இந்திய அரசு ‘பாரத் டெக்ஸ் 2026’ (Bharat Tex 2026) எனும் உலகளாவிய ஜவுளிச் சந்தைக்காட்சியை ஜூலை 14 முதல் 17 வரை நடத்தியது.
இந்தியாவின் வளமான ஜவுளிப் பாரம்பரியம், நவீன கண்டுபிடிப்புகள் மற்றும் உலகளாவிய ஜவுளித் தலைமைத்துவத்திற்கான அடித்தளம் ஆகியவற்றை இது காட்சிப்படுத்தியது. உலகின் மிக இளைய மற்றும் மிகப்பெரிய உலகளாவிய ஜவுளிச் சந்தைக்காட்சியாக உருவெடுத்துள்ள இது, பங்கான்மைகளை உருவாக்கவும் பொருளாதார வளர்ச்சியை முன்னெடுக்கவும் ஒரு தளமாக அமைந்தது.
இந்திய அரசாங்கத்தின் அழைப்பின் பேரில், தொழில்துறை மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி, பாரத் டெக்ஸ் 2026 நிகழ்வில் கலந்துகொள்வதற்காக ஜூலை 15 முதல் 16 வரை புதுடெல்லிக்கு விஜயம் செய்தார்.
டெல்லியில் இருந்த காலத்தில், அமைச்சர் டெல்லிக்கு அருகிலுள்ள சில தொழில்துறை மண்டலங்களைப் பார்வையிட்டார். ஜூலை 17 அன்று, ஹரியானா மாநிலத்தின் சோனிபட், பர்ஹியில் உள்ள ‘ஹரியானா மாநில தொழில்துறை உள்கட்டமைப்பு வளர்ச்சி கழகத்திற்கு’ (HSIIDC) சொந்தமான ‘மெகா உணவுப் பூங்காவிற்கு’ (Mega Food Park) அவர் கள விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.
HSIIDC இன் அரச-தனியார் பங்கான்மை (PPP) குத்தகைதாரரான ‘எம்.ஜே வேர்ஹவுசிங் (தனியார்) லிமிடெட்’ (MJ Warehousing (Pvt) Ltd) மூலம் நடத்தப்படும் இந்த மெகா உணவுப் பூங்காவிற்கான விஜயத்தை ஒருங்கிணைக்கும் பாக்கியத்தை ‘இந்திய-இலங்கை வர்த்தக மற்றும் தொழில்துறை சம்மேளனம்’ (ISCCI) பெற்றது.
இந்த நவீன வசதியின் அரச-தனியார் பங்கான்மை (PPP) மாதிரி குறித்து வருகை தந்த அமைச்சருக்கு விளக்கும் வகையில் விளக்கக்காட்சி (PowerPoint presentation) ஒன்று வழங்கப்பட்டது. தற்போதைய நிலையில், இந்த அமைப்பானது அதிகபட்சமாக மூன்று மணி நேரத்திற்குள் சுமார் 30 மில்லியன் மக்களுக்குச் சேவையாற்றும் திறன் கொண்டது.
தம்புள்ளை பொருளாதார மையத்தில் காய்கறிகள் மற்றும் ஏனைய அழுகக்கூடிய பொருட்களின் வீணடிப்பைக் குறைப்பதற்கு இவ்வாறானதொரு வசதி மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என அமைச்சர் தெரிவித்தார்.
தானியங்கி முறையில் இயங்கும் இந்த பன்முகக் களஞ்சிய வசதியானது, உறைவிக்கப்பட்ட மற்றும் குளிரூட்டப்பட்ட சேமிப்பு (frozen and chilled storage), தனிநபர் விரைவு உறைவித்தல் (IQF), பிளாஸ்ட் ஃப்ரீசிங் (blast freezing), தரம் பிரித்தல், பதப்படுத்துதல், பரிசோதித்தல், விநியோகம், போக்குவரத்து மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட பேக்கேஜிங் உள்ளிட்ட தளவாடச் சேவைகளை வழங்குகிறது.
உறைவிக்கப்பட்ட உணவு உற்பத்தியாளர்கள், பால் உற்பத்தி நிறுவனங்கள், அரிசி மற்றும் தானிய வர்த்தகர்கள், நவீன சில்லறை விற்பனைச் சங்கிலிகள் மற்றும் மூன்றாம் தரப்பு தளவாடங்கள் (3PL) பயன்படுத்துவோர் வரை பலரும் இந்த உணவுப் பூங்காவைப் பயன்படுத்தி வருகின்றனர்.
