இலங்கையின் டிஜிட்டல் துறையின் வளர்ச்சியை உந்தித் தள்ளி, 2030 ஆம் ஆண்டளவில் டிஜிட்டல் ஏற்றுமதியை 5 பில்லியன் அமெரிக்க டொலர்களாக உயர்த்துவதை நோக்கமாகக் கொண்ட மூலோபாயத் திட்டத்தை மதிப்பீடு செய்யவும், உறுதிப்படுத்தவும், பங்குதாரர்களிடையே உடன்பாட்டை எட்டவும் இலக்கு அமைக்கப்பட்ட “5 பில்லியன் அமெரிக்க டொலர் இலக்கை நோக்கிய பாதை” (The Road to US$5 Billion) என்ற தேசியப் பயிலரங்கு ஜூலை 31 அன்று கொழும்பு ‘சின்னமன் லைஃப்’ (Cinnamon Life) விடுதியில் நடைபெற்றது.
உலக வங்கிக்குழுமத்தின் ஆதரவுடன் டிஜிட்டல் பொருளாதார அமைச்சு மற்றும் ‘GovTech Sri Lanka’ ஆகியவற்றால் ஒருங்கிணைக்கப்பட்ட இந்நிகழ்வில், நாட்டின் டிஜிட்டல் துறையைச் சேர்ந்த பலதரப்பட்ட முக்கியப் பங்குதாரர்கள் கலந்துகொண்டனர்.
ஆரம்ப அமர்வில், டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் இரங்க வீரரத்ன, ‘GovTech Sri Lanka’ அமைப்பின் தலைவரும் டிஜிட்டல் பொருளாதாரம் தொடர்பான ஜனாதிபதியின் தலைமை ஆலோசகருமான கலாநிதி ஹான்ஸ் விஜயசூரிய, மற்றும் உலக வங்கிக்குழுமத்தைச் சேர்ந்த சர்வதேச நிதி நிறுவனத்தின் (IFC) முதன்மை நாட்டு அதிகாரி விக்டர் அந்தோணிப்பிள்ளை ஆகியோர் உரையாற்றினர்.
இந்நிகழ்வில் கைத்தொழில் மற்றும் முயற்சியாண்மை பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க, பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி மற்றும் டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் செயலாளர் வருண ஸ்ரீ தனபால ஆகியோருடன் அரச மற்றும் தனியார் துறைகளின் பிரதிநிதிகள் பலரும் கலந்துகொண்டனர்.
உலக வங்கிக்குழுமத்தின் உதவியுடன் ‘KPMG’ நிறுவனத்தின் உள்நாட்டு மற்றும் சர்வதேச ஆலோசகர்களால் தயாரிக்கப்பட்ட ‘இலங்கை தகவல் தொழில்நுட்பத் துறை மதிப்பீட்டு அறிக்கை’ (Sri Lanka Information Technology Industry Assessment Report) மற்றும் பரிந்துரைக்கப்பட்ட ‘ (Strategic Roadmap) என்பன இந்தப் பயிலரங்கில் பங்கேற்பாளர்களுக்குச் சமர்ப்பிக்கப்பட்டன.
இவ்ஆவணங்கள் முன்னதாகவே டிஜிட்டல் பொருளாதார அமைச்சு, ‘GovTech Sri Lanka’ மற்றும் தொழில் வளர்ச்சிக்குழு ஆகியவற்றால் விரிவான மறுஆய்வுக்கும் திருத்தங்களுக்கும் உட்படுத்தப்பட்டிருந்தன. பரிந்துரைக்கப்பட்ட மூலோபாயத் திட்டம் குறித்து தொழில்துறையினரிடமிருந்து விரிவான கருத்துக்களைப் பெறுவதே இந்தப் பயிலரங்கின் முதன்மை நோக்கமாகும்.
