கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் ஆயுதங்களுடன் கைதுசெய்யப்பட்ட நபருக்கும் தனக்கும் தொடர்புள்ளதாக வெளியாகும் தகவல்களை எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்சன ராஜகருண நிராகரித்துள்ளார்.
அரசாங்க ஊடகத்துடன் தொடர்புடைய சமூக ஊடகமொன்றிலும் வேறு பல சமூக ஊடகங்களிலும் கைதுசெய்யப்பட்ட நபருக்கும் தனக்கும் தொடர்பிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளதை சுட்டிக்காட்டியுள்ள எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் மேலும் தெரிவித்துள்ளதாவது.
எனது குடும்பத்தில் நான் மாத்திரமே ஆண் ஏனையவர்கள் சகோதரிகள் .
குறிப்பிட்ட ஒரு குடும்பபெயரை கொண்ட ஒருவர் இழைத்த குற்றம் அதேகுடும்பபெயரை கொண்ட அனைவருக்கும் உரித்தாக்கப்படவேண்டுமா?
கடந்த 11 வருடங்களாக நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளபோதிலும் நாடாளுமன்ற உறுப்பினருக்கான துப்பாக்கியை நான் ஒருபோதும் பெற்றுக்கொண்டதில்லை.எனது தந்தையும் மறைந்த நாடாளுமன்ற உறுப்பினருமான சந்திர ராஜகருணவும் துப்பாக்கியை பயன்படுத்தியதில்லை.அரசியல் ரீதியில் அவப்பெயரை ஏற்படுத்துவதற்காக சில ஊடகங்கள் என்னுடைய பெயரை அந்த நபரின் பெயருடன் தொடர்புபடுத்தப்பார்க்கின்றன.குறிப்பிட்ட ஊடகங்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுப்பது குறித்து ஆராயுமாறு எனது சட்டத்தரணிகளை கேட்டுக்கொண்டுள்ளேன்.
அரசாங்கம் கடும் அழுத்தங்கள் விமர்சனங்களில் இருந்து மக்களின் கவனத்தை திசைதிருப்புவதற்காக இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றது என எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.
(ரி)