இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட மூன்றாவது பெரிய மனிதப் புதைகுழி தொடர்பான விசாரணையை மீண்டும் திறக்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கையை இலங்கையின் மேல் நீதிமன்றம் பரிசீலிக்கத் தொடங்கியுள்ளது. 11 ஆண்டுகளாக இந்த விசாரணை இடைநிறுத்தப்பட்டிருந்தது.
நீதிமன்ற நடவடிக்கைகள் ஆரம்பமாவதற்கு முன்னதாக, புதன்கிழமை (11) அதிகாலை மாத்தளை நகரில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் அமைதிப் போராட்டம் ஒன்று நடத்தப்பட்டது. காணாமல் ஆக்கப்பட்டோர் குடும்பங்களின் ஒன்றியத்தின் (FoD) தலைவரும் மனித உரிமை ஆர்வலருமான பிரிட்டோ பெர்னாண்டோ தலைமையில் பேரணியைத் தொடர்ந்து இந்த அமைதிப் போராட்டம் நடைபெற்றது.
2012ஆம் ஆண்டின் பிற்பகுதியில் மாத்தளை பொது மருத்துவமனை வளாகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழி தொடர்பான வழக்கு 2015ஆம் ஆண்டு முதல் மூடப்பட்டிருந்த நிலையில், 88-89 காலப்பகுதியில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் அதனை மீண்டும் திறக்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கையை 2026 ஜூலை 16 அன்று மாத்தளை நீதவான் ஹர்ஷன தனுஷ்க ரத்நாயக்க நிராகரித்திருந்தார். முன்னைய நீதவானால் வழங்கப்பட்ட தீர்ப்பை அதே நீதிமன்றத்தால் மீளாய்வு செய்ய முடியாது என்பதால், சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு அமைய இவ்விடயம் மேல் நீதிமன்றத்திற்குக் கொண்டு செல்லப்பட வேண்டும் என அவர் தெரிவித்திருந்தார்.
இதற்கமைய, மனுதாரர்கள் சார்பில் மேல் நீதிமன்றத்தில் ஆஜரான சட்டத்தரணி ஹிமாலி குலரத்ன, பாதிக்கப்பட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் 18 உறவினர்களைக் கொண்ட பட்டியலில் எதிர்காலத்தில் மேலும் பல பெயர்கள் சேர்க்கப்படலாம் என நவம்பர் 11 அன்று மாத்தளை மேல் நீதிமன்ற நீதிபதி நலின் ஹேவாவசம் முன்னிலையில் தெரிவித்தார்.
அமைதிப் போராட்டத்திலும் நீதிமன்றத்திலும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் பெருமளவில் கலந்துகொண்டதாகப் பிராந்திய செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
80களின் பிற்பகுதியில் தென்னிலங்கையில் இடம்பெற்ற இளைஞர் ஆயுதக் கிளர்ச்சியின் போது கைது செய்யப்பட்ட அல்லது கடத்தப்பட்ட பின்னர் காணாமல் போன தமது அன்புக்குரியவர்களை இவர்கள் தேடி வருகின்றனர். தற்போதைய தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கத்தின் பிரதான கட்சியான மக்கள் விடுதலை முன்னணியினால் (JVP) அந்தக் கிளர்ச்சி முன்னெடுக்கப்பட்டது.
மாத்தளை மனிதப் புதைகுழியில் கண்டெடுக்கப்பட்ட மனித எச்சங்கள் தொடர்பாக மூன்று அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டிருந்த போதிலும், மூன்றாவது அறிக்கையை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு 2015ஆம் ஆண்டில் இந்த வழக்கு மூடப்பட்ட விடயத்தைத் தாம் மேல் நீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டு வந்ததாக மனுதாரர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணி குலரத்ன ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார்.
