ஐக்கிய நாடுகள் கடல்சட்ட உடன்படிக்கையின் கீழ் ஈரானை சேர்ந்த 40 கப்பல்பணியாளர்களுக்கு மருத்துவ சிகிச்சையை வழங்கிய பின்னர் அவர்களை அவர்களது நாட்டிற்கு இலங்கை திருப்பிஅனுப்பியமை போன்ற நடவடிக்கைகளால் இலங்கை தடைகளை எதிர்கொள்ளும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளதாக அமெரிக்கா குறிப்பிட்டுள்ளது.
ஆங்கில ஊடகமொன்றின் மின்னஞ்சல் கேள்விக்கு பதிலளித்துள்ள அமெரிக்க இராஜாங்க திணைக்கள பேச்சாளர் அமெரிக்காவினால் தடை விதிக்கப்பட்டுள்ள கப்பல்களுக்கு எரிபொருள் அத்தியாவசிய பொருட்கள் பராமரிப்பு சேவைகளை வழங்குவது அல்லது பணியாளர்களை மாற்றுவதற்கான வசதிகளை செய்து கொடுப்பது போன்றவற்றில் ஈடுபட்டால் அந்த நாடு அமெரிக்காவின் தடையை எதிர்கொள்ளும் அபாயத்தை எதிர்கொள்கின்றது என குறிப்பிட்டுள்ளார்.
ஈரானிய ஆட்சியின் தீங்கிழைக்கும் நடவடிக்கைகளுக்கு தேவையான நிதி மற்றும் ஆதரவை வழங்கும், அவர்களின் இராணுவ மற்றும் ஆயுதஅதிகரிப்பு நடவடிக்கைகள் கொள்வனவு நடவடிக்கைகள் தீங்கிழைக்கும் இணையச்செயற்பாடுகள் மற்றும் சட்டவிரோதமான எண்ணெய் வர்த்தகம் ஆகியவற்றை அமெரிக்கா தொடர்ந்தும் சீர்குலைக்கும்,அம்பலப்படுத்தும், முடக்கும்,என தெரிவித்துள்ள அமெரிக்க இராஜாங்க திணைக்கள பேச்சாளர் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களை பொறுப்புககூறவைப்பதில் சர்வதேச சமூகம் எங்களுடன் இணையவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இலங்கை கடற்பரப்பிற்கு வெளியே – இலங்கையின் விசேட பொருளாதார வலயத்தில் நங்கூரமிட்டுள்ள ஈரானிய கப்பல்களின் 40 பணியாளர்கள் சமீபத்தில் உடல்நலம் பாதிக்கப்பட்டதை தொடர்ந்து இலங்கை அவர்களுக்கு மருத்துவ சிகிச்சையை வழங்கியதுடன் அவர்களை விமானம் மூலம் ஈரானிற்கு திருப்பியனுப்பியிருந்தது.