தனது குறுகிய உரையில், இரு நாடுகளுக்கும் இடையிலான கலாச்சார, நாகரிகத் தொடர்புகளையும், பழங்காலம் தொட்டே தொடரும் வர்த்தக உறவுகளையும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
உலகம் ஒரு கடினமான கட்டத்தைக் கடந்து செல்லும் இந்த வேளையில், இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக உறவுகளை வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார். இலங்கையிலிருந்து ஏற்றுமதியை ஊக்குவிப்பதற்கு, இந்திய மற்றும் இலங்கை தொழில்துறை மற்றும் தளவாட அமைப்புகளுக்கிடையிலான முறையான ஒருங்கிணைப்பு தனது முக்கிய முன்னுரிமைகளில் ஒன்றாகும் என அவர் குறிப்பிட்டார்.
இரு நாடுகளுக்கும் இடையே வரவிருக்கும் ‘பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஒப்பந்தம்’ (ETCA) வர்த்தகம் மற்றும் முதலீட்டை மேலும் உயர்த்தும் என எதிர்பார்ப்பதாக ஹந்துன்னெத்தி கூறினார்.
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி அனுபவத்திலிருந்து கற்றுக்கொள்ள நிறைய விஷயங்கள் உள்ளதாகக் கூறிய ஹந்துன்னெத்தி, இந்திய முதலீட்டாளர்களுக்குச் சிறந்த முதலீட்டு வாய்ப்புகளை வழங்குவதிலும், இருதரப்பு வர்த்தக உறவுகளை உயர் மட்டத்திற்கு கொண்டு செல்வதிலும் ஆக்கபூர்வமான பங்களிப்பை வழங்கத் தயாராக இருப்பதாகத் தெரிவித்தார்.
இந்திய-இலங்கை வர்த்தக மற்றும் தொழில்துறை சம்மேளனத்தின் தலைவர் என்ற முறையில், இந்த விஜயத்தின் போது அமைச்சர் ஹந்துன்னெத்தியுடன் நெருக்கமாக பழகும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது.
அவர் ஒரு கூர்ந்து கவனிப்பவராகவும், அறிவுசார் ஆர்வமிக்கவராகவும், சாதாரண இலங்கை குடிமக்களின் வாழ்க்கையில் நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்த ஆழ்ந்த அர்ப்பணிப்புடன் செயல்படுபவராகவும் இருப்பதை நான் உணர்ந்தேன்.
அரசு-தனியார் பங்கான்மை (PPP) பற்றிப் பேசுகையில், இலங்கையில் PPP உடன் ‘மக்கள்’ (People) என்பதற்கான மற்றொரு ‘P’ சேர்க்கப்பட்டு ‘4P’ ஆக (People Public Private Partnership) செயல்படுவதாக அவர் கூறினார். கொள்கைகளை நடைமுறை முடிவுகளாக மாற்றுவதில் அவர் நம்பிக்கை கொண்டுள்ளார். அத்துடன், எதிர்வரும் 2027 ஜனவரி 14-17 வரை நடைபெறவுள்ள ‘ஸ்ரீலங்கா எக்ஸ்போ’ (Sri Lanka Expo) நிகழ்வின் போது இலங்கைக்கு வருகை தருமாறு இந்திய வர்த்தகர்களுக்கு அழைப்பு விடுத்தார்.
கலந்துரையாடல்களை வெறும் நெறிமுறைசார் பேச்சுக்களுடன் நிறுத்திக் கொள்ளாமல், கைகடக்கக்கூடிய சாதனங்களைப் பயன்படுத்தி ஆன்லைனில் தகவல்களைப் பதிவுசெய்யும் ஜூனியர் நிர்வாகிகள், பூஜ்ஜியத்திற்கு கீழ் (-25°C) வெப்பநிலை கொண்ட அறைகளுக்குள் உணவுப் பெட்டிகளைக் கையாள்பவர்கள், ஃபோர்க்லிஃப்ட் (forklift) இயக்குபவர்கள், பொருட்களை அடுக்கிக் கையாளும் தொழிலாளர்கள் மற்றும் பேரீச்சம்பழம் போன்ற உணவுகளை பதப்படுத்தும் உள்ளூர் தொழிலாளர்களுடன் அவர் நேரடியாகவும் திறந்த மனதுடனும் கலந்துரையாடினார்.
முதலீட்டு வசதிகள், தொழில்துறை பூங்காக்கள், இத்தகைய நவீன வசதிகளுக்கான செலவுகள், உணவுப் பூங்காவின் இயந்திரவியல், மின்சாரம் மற்றும் தகவல் தொழில்நுட்ப அம்சங்கள் உள்ளிட்ட செயல்பாடுகள் குறித்து அவர் கேட்டறிந்தார்.
தொடக்க நிறுவனங்கள் (startups) பற்றிய இந்திய அனுபவம், சிறு தொழில்களின் ஒத்துழைப்பு, திறன் மேம்பாடு, உற்பத்தி தொடர்பான ஊக்குவிப்புகள் மற்றும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனங்களின் பங்கு ஆகியவற்றை அவருடன் பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.
