கொழும்பு:
ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் உரைகளைத் தாம் இன்றும் ரசிப்பதாகவும், வறுமையான குடும்பப் பின்னணியிலிருந்து கஷ்டப்பட்டுப் படித்து நாட்டின் ஜனாதிபதியாக உயர்ந்த அவரைத் தனிப்பட்ட ரீதியில் விரும்புவதாகவும் தெரிவித்துள்ள இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், எனினும் தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளை அரசாங்கம் தொடர்ந்து புறந்தள்ளி வருவதால் இம்முறை வரவு செலவுத் திட்டத்தை எதிர்த்து வாக்களிக்கத் தமது கட்சி தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளார்.
2027-ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான இறுதிநாள் விவாதத்தில் (நவம்பர் 20) பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில் கூறியதாவது:
“இந்த நாட்டினுடைய ஜனாதிபதியை நான் இந்த உயர்ந்த சபையின் ஊடாகக் கேட்கிறேன். நானும் அவரும் இந்தச் சபையிலே நீண்ட காலம் நண்பர்களாக, அருகருகே பாராளுமன்ற உறுப்பினர்களாக இருந்தவர்கள். நான் இப்பொழுதும் அவருடைய பேச்சை ரசிக்கின்றவன். அவர் தொடர்பாகப் பல கட்டுரைகள் வெளிவருகின்றன. அவர் ஒரு மிக வறுமையான குடும்பத்தைச் சேர்ந்தவர். ரயிலிலே பொருட்கள், சிகரெட் அல்லது டொஃபி விற்றுத்தான் அவர் படித்து நாட்டுக்கு ஜனாதிபதியாக வந்தார்.
சிங்கப்பூரின் சிற்பி லீ குவான் யூ, இலங்கையைப் போலச் சிங்கப்பூரை மாற்றுவேன் என்று சொன்னார். ஆனால், இந்த நாட்டினுடைய ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவால் ஏன் இந்தப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குத் தன்னுடைய சகாக்களுக்குச் சொல்ல முடியாமல் இருக்கின்றது?
எங்களுடைய மக்கள் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள். கடந்த இரண்டு ஆண்டுகளில் நாங்கள் சரியான பாதையில் உங்களோடு பயணிக்க முடியாமல் இருக்கிறோம். கடந்த இரண்டு வரவு செலவுத் திட்டங்களிலும் நாங்கள் உங்களுக்கு வாக்களித்திருந்தோம். மஹிந்த ராஜபக்ஷ வந்தபொழுது கூட முதலாவது வரவு செலவுத் திட்டத்திற்கு நாங்கள் ஆதரவாக வாக்களித்தோம். 2015–2019 காலப்பகுதியிலும் நாங்கள் ஆதரவாக வாக்களித்திருந்தோம்.
ஆனால், இம்முறை நாங்கள் வரவு செலவுத் திட்டத்தை எதிர்த்து வாக்களிக்கிறோம். ஏனென்றால், நாங்கள் எதிர்பார்த்து உங்களோடு சேர்ந்து போக நினைத்த ஒவ்வொரு நொடியும் நீங்கள் எங்களைத் தள்ளி விடுகிறீர்கள். தமிழ் மக்களுடைய பிரச்சினைகளை நீங்கள் புறந்தள்ளுகிறீர்கள். தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினையைத் தமிழ் தேசிய இனத்தினுடைய பிரச்சினையாக ஏற்றுக்கொள்ள நீங்கள் தவறுகிறீர்கள்.
அதனால், தமிழ் மக்களுடைய எண்ணங்களைப் பிரதிபலிக்கின்ற பிரதான கட்சி என்ற வகையில், இலங்கை தமிழரசுக் கட்சியாக நாங்கள் இந்த வரவு செலவுத் திட்டத்தை எதிர்த்து வாக்களிக்கிறோம் என்ற முடிவை மிகவும் துயரத்தோடு பதிவு செய்கிறோம்