சில ஊடக நிறுவனங்கள் “அழிவுகரமான அரசியல் முகாமுடன்” இணைந்து செயற்படுவதாகத் தெரிவித்துள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, தமது அரசாங்கம் வீழ்ச்சியடைவதற்கான எந்தவொரு அறிகுறியும் இல்லாத காரணத்தினால், முன்னர் தனித்தனியாகச் செயற்பட்ட எதிர்க்கட்சிக் குழுக்கள் தற்போது ஒன்றிணைய முயற்சிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
37ஆவது ‘ – கார்த்திகை வீரர்கள்) நினைவேந்தல் நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி, இலங்கை அரசியல் இரண்டு தனித்துவமான அரசியல் முகாம்களுக்கு இடையே பிளவுபட்டு வருவதாகவும், சில ஊடக நிறுவனங்களும் இதில் பக்கச்சார்பாகச் செயற்படுவதாகவும் கூறினார்.
“சில ஊடக நிறுவனங்களும் இந்த அடிப்படையில் பிளவுபட்டுள்ளன. அந்த அழிவுகரமான அரசியல் முகாமைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஊடக நிறுவனங்கள் உள்ளன என்பதை நாம் அறிவோம்” என அவர் தெரிவித்தார்.
ஊழல் மற்றும் காலாவதியான நடைமுறைகளில் வேரூன்றிய பழைய அரசியல் கட்டமைப்பு என்றும், நாட்டை மாற்றியமைக்க முற்படும் புதிய அரசியல் இயக்கம் என்றும் இந்த இரண்டு முகாம்களையும் ஜனாதிபதி விவரித்தார்.
எதிர்க்கட்சிகள் குறித்துக் குறிப்பிட்ட ஜனாதிபதி திசாநாயக்க, 2024 ஜனாதிபதித் தேர்தலில் தனித்தனியாகப் போட்டியிட்ட அரசியல் குழுக்கள் தற்போது ஒன்றிணைந்து செயற்பட வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளதாகக் கூறினார்.
“அரசாங்கம் வீழ்ச்சியடையும் எனச் சிலர் காத்திருந்தார்கள், ஆனால் அது வீழ்ச்சியடைவதற்கான எந்த அறிகுறியும் இல்லை; அப்படி எப்போது நடக்கும் என்பதற்கான எந்தச் சமிக்ஞையும் இல்லை” என அவர் தெரிவித்தார்.
தமது அரசியல் இயக்கம் அதிகாரத்தில் உறுதியாக நிலைநிறுத்தப்பட்டுள்ளதையும், மோசடி மற்றும் ஊழல்களில் ஈடுபட்டவர்களுக்கு இனிப் பாதுகாப்புக் கிடைக்காது என்பதையும் எதிர்க்கட்சிக் குழுக்கள் உணர்ந்து கொண்டதாலேயே அவை ஒன்றிணைய முயற்சிப்பதாக ஜனாதிபதி குற்றம் சாட்டினார்.
மேலும், அரசியல் எதிரிகள் பலவீனமடைந்து விரக்தியடைந்துள்ளதாகக் கூறிய அவர், அவர்களின் விரக்தி சுயகட்டுப்பாட்டை இழப்பதற்கும், பொருத்தமற்ற செயல்களில் ஈடுபடுவதற்கும் வழிவகுக்கலாம் என எச்சரித்தார். எவ்வாறாயினும், அரசாங்கம் இத்தகைய சவால்களை முறியடித்துத் தனது அரசியல் வேலைத்திட்டத்தைத் தொடரும் என அவர் நம்பிக்கை வெளியிட்டார்.
ஊழல், நல்லாட்சி, தேசிய ஒற்றுமை மற்றும் தொழில்நுட்பப் பயன்பாடு ஆகிய விடயங்களில் அரசாங்கத்திற்கும் எதிர்க்கட்சிக்கும் இடையிலான கூர்மையான வேறுபாட்டையும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
“அவர்கள் சடங்குகள், மந்திர தந்திரங்கள் மற்றும் மூடநம்பிக்கைகளை நாடுகிறார்கள். நவீன தொழில்நுட்பம், விஞ்ஞானம் மற்றும் அறிவின் அடிப்படையில் இந்த நாட்டைக் கட்டியெழுப்ப நாம் முயல்கிறோம்” என அவர் கூறினார்.
இதேவேளை, தமது நிர்வாகம் மக்களுக்குப் பொறுப்புக்கூற வேண்டிய கடப்பாட்டைக் கொண்டுள்ளது என்றும், இன்றைய பிரச்சினைகளுக்கு முன்னைய அரசாங்கங்களை இனியும் குறைகூறிக்கொண்டிருக்க முடியாது என்றும் ஜனாதிபதி திசாநாயக்க வலியுறுத்தினார்.
“ஏதோவொன்று கடந்த காலத்தைச் சேர்ந்தது என்றோ, முன்னைய நிர்வாகங்களிடமிருந்து மரபுரிமையாகப் பெறப்பட்டது என்றோ அல்லது எமக்கு முன்னர் இருந்தவர்கள் அதனைச் செய்யத் தவறிவிட்டார்கள் என்றோ கூறி நாம் தப்பிக்க முடியாது” என அவர் தெரிவித்தார்.
அதிகாரத்தில் உள்ளவர்களைக் கேள்வி கேட்பதற்கும், விமர்சிப்பதற்கும், எதிர்ப்புத் தெரிவிப்பதற்கும் பிரஜைகளுக்கு உரிமை உண்டு என்பதை வலியுறுத்திய அவர், ஆட்சியாளர்களுக்கும் மக்களுக்கும் இடையிலான அச்சம் மற்றும் அடிபணிதல் என்ற பாரம்பரிய உறவுக்குப் பதிலாக, பொறுப்புக்கூறலை அடிப்படையாகக் கொண்ட உறவை உருவாக்கத் தமது அரசாங்கம் விரும்புவதாகவும் குறிப்பிட்டார்.