“இலங்கை சட்ட வைத்திய அதிகாரி தனது கவனத்தை ஈர்த்த சில விடயங்களைச் சமர்ப்பித்திருந்தார். பின்னர் தொல்பொருள் ஆய்வாளர் ராஜ் சோமதேவ ஒரு அறிக்கையைச் சமர்ப்பித்தார்; அதேவேளை ‘பீட்டா அனலிட்டிக்’ (Beta Analytic) நிறுவனம் கார்பன் காலக்கணிப்புச் சோதனையை மேற்கொண்டது. மூன்றாவது அவதானிப்பின் அடிப்படையில், 1950ஆம் ஆண்டளவில் ஏற்பட்ட தொற்றுநோயின் விளைவாகவே அந்த எச்சங்கள் உருவானதாகக் கூறி வழக்கு மூடப்பட்டது. அந்தக் கருத்து ஏற்றுக்கொள்ளப்பட்டது. எனவே, மூன்று வெவ்வேறு வகையான விடயங்கள் முன்வைக்கப்பட்டிருந்த போதிலும், மூன்றாவது மட்டுமே கருத்தில் கொள்ளப்பட்டது என்பதே எனது வாதமாக இருந்தது. முதலாவது மற்றும் இரண்டாவது விடயங்கள் கவனத்தில் கொள்ளப்படவில்லை என்பதை நான் பிரதானமாகச் சுட்டிக்காட்டினேன்” என அவர் கூறினார்.
2013ஆம் ஆண்டில் மாத்தளை மருத்துவமனைக்கு அருகிலுள்ள இடத்திலிருந்து 155 மனித எலும்புக்கூடுகள் தோண்டி எடுக்கப்பட்ட பின்னர், சட்ட வைத்திய அதிகாரி வைத்தியர் அஜித் ஜயசேன மற்றும் தொல்பொருள் பேராசிரியர் ராஜ் சோமதேவ ஆகியோரால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கைகளில், அந்த எலும்புக்கூடுகள் 1986-1990 தென்னிலங்கைக் கிளர்ச்சிக் காலத்திற்குரியவை என முடிவு செய்யப்பட்டிருந்தது.
எவ்வாறாயினும், அமெரிக்காவின் புளோரிடாவிலுள்ள மியாமியைத் தளமாகக் கொண்ட ‘பீட்டா அனலிட்டிக்’ நிறுவனத்தால் வழங்கப்பட்டதாகக் கூறிப் பொலிஸாரால் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில், அங்கு கண்டெடுக்கப்பட்ட மனித எலும்புக்கூடுகள் 1950ஆம் ஆண்டிற்கு முற்பட்ட காலத்திற்குரியவை என முடிவு செய்யப்பட்டிருந்தது.
மனிதப் புதைகுழியிலிருந்து தோண்டி எடுக்கப்பட்ட மனித எலும்புக்கூடுகளுக்கு மரபணு (DNA) பரிசோதனைகளை நடத்துமாறு மாத்தளை மேல் நீதிமன்றத்திடம் கோரியுள்ளதாகவும், இக்கோரிக்கை முன்னர் நீதவான் நீதிமன்றத்திலும் முன்வைக்கப்பட்டதாகவும் சட்டத்தரணி குலரத்ன செய்தியாளர்களிடம் மேலும் தெரிவித்தார்.
“இந்த மரபணுப் பரிசோதனைகள் உடனடியாக நடத்தப்படாவிட்டால், அதன் முடிவுகள் பாதிக்கப்படக்கூடும் என நான் நீதவான் நீதிமன்றத்திற்குத் தெரிவித்திருந்தேன்” என அவர் கூறினார்.
மனுதாரர்கள் சார்பில் 2027 ஜனவரி 13 அன்று மேலதிக வாய்மூல சமர்ப்பணங்களை முன்வைப்பதற்குச் சட்டத்தரணி குலரத்னவிற்கு அவகாசம் வழங்கிய மாத்தளை மேல் நீதிமன்ற நீதிபதி நலின் ஹேவாவசம், வழக்கை மீண்டும் திறக்குமாறு கோருவதற்கு முன்னர் சம்பந்தப்பட்ட தரப்பினர் இவ்வளவு காலம் மௌனமாக இருந்தது ஏன் எனக் கேள்வி எழுப்பினார்.
