2030 ஆம் ஆண்டிற்குள் டிஜிட்டல் ஏற்றுமதி மூலம் 5 பில்லியன் அமெரிக்க டாலர்களை ஈட்டும் இலக்கை அடைவதற்கு ஆதரவாக, வரி, ஒழுங்குமுறை மற்றும் அரச கொள்முதல் தொடர்பான சீர்திருத்தங்களை மேற்கொள்ள அரசாங்கம் ஆயத்தமாகி வருகிறது.

இலங்கையின் முன்மொழியப்பட்ட டிஜிட்டல் ஏற்றுமதி வீதிவரைபடம் (Digital export roadmap) தொடர்பான தேசிய சரிபார்ப்புப் பட்டறையில் (National validation workshop) நேற்று உரையாற்றிய டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் பொறியாளர் எரங்க வீரரத்ன மற்றும் டிஜிட்டல் பொருளாதாரம் தொடர்பான ஜனாதிபதியின் தலைமை ஆலோசகரும் ‘கோவ்டெக் இலங்கை’ (GovTech Sri Lanka) தலைவருமான கலாநிதி ஹான்ஸ் விஜயசூரிய ஆகியோர் இந்தக் கொள்கை நடவடிக்கைகளை விவரித்தனர்.
தொடக்க நிறுவனங்களுக்கான (Startups) மூலதன நிதி வசதிகளைப் பலப்படுத்துவதற்காக, தேசிய நிதி-நிதிக்கொள்கையின் (Fund-of-funds policy) கீழ் ‘Fund of Funds’ ஒன்றை நிறுவுவதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை இன்னும் சில வாரங்களுக்குள் அரசாங்கம் சமர்ப்பிக்கவுள்ளதாகப் பிரதி அமைச்சர் தெரிவித்தார்.
மூலதன நிதியங்களைப் (Venture capital funds) பாதிக்கும் வரிப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கான சீர்திருத்தங்களை அரசாங்கம் இறுதி செய்து வருவதாகவும், வெளிநாட்டு முதலீடுகளைப் பெறும் தொடக்க நிறுவனங்கள் அந்த நிதியை வெளிநாட்டு விரிவாக்கத்திற்குப் பயன்படுத்த அனுமதிக்கும் வகையில் மூலதன நடமாட்ட விதிகளில் (Capital mobility rules) திருத்தம் செய்யப்படும் என்றும் கலாநிதி விஜயசூரிய குறிப்பிட்டார்.
தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்களது தலைமையகங்களை இலங்கையிலேயே தக்கவைத்துக்கொள்வதை ஊக்குவிக்கும் வகையில் இந்த நடவடிக்கைகள் அமையும் என அவர் சுட்டிக்காட்டினார்.
நிர்வாகத் தடைகளைக் குறைத்து, தொழில்நுட்ப நிறுவனங்கள் இணையவழியில் பதிவு செய்து இயங்குவதற்கு ஏதுவாக ‘மெய்நிகர் சிறப்பு பொருளாதார மண்டலம்’ (Virtual Special Economic Zone) ஒன்றை உருவாக்கவும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
அரசாங்க நிறுவனங்கள் சிறிய உள்ளூர் தொழில்நுட்ப நிறுவனங்களிடமிருந்து விரைவான கொள்முதல் முறைகள் மூலம் தொழில்நுட்பத் தீர்வுகளைக் கொள்முதல் செய்ய வழிவகுக்கும் கொள்முதல் சீர்திருத்தமும் (Procurement reform) மற்றொரு முன்னுரிமையாகும்.
மேலும், ஆராய்ச்சி மற்றும் அறிவுசார் சொத்துரிமைக்கான (Intellectual Property) ஊக்குவிப்புத் திட்டங்களை அறிமுகப்படுத்தவும், அப்ளைடு ஏஐ நிறுவனம் (Applied AI Institution) மற்றும் ஏஐ மையம் (AI Centre of Excellence) ஆகியவற்றை நிறுவவும் திட்டமிட்டுள்ளதாகப் பிரதி அமைச்சர் வீரரத்ன தெரிவித்தார்.
அரசாங்கம் கொள்கைக் கட்டமைப்பை உருவாக்க முடியும் என்றாலும், ஏற்றுமதி இலக்கை அடைவது தொழில்துறை, முதலீட்டாளர்கள் மற்றும் கல்வியாளர்களின் பங்களிப்பிலேயே தங்கியுள்ளது என்றும் அவர் வலியுறுத்தினார்.