‘சுலபமாக தொழில் செய்தல்’ (Ease of Doing Business) போன்ற முயற்சிகளின் கீழ், ஒற்றைச் சாளர அனுமதி முறைமைகள் (single window clearance), இணையவழி அனுமதிகள், வரி தொடர்பான குறைகளைத் தீர்ப்பதற்கான இணையவழி முறைமைகள், காலக்கெடுவுடன் கூடிய சட்டப்பூர்வ செயல்முறைகள் மற்றும் வெளிப்படையான ஒழுங்குமுறை கட்டமைப்புகளை அறிமுகப்படுத்தியதன் மூலம் நிர்வாகத் தாமதங்களை இந்தியா கணிசமாகக் குறைத்துள்ளது.
மத்திய மற்றும் மாநில அரசாங்கங்களின் ஒருங்கிணைந்த ஆதரவானது ஒழுங்குமுறை விதிமுறைகளைப் பின்பற்றும் அதேவேளையில், முதலீடுகளை எவ்வாறு விரைவுபடுத்தும் என்பதற்கு தொழில்துறை பூங்காக்களும் மெகா உணவுப் பூங்காக்களும் சிறந்த சான்றுகளாகும்.
அனுமதி மற்றும் வரி விதிப்பு நடைமுறைகளை மேலும் எளிமையாக்குதல், திணைக்களங்கள்/அமைச்சச்சுகளுக்கிடையிலான ஒருங்கிணைப்பை வலுப்படுத்துதல், டிஜிட்டல் தளங்களை ஏற்றுக்கொள்ளுதல் மற்றும் தொழில்முனைவோர் மற்றும் தொழில்துறை வளர்ச்சியை ஊக்குவிக்கும் முன்னறிவிக்கக்கூடிய, முதலீட்டாளர்-நட்பு வர்த்தக சூழலை உருவாக்குதல் ஆகியவற்றின் மூலம் இலங்கை மேற்கண்ட நடைமுறைகளிலிருந்து பயனுள்ள பாடங்களைப் பெற முடியும்.
பல்வேறு தொழில்துறை இடங்களுக்குப் பயணம் செய்யவும், தொழில்துறை தலைவர்களுடன் நேரடியாக ஈடபடவும் அவர் காட்டிய விருப்பம், வெறும் பேச்சுக்களுக்குப் பதிலாகச் செயல்பாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்கும் அவரது நடைமுறைச் சாத்தியமான அணுகுமுறையைக் காட்டியது. புறப்படுவதற்கு முன், ஒவ்வொரு ஆதரவு ஊழியர்களுக்கும் நேரில் சென்று நன்றி தெரிவித்தபோது அவரது எளிமை அனைவராலும் கவனிக்கப்பட்டது.
சுனில் ஹந்துன்னெத்தி தேசிய மக்கள் சக்தியின் (NPP) அரசாங்கத்தின் மூத்த தலைவராவார். அவரது நேர்மை, பாராளுமன்றக் கடமையுணர்வு மற்றும் நிறுவன சீர்திருத்தங்களுக்கான அர்ப்பணிப்பு ஆகியவை இலங்கையின் தொழில்துறை மறுமலர்ச்சியின் முதன்மை சிற்பிகளில் ஒருவராக அவரை நிலைநிறுத்தியுள்ளன. அவரது இந்திய விஜயம், இந்தியா-இலங்கை இடையிலான பொருளாதார உறவுகள் மற்றும் தொழில்துறை ஒத்துழைப்பின் வளர்ந்து வரும் மூலோபாய முக்கியத்துவத்தைப் பிரதிபலிப்பதாக அமைந்தது.
இலங்கையின் எதிர்கால தொழில்துறை வளர்ச்சியானது வலுவான பிராந்திய பொருளாதார ஒருங்கிணைப்பு, தனியார் துறையின் அதிகப்படியான பங்கேற்பு மற்றும் நவீன தொழில்நுட்பங்களை ஏற்றுக்கொள்வது ஆகியவற்றிலேயே தங்கியுள்ளது என்பதை அவர் அங்கீகரிக்கிறார். எனவே, அவரது இந்திய விஜயம் ஒரு இராஜதந்திர சந்திப்பிற்கு அப்பாற்பட்டது; இது வேலைவாய்ப்பை உருவாக்கக்கூடிய, கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கக்கூடிய மற்றும் இந்தியா-இலங்கை இடையே நீடித்த பொருளாதார உறவை ஆழப்படுத்தக்கூடிய நீண்டகால தொழில்துறை பங்கான்மைகளை உருவாக்குவதற்கான புதுப்பிக்கப்பட்ட அர்ப்பணிப்பை சமிக்ஞை செய்கிறது. இரு நாடுகளுக்கும் இடையிலான முதலீடு மற்றும் வர்த்தக மேம்பாட்டிற்கு இந்திய-இலங்கை வர்த்தக மற்றும் தொழில்துறை சம்மேளனம் தொடர்ந்து அர்ப்பணிப்புடன் செயல்படும்.