போதைய சூழ்நிலை மிகவும் கொடூரமானது,” என்று அவர் கூறுகிறார். “எனக்கு இரண்டு வழிகளே இருந்தன – ஒன்று 30% ஊழியர்களை வேலையை விட்டு நீக்குவது, அல்லது வேலைகளைக் காப்பாற்ற சம்பளக் குறைப்பு செய்வது. தற்போதைக்கு நான் இரண்டாவது வழியையே தேர்ந்தெடுத்துள்ளேன்” என்கிறார்.
தமது கிளைகளில் பெரும்பாலானவை குடியிருப்புப் பகுதிகளுக்கு அருகிலுள்ள வணிக வளாகங்களில் (Community malls) அமைந்திருப்பதால், உள்ளூர் வாடிக்கையாளர்களின் ஆதரவோடு ஓரளவேனும் தப்பிக்க முடிந்ததாக சிடெரிஸ் மேலும் தெரிவித்தார்.
துபாயின் ஒட்டுமொத்த உணவகத் துறையிலும் இதே கடினமான யதார்த்தமே தற்பொழுது நிலவி வருகிறது.
தனது பெயரை வெளியிட விரும்பாத உணவகம் ஒன்றின் மூத்த நிர்வாகி ஒருவர் கூறுகையில், தங்களது கிளைகளுக்கான வாடிக்கையாளர்களின் வருகை வழமையான அளவிலிருந்து வெறும் 15-20% ஆகக் குறைந்துள்ளதாகவும், இதனால் பாதிக்கும் மேற்பட்ட ஊழியர்களைச் சம்பளமில்லாத விடுப்பில் (Unpaid leave) அனுப்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
“எங்களுக்கு வேறு வழியில்லை. ஏற்கனவே சில கிளைகளைத் தற்காலிகமாக மூடிவிட்டோம், மற்றவை குறைந்தபட்ச ஊழியர்களுடன் இயங்கி வருகின்றன” என்று அவர் கூறுகிறார்.
ஒட்டுமொத்த சுற்றுலாத் துறையிலும் பாதிப்பு

இந்தத் தாக்கம் உணவகங்களுடன் மட்டும் நின்றுவிடவில்லை. ஹோட்டல்கள், பயண முகவர் நிலையங்கள் (Travel agencies), போக்குவரத்து நிறுவனங்கள் மற்றும் விமான நிறுவனங்கள் என ஒட்டுமொத்த சுற்றுலா சுற்றுச்சூழல் அமைப்பே (Tourism ecosystem) இந்த அழுத்தத்தை உணர்கிறது.
கடந்த இரண்டு தசாப்தங்களாக, துபாய் உலகெங்கிலும் உள்ள முன்னணி சுற்றுலா மையங்களில் ஒன்றாகத் தன்னை நிலைநிறுத்திக் கொண்டது. கடந்த ஆண்டு, இந்த எமிரேட் 19.59 மில்லியன் சர்வதேச பார்வையாளர்களை வரவேற்றிருந்தது.
ஆனால் போர் தொடங்கியதில் இருந்து, அந்த வேகம் கடுமையாக முடக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல்களைத் தொடர்ந்து ஈரானின் இராணுவப் பதில் நடவடிக்கையின் போது, ஐக்கிய அரபு அமீரகத்தின் (UAE) பல பகுதிகள் தொடர் தாக்குதல்களுக்கு உள்ளாகின, இதில் துபாயும் ஒரு முக்கிய இலக்காக இருந்தது. விமான நிலையங்கள், துறைமுகங்கள் மற்றும் ஹோட்டல்கள், குடியிருப்பு கட்டிடங்கள் உள்ளிட்ட பொதுமக்களின் பகுதிகளைக் குறிவைத்து 2,400 க்கும் மேற்பட்ட ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் (Drones) ஐக்கிய அரபு அமீரகத்தை நோக்கி ஏவப்பட்டதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
அவற்றில் 90% க்கும் அதிகமானவை நடுவானில் தடுத்து அழிக்கப்பட்டதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
இருப்பினும், சில ஏவுகணைச் சிதறல்கள் துபாயின் முக்கிய குடியிருப்புப் பகுதிகள், ஹோட்டல்கள் மற்றும் விமான நிலையப் பகுதிகளில் விழுந்துள்ளன. புகழ்பெற்ற ‘பாம் ஐலேண்ட்’ (Palm Island) பகுதியில் அமைந்துள்ள ஃபேர்மாண்ட் (Fairmont) ஹோட்டலில் சிதறல்கள் தாக்கிய படங்கள் இணையத்தில் பரவலாகப் பகிரப்பட்டன.
அதிகாரப்பூர்வ தகவல்களின்படி, அமீரகம் முழுவதும் இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளதுடன் 185 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
கடந்த பிப்ரவரி 28 ஆம் தேதி தொடங்கிய இந்த மோதலானது பிராந்தியத்தின் விமானப் போக்குவரத்தை சீர்குலைத்துள்ளது. ஆரம்ப வாரங்களில், பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்கள் தவித்த நிலையில், பின்னர் அவர்கள் சிறப்பு விமானங்கள் மூலம் வெளியேற்றப்பட்டனர்.
நெருக்கடி தொடங்கியதில் இருந்து ஆயிரக்கணக்கான வழக்கமான விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன, இது பிராந்தியத்தின் பரபரப்பான பயண மையங்களில் ஒன்றை முடக்கியுள்ளது. சர்வதேச பயணிகளுக்கான உலகின் அதிபரபரப்பான விமான நிலையமான துபாய் சர்வதேச விமான நிலையம் கடந்த ஆண்டு 95.2 மில்லியன் பயணிகளைக் கையாண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
தற்போது, தேசிய விமானச் சேவையான ‘எமிரேட்ஸ்’ (Emirates) தனது முழு வலையமைப்பையும் மீட்டெடுக்கும் முயற்சியில் குறைந்தளவிலான விமானப் பயணங்களை மட்டுமே இயக்கி வருகிறது.
