பல தசாப்தங்களாக, இலங்கை தன்னை சூரியன் ஒளிரும் கடற்கரைகள், பண்டைய நகரங்கள் மற்றும் வனவிலங்கு சபாரிகள் மூலமாகவே சந்தைப்படுத்தி வந்துள்ளது. இருப்பினும், உலகளாவிய சுற்றுலாத் துறை ஒரு ஆழமான மாற்றத்திற்கு உள்ளாகி வரும் வேளையில், பார்வைகளைப் ரசிப்பதை விடக் குணப்படுத்துதலுக்கு முன்னுரிமை அளிக்கும் மற்றொரு வாய்ப்பு இலங்கையில் அமைதியாக வலுப்பெற்று வருகிறது. உலகம் முழுவதிலும் உள்ள சுற்றுலாப் பயணிகள், தமது உடல் மற்றும் மன நலனை மேம்படுத்தும் அனுபவங்களுக்காக அதிக பணத்தைச் செலவிடத் தயாராக உள்ளனர். ஆயுர்வேத சிகிச்சைகள் மற்றும் யோகா மையங்கள் முதல் நச்சு நீக்கும் (detox) திட்டங்கள் மற்றும் தியானப் பயிற்சிகள் வரை, உலகளாவிய சுற்றுலாத் துறையில் மிகவும் வேகமாக வளர்ந்து வரும் பிரிவுகளில் ஒன்றாக ‘ஆரோக்கிய சுற்றுலா’ உருவெடுத்துள்ளது. பல நூற்றாண்டுகள் பழமையான பாரம்பரிய மருத்துவ முறைகளைக் கொண்ட இலங்கையைப் பொறுத்தவரை, வெற்றி பெறுவதற்கான அம்சங்கள் உள்ளதா என்பதில் கேள்வி இல்லை; மாறாக அவற்றை உலகளவில் போட்டியிடக்கூடிய சுற்றுலா தயாரிப்பாக மாற்ற முடியுமா என்பதே முக்கிய கேள்வியாகும்.
இதற்கான வாய்ப்பு மிகக் கணிசமானது என்பதை எண்கள் சுட்டிக்காட்டுகின்றன. ‘க்ளோபல் வெல்னஸ் இன்ஸ்டிடியூட்டின்’ (Global Wellness Institute) 2025 ஆம் ஆண்டிற்கான உலகளாவிய ஆரோக்கிய பொருளாதாரக் கண்காணிப்பு அறிக்கையின்படி, உலகளாவிய ஆரோக்கியப் பொருளாதாரம் (global wellness economy) 2024 ஆம் ஆண்டில் 6.8 டிரில்லியன் டொலர்களை எட்டியுள்ளதுடன், முந்தைய ஆண்டை விட 7.9% வளர்ச்சியடைந்துள்ளது. இத்துறை ஆண்டுக்கு 7.6% என்ற விகிதத்தில் தொடர்ந்து விரிவடைந்து, 2029 ஆம் ஆண்டளவில் கிட்டத்தட்ட 9.8 டிரில்லியன் டொலர்களை எட்டும் என அந்நிறுவனம் கணித்துள்ளது. 2024 ஆம் ஆண்டில் உலகளாவிய ஆரோக்கியப் பொருளாதாரத்தில் ஆரோக்கிய சுற்றுலா மட்டுமே 894 பில்லியன் டொலர்களைக் கொண்டிருந்தது.

அதிக மதிப்புமிக்க திறனைக் கொண்ட ஒரு தனித்துவமான துறை (High-Value Potential)
இலங்கையின் சுற்றுலா அதிகாரசபைகள், ஆரோக்கிய சுற்றுலாவை வெறும் துணை ஈர்ப்பாக அல்லாமல் அதற்கும் மேலான ஒன்றாக ஏற்கனவே அங்கீகரிக்கத் தொடங்கியுள்ளன. இலங்கை சுற்றுலா வளர்ச்சி ஆணைக்குழு (SLTDA), 2026 ஆம் ஆண்டிற்கான தனது சுற்றுலா பார்வையில், ஆரோக்கிய சுற்றுலாவை சூழல் சுற்றுலா (eco-tourism), கலாச்சார சுற்றுலா மற்றும் MICE சுற்றுலா ஆகியவற்றுடன் சேர்த்து, வெளிப்புற பொருளாதார அதிர்ச்சிகளுக்கு எதிராக இத்துறையின் மீள்தன்மையை வலுப்படுத்தும் திறன் கொண்ட முன்னுரிமைப் பிரிவாக அடையாளம் கண்டுள்ளது. மேலும், ஆரோக்கிய சுற்றுலா உள்ளிட்ட சுற்றுலாத் தயாரிப்புகளின் பன்முகத்தன்மை, 2026 ஆம் ஆண்டில் 2.5 மில்லியன் முதல் 3 மில்லியன் வரையிலான சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் இலக்கிற்கு ஆதரவளிக்கும் என்றும் ஆணைக்குழு குறிப்பிடுகிறது.