இதன்போது பின்வரும் முக்கிய தலைப்புகள் தொடர்பில் கவனம் செலுத்தும் வகையில் பல கருப்பொருள் சார்ந்த குழு அமர்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன:
-
மனித மூலதன வளர்ச்சி மற்றும் எதிர்கால நோக்குடைய டிஜிட்டல் திறன்கள்
-
கண்டுபிடிப்புகள் மற்றும் சுயாதீன தொழில்முறையாளர்களை வலுப்படுத்துதல்
-
உலகளாவிய சந்தைகளுக்கான அணுகல் மற்றும் ஏற்றுமதி வளர்ச்சி
-
நிலையான துறை முன்னேற்றத்திற்குத் தேவையான கொள்கைகள், முதலீடுகள் மற்றும் உள்கட்டமைப்பு
அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள கண்டுபிடிப்புகள் மற்றும் பரிந்துரைகளை மதிப்பீடு செய்வதோடு மட்டுமன்றி, தற்போதைய சவால்கள், புதிய முன்முயற்சிகள், அமலாக்க முன்னுரிமைகள், நிறுவனங்களின் பங்களிப்புகள், செயல்திறன் அளவீடுகள் மற்றும் வீதிவரைபடத்தின் இலக்குகளை அடைவதற்கு ஒவ்வொரு பங்குதாரரும் வழங்கக்கூடிய பங்களிப்புகள் குறித்தும் பங்கேற்பாளர்கள் கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.
உலகளாவிய அரங்கில் இலங்கையின் டிஜிட்டல் துறையின் போட்டித்தன்மையை அதிகரித்தல், வணிக மாதிரிகள் மற்றும் வேலைவாய்ப்புகளில் செயற்கை நுண்ணறிவின் (AI) தாக்கத்தைப் புரிந்துகொள்ளுதல், டிஜிட்டல் தயாரிப்புகள் மற்றும் அறிவுசார் சொத்துக்களைப் பயன்படுத்தும் உயர்மதிப்புள்ள டிஜிட்டல் ஏற்றுமதிகளை ஊக்குவித்தல், மற்றும் இலங்கை கண்டுபிடிப்புகளை சர்வதேச அளவில் விரிவுபடுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை அடையாளம் காணுதல் ஆகியவற்றிற்கு இங்கு சிறப்பு முக்கியத்துவம் அளிக்கப்பட்டன.
இலங்கையின் டிஜிட்டல் துறையின் சர்வதேச போட்டித்தன்மையை மேம்படுத்துவதற்கும், தரமான வேலைவாய்ப்புகள் மற்றும் தொழில்முனைவோரை உருவாக்குவதற்கும், உள்ளூரில் உருவாக்கப்படும் டிஜிட்டல் தயாரிப்புகள் மற்றும் சேவைகளின் உலகளாவிய இருப்பை விரிவுபடுத்துவதற்கும், இலங்கையை பிராந்தியத்தில் ஒரு முன்னணி டிஜிட்டல் பொருளாதாரமாக நிலைநிறுத்துவதற்கும் ஒரு தகவல் சார்ந்த மற்றும் நடைமுறை வழிகாட்டியாக இந்த மூலோபாய வீதிவரைபடம் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பயிலரங்கின் போது தொழில்துறை நிபுணர்கள் மற்றும் ஏனைய பங்குதாரர்களால் வழங்கப்பட்ட கருத்துக்கள் மற்றும் பரிந்துரைகளை உள்வாங்கி இந்த வீதிவரைபடம் மேலும் செம்மைப்படுத்தப்படும். இறுதி செய்யப்படும் ஆவணத்தில் முன்னுரிமை நடவடிக்கைகள், பொறுப்பான நிறுவனங்கள், அமலாக்க காலக்கெடு மற்றும் அளவிடக்கூடிய செயல்திறன் குறிகாட்டிகள் அடங்கிய ஒரு விரிவான செயல் திட்டம் சேர்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இத்தேசிய பயிலரங்கில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைத் துறைகளின் முன்னணி நிறுவனங்கள், தொழில்முறை அமைப்புகள், கண்டுபிடிப்பு அடிப்படையிலான தொழில்முனைவோர்கள், தொடக்க நிறுவனங்கள் (Startups), முதலீட்டாளர்கள், சுயாதீன தொழில்முறையாளர்கள், கல்வி நிறுவனங்கள், அரச நிறுவனங்கள், புலம்பெயர் இலங்கையர்கள் மற்றும் சர்வதேச மேம்பாட்டு அமைப்புகளின் பிரதிநிதிகள் பலர் கலந்துகொண்டனர்.