ஹோட்டல் துறையின் வீழ்ச்சி

சுற்றுலாப் பயணிகள் வெளியேறுவதாலும், புதிய வருகை முற்றிலும் சரிந்துள்ளதாலும், துபாயில் ஹோட்டல் தங்குமிடங்களின் எண்ணிக்கை கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது. போர் வெடித்ததைத் தொடர்ந்த வாரங்களில், துபாய் ஹோட்டல்களின் வாடிக்கையாளர் இருப்பு நிலை (Occupancy levels) வழமையான அளவிலிருந்து 15% முதல் 20% ஆகக் குறைந்துள்ளதாக ‘வேகோ’ (Wego) பயண முன்பதிவு நிறுவனத்தின் தலைமை வணிக அதிகாரி மாமுன் ஹமிடன் தெரிவிக்கிறார்.
உள்ளூர் குடியிருப்பாளர்களை ஈர்ப்பதற்காக ஹோட்டல்கள், குறிப்பாக ஈத் ( Eid) பெருநாட்களின் போது பெரும் தள்ளுபடிகளை வழங்கின. நகரின் பிரீமியம் ஹோட்டல் மையங்களில் ஒன்றான பாம் ஜுமேராவில் (Palm Jumeirah) உள்ள சில ஆடம்பர விடுதிகள் விலையை பாதியாகக் குறைத்துள்ளன.
சில சர்வதேச ஹோட்டல் குழுமங்கள் தங்கள் செயல்பாட்டுச் செலவுகளைக் குறைப்பதற்காக சில கிளைகளைத் தற்காலிகமாக மூடியுள்ளன. மாநாடுகள் மற்றும் வணிக நிகழ்வுகளுக்கான முக்கிய மையமாக விளங்கும் துபாயில், வரவிருக்கும் மாதங்களில் திட்டமிடப்பட்டிருந்த பெரிய கூட்டங்களை அமைப்பாளர்கள் ரத்து செய்துள்ளனர் அல்லது ஒத்திவைத்துள்ளனர்.
“ஏப்ரல் மாதத்திற்குப் பின்னரான முன்பதிவுகளும் ரத்து செய்யப்படுவதைக் காண்கிறோம்,” என்கிறார் மெஜஸ்டிக் ஹோட்டல்ஸின் (Majestic Hotels) சந்தைப்படுத்தல் பணிப்பாளர் வருண் ராஜ்.
புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் அச்சம்
இந்த மந்தநிலை துபாயின் விருந்தோம்பல் துறையின் முதுகெலும்பாக விளங்கும் தெற்காசியா உள்ளிட்ட நாடுகளின் புலம்பெயர்ந்த தொழிலாளர்களைப் பெரிதும் பாதித்துள்ளது.
“இது மீண்டும் கோவிட்-19 காலகட்டத்திற்குத் திரும்பியது போல் உணர்கிறது,” என்கிறார் உயர்தர உணவகம் ஒன்றில் பணிபுரியும் தெற்காசியப் பணியாளர் ஒருவர். “எங்கள் வேலைகளை இழந்து மீண்டும் ஊருக்குத் திரும்ப வேண்டியிருக்குமோ என்ற அச்சம் நிலவுகிறது” என்கிறார்.
ஆக்ஸ்போர்டு எகனாமிக்ஸின் (Oxford Economics) ஒரு பகுதியான ‘டூரிசம் எகனாமிக்ஸ்’ ஆய்வின்படி, இந்த மோதல் நீடித்தால் இவ்வாண்டு மத்திய கிழக்கு பிராந்தியத்திற்கான பயணிகளின் எண்ணிக்கை 23 மில்லியன் முதல் 38 மில்லியன் வரை குறையக்கூடும். இதன் மூலம் 34 பில்லியன் டாலர் முதல் 56 பில்லியன் டாலர் வரையிலான வருவாய் இழப்பு ஏற்படலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.
மீட்பு நடவடிக்கைகள்
இந்த வாரம், துபாய் அரசு சுற்றுலா உள்ளிட்ட வணிகத் துறைகளுக்காக அடுத்த 3 முதல் 6 மாத காலப்பகுதிக்கு 272.26 மில்லியன் டாலர் உதவித் திட்டத்தை அறிவித்துள்ளது. ஹோட்டல்கள் தங்களது விற்பனை சார்ந்த கட்டணங்கள் மற்றும் சுற்றுலா திர்ஹாம் (Tourism dirham) கட்டணங்களைச் செலுத்துவதைத் தள்ளிப்போட அனுமதிக்கப்பட்டுள்ளது.
மோதல்கள் தணிந்தவுடன் சுற்றுலாவை மீண்டும் உயிர்ப்பிப்பதற்கான புதிய விளம்பர பிரச்சாரங்களை மேற்கொள்ளவும் அதிகாரிகள் தயாராகி வருகின்றனர்.
“போர் விரைவில் முடிந்தால் அக்டோபர் மாதத்திற்குள் மீண்டு வர முடியும், ஆனால் இது நீடித்தால் ஒட்டுமொத்த கோடைகாலப் பருவமே கேள்விக்குறியாகிவிடும்” என்று வணிகர்கள் மற்றும் அதிகாரிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.