சாதாரண ஓய்வுநேர சுற்றுலாப் பயணிகளைப் போலல்லாமல், ஆரோக்கிய சுற்றுலாப் பயணிகள் பெரும்பாலும் நீண்ட காலம் தங்குவதோடு அதிக அளவில் செலவழிக்கிறார்கள். SLTDA இன் 2025 ஆம் ஆண்டு மதிப்பாய்வு அறிக்கையின்படி, சுகாதாரம் மற்றும் ஆயுர்வேத நோக்கங்களுக்காகப் பயணம் செய்யும் பார்வையாளர்களே எந்தவொரு சுற்றுலாப் பிரிவையும் விட அதிகபட்ச சராசரித் தங்குதலை (14.7 நாட்கள்) பதிவு செய்துள்ளனர். இத்தகைய நீண்டகாலத் தங்குதல்கள் தங்குமிடம், உணவு, சிகிச்சைகள் மற்றும் உள்ளூர் அனுபவங்களுக்கான அதிக செலவினங்களாக மாறுவதால், பொருளாதாரக் கோணத்தில் ஆரோக்கிய சுற்றுலா மிகவும் கவர்ச்சிகரமானதாக அமைகிறது.
இலங்கையின் சுகாதாரம் மற்றும் ஆயுர்வேத சுற்றுலாவிற்கு ஜெர்மனி மிக வலிமையான சந்தையாக விளங்குவதாகவும் (6,363 பார்வையாளர்கள்), அதற்கு அடுத்தபடியாக ஜப்பான் மற்றும் இந்தியா உள்ளதாகவும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. இந்த எண்கள் ஒப்பீட்டளவில் சிறியதாக இருந்தாலும், மூலோபாய ரீதியாக மேம்படுத்தப்பட்டு தரப்படுத்தப்பட்டால், அதிக செலவு செய்யும், நீண்ட காலம் தங்கும் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் கணிசமான திறன் கொண்ட ஒரு துறையாக ஆரோக்கிய சுற்றுலாவை ஆணைக்குழு விவரிக்கிறது.
தேவை அதிகரித்து வருகிறது, ஆனால் விழிப்புணர்வு பின்தங்கியுள்ளது
‘தி மார்னிங் மணி’ (The Morning Money) நாளிதழுக்கு கருத்து தெரிவித்த இலங்கை உள்வரும் சுற்றுலா அமைப்பாளர்கள் சங்கத்தின் (SLAITO) தலைவர் நலின் ஜெயசுந்தர, சர்வதேச பார்வையாளர்களிடையே ஆரோக்கியம் சார்ந்த பயண அனுபவங்களுக்கான கோரிக்கைகள் அதிகரித்து வருவதாக அவதானித்துள்ளார்.
“மக்கள் ஆரோக்கிய அனுபவங்களைக் கோரும் போக்கு அதிகரித்து வருவதை நம்மால் காண முடிகிறது. இது படிப்படியாக உயர்ந்து வருகிறது.”
இருப்பினும், இலங்கையின் மிகப்பெரிய சவால் தேவை அல்ல, மாறாக அதன் விழிப்புணர்வின்மையே (visibility) என்று ஜெயசுந்தர நம்புகிறார்: “விழிப்புணர்வை ஏற்படுத்துவதே முக்கியமானது. ஆரோக்கியப் பிரிவில் இலங்கை என்ன வழங்குகிறது என்பதை சாத்தியமான சுற்றுலாப் பயணிகள் துல்லியமாகப் புரிந்துகொள்வதற்கு நமக்கு அர்ப்பணிக்கப்பட்ட சந்தைப்படுத்தல் பிரச்சாரங்கள் (marketing campaigns) தேவை.”
அதன்படி, தாய்லாந்து, பாலி மற்றும் இந்தியா போன்ற இடங்கள் ஆரோக்கியத்தைச் சுற்றி உலகளாவிய பிராண்டுகளை வெற்றிகரமாக உருவாக்கியுள்ள நிலையில், சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட ஆயுர்வேத பாரம்பரியம் இருந்தபோதிலும், இலங்கையின் சலுகைகள் பெரும்பாலும் சிதறடிக்கப்பட்டதாகவே உள்ளன. சர்வதேச ஆரோக்கிய சுற்றுலா சந்தையுடன் போட்டியிடும் இலங்கையின் திறன், வலுவான சர்வதேச பிராண்டிங் மற்றும் ஒருங்கிணைந்த விளம்பரங்களை எதிர்பார்க்கிறது.
வயதான சுற்றுலாப் பயணிகள் புதிய வாய்ப்புகளை வழங்குகிறார்கள்
இலங்கைக்குச் சாதகமாக அமையக்கூடிய மற்றொரு போக்கு, வயதான சுற்றுலாப் பயணிகளின் விரைவான வளர்ச்சியாகும்.
