முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தான் வெளிநாடு செல்வதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கவேண்டும் என விடுத்துள்ள வேண்டுகோள் குறித்த தனது தீர்மானத்தை நவம்பர் 25ம் திகதி நீதிமன்றம் அறிவிக்கவுள்ளது.
கொழும்பு கோட்டை நீதவான் இதனை அறிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் கோட்டாபய ராஜபக்ச வெளிநாடு செல்வதற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கவேண்டும் என அவர் விடுத்த வேண்டுகோள் குறித்த தீர்மானத்தை 25ம் திகதி அறிவிக்கவுள்ளதாக நீதவான் குறிப்பிட்டுள்ளார்.
வெளிநாட்டுக்கு சென்றால் கோட்டாபய ராஜபக்ச மீண்டும் நாடு திரும்புவாரா என்பது குறித்த கரிசனைகள் காணப்படுவதாக குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.
எனினும் கோட்டாபய நாடு திரும்புவதை உறுதிப்படுத்துவதற்கான சட்டநடவடிக்கைகளை நடைமுறைப்படுத்தினால் அவருக்கு விதிக்கப்பட்டுள்ள பயணத்தடையை நீக்குவது குறித்து ஆட்சேபணை தெரிவிக்கப்போவதில்லை என குறிப்பிட்டுள்ள குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் உரிய சட்ட ஏற்பாடுகள் இல்லாவிட்டால் கோட்டாபய வெளிநாடு செல்வதற்கு அனுமதி வழங்குவதை எதிர்க்கப்போவதாக தெரிவித்துள்ளனர்.
இதன்பின்னர் தனது கருத்தை தெரிவித்த நீதவான் இந்த வழக்கில் கோட்டாபய சந்தேகநபராக குறிப்பிடப்படாததால் அவருக்கு விதி;க்கப்பட்ட பயணதடையை நீக்கிய பின்னர் அவர் வெளிநாடு சென்றால் நாடு திரும்பவேண்டும் என உத்தரவிடும் அதிகாரம் நீதிமன்றத்திற்கு இல்லை என குறிப்பிட்டார்.