“சூழ்நிலைகளைப் பொறுத்துப் பல மாற்றங்கள் ஏற்படக்கூடும் என நான் கூறினேன். அவர்களின் நிதி நிலைமைகள், பொருளாதாரக் கஷ்டங்கள் மற்றும் எவ்விதப் பலனுமின்றித் தொடர்ச்சியாக முறைப்பாடுகளைப் பதிவு செய்ததால் ஏற்பட்ட ஏமாற்றம் மற்றும் நம்பிக்கையின்மை ஆகியவை இதில் அடங்கும். அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் உயிரிழந்துவிட்டனர், மேலும் எஞ்சியிருப்பவர்களை அவர்கள் பராமரிக்க வேண்டியிருந்தது” என அவர் மேலும் தெரிவித்தார்.
மாத்தளை மனிதப் புதைகுழி நீதிமன்ற வழக்கானது பெருமளவில் ஆவணங்களை அடிப்படையாகக் கொண்டது என்பதால், ஆவணங்களின் மூலப் பிரதிகளைத் தாம் ஆராய விரும்புவதாக நீதிபதி நலின் ஹேவாவசம் திறந்த நீதிமன்றத்தில் மேலும் குறிப்பிட்டார்.
மக்கள் விடுதலை முன்னணியின் கிளர்ச்சியின் போது மாத்தளை மாவட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் காணாமல் போயினர்; அக்காலப்பகுதியில் கோட்டாபய ராஜபக்ச அம்மாவட்டத்தின் ஒட்டுமொத்தப் பொறுப்பிலுள்ள மாவட்ட இராணுவ ஒருங்கிணைப்பு அதிகாரியாகப் பணியாற்றினார். அவர் தனது சகோதரர் மஹிந்த ராஜபக்சவின் நிர்வாகத்தில் பாதுகாப்புச் செயலாளராகப் பதவி வகித்ததுடன், 2022 ‘அரகலய’ மக்கள் எழுச்சியால் பதவியிலிருந்து அகற்றப்படும் வரை இரண்டு ஆண்டுகள் ஜனாதிபதியாகவும் பதவி வகித்தார்.
1989ஆம் ஆண்டில் அவரது கட்டளையின் கீழ் இருந்த அதிகாரிகளின் காவலில் வைக்கப்பட்டிருந்த 700க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாக ‘இலங்கை ஜனநாயகத்திற்கான ஊடகவியலாளர்கள்’ (JDS) மற்றும் ‘சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம்’ (ITJP) ஆகிய அமைப்புகளால் 2022ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட புலனாய்வு அறிக்கையில் வெளிப்படுத்தப்பட்டிருந்தது.

அந்த அறிக்கையின் அடிப்படையில் 2023ஆம் ஆண்டில் இலங்கை அரசாங்கத்திற்கு அனுப்பிய கடிதத்தில், குற்றங்களை இழைத்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள கோட்டாபய ராஜபக்ச மற்றும் அவரது சகாக்களைப் பொறுப்புக்கூற வைப்பதற்காக அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் குறித்த தகவல்களை ஐ.நா. நிபுணர் குழு கோரியிருந்தது. “இழைக்கப்பட்ட மீறல்களின் பிரதான குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்ட அரச அதிகாரிகளுக்கு எதிராகப் பொறுப்புக்கூறல் மற்றும் நீதித்துறை நடவடிக்கை முற்றாக இல்லாததையும் பெறப்பட்ட குற்றச்சாட்டுகள் குறிப்பிடுகின்றன” என அந்நிபுணர்கள் தெரிவித்திருந்தனர். எவ்வாறாயினும், இதுவரை எவ்வித பதிலும் வழங்கப்படவில்லை.