சாட்டி மாவீரர் துயிலும் இல்லம் அமைந்துள்ள காணியின் உரிமையாளர்கள், குறித்த காணியில் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்துவதற்குத் தடை விதிக்கக் கோரி ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததைத் தொடர்ந்து, பொலிஸாரால் இன்றைய தினம்(17.11.26 செவ்வாய்க்கிழமை) ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.
குறித்த வழக்கில் முன்னாள் மேல் நீதிமன்ற நீதிபதி ‘மாணிக்கவாசகர் இளஞ்செழியன்’ அவர்களின் சகோதரர் மாணிக்கவாசகர் இளம்பிறையன், டக்ளஸ் பிரபாகரன் மற்றும் சுவாமிநாதன் பிரகலாதன் ஆகியோரின் பெயர்கள் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டிருந்தன.
ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்ற நீதவான் அனிபா ராஜீவ் முன்னிலையில் இவ்வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது எதிர்த் தரப்பு வாதிகளில் ஒருவரான சுவாமிநாதன் பிரகலாதன் சார்பில் சட்டத்தரணிகளான பெலினா, அஜித் சங்கர், கௌரிதரன் மற்றும் ஸ்ரீராகவன் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.
இதன்போது, பொலிஸார் தடை உத்தரவு கோரி வழக்குத் தாக்கல் செய்த நடைமுறை மற்றும் அதற்குப் பயன்படுத்தப்பட்ட சட்டப் பிரிவுகளில் காணப்படும் குறைபாடுகள் தொடர்பில் உரிய ஆதாரங்களுடன் சட்டத்தரணிகள் தமது ஆட்சேபனைகளையும் வாதங்களையும் முன்வைத்தனர்.
சட்டத்தரணிகளால் முன்வைக்கப்பட்ட விடயங்களைப் பரிசீலித்த நீதவான், குறித்த குறைபாடுகளைப் பொலிஸாருக்கு எடுத்துக்காட்டியதுடன், வழக்கை எதிர்வரும் 20.11.2026ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்