இலங்கை கடற்பரப்பிற்கு வெளியே நங்கூரமிட்டிருந்த ஈரானிய கப்பல் பணியாளர்கள் 40 பேர் உடல்நிலை பாதிக்கப்பட்டதை தொடர்ந்து அவர்களுக்கு இலங்கை மருத்துவசிகிச்சையை வழங்கிய பின்னர் ஈரானிற்கு அனுப்பிவைத்துள்ளது.
உடல்நிலை பாதிக்கப்பட்ட 40 பேருக்கு மருத்துவசிகிச்சையை வழங்கிய பின்னர் அவர்களை தங்கள் நாட்டிற்கு இலங்கை அனுப்பிவைத்துள்ளதை வெளிவிவகார அமைச்சர் விஜிதஹேரத் உறுதி செய்துள்ளார்.
கப்பல்களில் நோய்வாய்ப்பட்ட 40 பேரை மீட்டு அவர்களுக்கு மருத்துவசிகிச்சையை வழங்கிய பின்னர் சனிக்கிழமையே ஈரானிற்கு அனுப்பிவைத்தோம் என அவர் தெரிவித்துள்ளார்.
காலி கடற்பரப்பிலிருந்து 24 கடல்மைல் தொலைவில் காணப்பட்ட கப்பல்களில் இருந்து அவசர உதவி அழைப்பு விடுக்கப்பட்டது என தெரிவித்துள்ள அமைச்சர் காலி துறைமுகத்தின் ஊடாக இலங்கை அதிகாரிகள் அவர்களை இலங்கைக்குள் கொண்டுவந்தனர், ஈரானிய தூதரகத்தின் ஒத்துழைப்புடன் அவர்கள் ஈரானிற்கு அனுப்பிவைக்கப்பட்டனர் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மருத்துவசிகிச்சை தேவைப்பட்டவர்களை காப்பாற்றி சிகிச்சை வழங்கி அவர்களை தங்கள் நாட்டிற்கு அனுப்பிவைத்ததன் மூலம் இலங்கை தனது மனிதாபிமான கடமையை நிறைவேற்றியுள்ளது என வெளிவிவகார அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.