SLTDA தரவுகளின்படி, 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் 2025 ஆம் ஆண்டில் மொத்த வருகையில் 17.5% ஆக இருந்தனர், இது 2018 உடன்ப்பிடுகையில் மிக வேகமாக வளரும் சுற்றுலாப் புள்ளிவிவரப் பிரிவாக அவர்களை மாற்றியுள்ளது. இந்தப் பிரிவில் உள்ள பலர் சாதாரண இடங்களைப் பார்ப்பதை விட கலாச்சாரம், ஆரோக்கியம், ஆயுர்வேத சிகிச்சைகள் மற்றும் ஓய்வு ஆகியவற்றை மையமாகக் கொண்ட மெதுவான ஓய்வுநாட்களையே விரும்புபவர்களாக உள்ளனர். இந்த பார்வையாளர்கள் நீண்ட காலம் தங்குவதோடு, பல இளைய சுற்றுலாப் பயணிகளை விட அதிக செலவு செய்யும் திறனைக் கொண்டுள்ளனர் என்றும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது. இந்த மக்கட்தொகை மாற்றம் ஆரோக்கிய சுற்றுலாவின் பண்புகளுடன் நெருக்கமாக ஒத்துப்போகிறது, அங்கு வருகை தருபவர்கள் பெரும்பாலும் பல வாரங்கள் சிகிச்சை திட்டங்கள், தியானப் பயிற்சிகள் அல்லது முழுமையான சுகாதார அனுபவங்களை மேற்கொள்கின்றனர்.
சுற்றுலா தயாரிப்பிலிருந்து ஏற்றுமதித் துறைக்கு
பொருளாதார வாய்ப்பு என்பது சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிப்பதற்கு அப்பாலும் நீண்டுள்ளது. ஆரோக்கிய சுற்றுலா என்பது விருந்தோம்பல், பாரம்பரிய மருத்துவம், விவசாயம், கரிம உணவு உற்பத்தி, போக்குவரத்து மற்றும் சிறப்பு சுகாதார சேவைகள் உள்ளிட்ட பல துறைகளில் தேவையை உருவாக்கும் அதே வேளையில் அதிக மதிப்புள்ள செலவினங்களை ஊக்குவிக்கிறது. SLTDA தனது 2025 ஆம் ஆண்டு மதிப்பாய்வு அறிக்கையில் இந்த வாய்ப்பை அடையாளம் கண்டுள்ளது: “சுகாதார/ஆயுர்வேத சுற்றுலா, முழுமையான எண்களின் அடிப்படையில் சிறியதாக இருந்தாலும், ஜெர்மனி (6,363), ஜப்பான் (552), மற்றும் இந்தியா (54) போன்ற குறிப்பிட்ட சந்தைகளில் செறிவைக் காட்டுகிறது.”
ஆரோக்கிய சுற்றுலா தற்போது சிறியதாக இருந்தாலும், அதிக மதிப்புமிக்க திறனைக் கொண்டுள்ளது என்பதை இது உறுதிப்படுத்துகிறது. ஆயுர்வேதத்தில் இலங்கையின் உலகளாவிய நற்பெயரைக் கருத்தில் கொண்டு, அதிக செலவு செய்யும் நீண்டகால பார்வையாளர்களை ஈர்ப்பதற்கு இத்துறையை மூலோபாய ரீதியாக உயர்த்துவதற்கும் தரப்படுத்துவதற்கும் வாய்ப்பு உள்ளது.
இருப்பினும், ஜெயசுந்தர குறிப்பிட்டது போல, தற்போதைய வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள கொள்கை வகுப்பாளர்கள் மேலும் ஒரு படி முன்னெடுத்து வைப்பதே தற்போதைய அவசியமாகும்: “ஆரோக்கியம் சார்ந்த சுற்றுலாவுக்கு எங்களிடம் மிகப்பெரிய கோரிக்கை இல்லை, இருப்பினும் தேவை சீராக உயர்ந்து வருகிறது. ஆரோக்கியப் பிரிவில் இலங்கைக்கு சிறந்த தேவையை உருவாக்குவதே தற்போதைய தேவையாகும்.”
ஆரோக்கிய சுற்றுலா குறித்த தற்போதைய அல்லது திட்டமிடப்பட்ட விளம்பரப் பிரச்சாரங்கள் குறித்து வினவுவதற்காக வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு மற்றும் இலங்கை சுற்றுலா மேம்பாட்டுப் பணியகம் ஆகியவற்றைத் தொடர்பு கொள்ள ‘தி மார்னிங் மணி’ எடுத்த முயற்சிகள் பலனளிக்கவில்லை.
இருப்பினும், இலங்கையின் ஆரோக்கியப் பொருளாதாரம் எளிதில் நகல் எடுக்க முடியாத சொத்துக்களின் மீது கட்டப்பட்டுள்ளது என்பதையும், இந்த நன்மைகளை உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட தொழில்துறையாக மாற்றுவது மிக முக்கியமானது என்பதையும் கவனத்தில் கொள்வது அவசியமாகும்.
