கொழும்பு:
இலங்கையின் பாரம்பரிய அணிசேரா கொள்கைக்கு அப்பால் சென்று, நாட்டின் தேசிய நலன்களை முன்னேற்றும் வகையில் சர்வதேசப் பங்காளித்துவங்களைக் கட்டியெழுப்ப, அனைத்து நாடுகளுடனும் “நேர்மறையான கூட்டிணைவுகள்” (Positive Alignments) அடிப்படையிலான வெளியுறவுக் கொள்கையை இலங்கை பின்பற்ற வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அழைப்பு விடுத்துள்ளார்.
பாராளுமன்றத்தில் உரையாற்றிய பிரேமதாச, இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு ஆதரவளிக்கவும், நாட்டு மக்களுக்குப் பயனளிக்கவும் கூடிய வகையில், இயன்றவரை பல நாடுகள் மற்றும் சர்வதேச நிறுவனங்களுடன் ஆக்கபூர்வமான உறவுகளை ஏற்படுத்துவதை ஐக்கிய மக்கள் சக்தி (SJB) ஆதரிப்பதாகத் தெரிவித்தார்.
தேசிய நலன்களைப் பாதுகாக்கும், பொருளாதார இராஜதந்திரத்தை வலுப்படுத்தும், தேசிய பாதுகாப்பை உறுதி செய்யும் மற்றும் நாட்டின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த புவியியல் அமைவிடத்தைத் திறம்படப் பயன்படுத்தும் ஒரு ஒத்திசைவான மற்றும் முனைப்பான வெளியுறவுக் கொள்கையை இலங்கை முன்னெடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
வெளியுறவுக் கொள்கையை மதிப்பிடுவதற்கான 12 முக்கிய தூண்களைக் குறிப்பிட்ட பிரேமதாச, சர்வதேச ஒத்துழைப்பு, பிராந்திய ஸ்திரத்தன்மை, வர்த்தகம், மனித உரிமைகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களின் நலன் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.
தெற்காசிய பிராந்திய ஒத்துழைப்புச் சங்கம் (SAARC), பல்துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான வங்காள விரிகுடா முயற்சி (BIMSTEC) மற்றும் இந்து சமுத்திர விளிம்பு நாடுகளின் சங்கம் (IORA) ஆகிய அமைப்புகளின் ஊடாகப் பிராந்திய ஒத்துழைப்பை வலுப்படுத்த வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.
நிலையான அபிவிருத்தியை ஊக்குவிப்பதோடு பிராந்தியப் பங்காளித்துவங்களை வலுப்படுத்தி, இலங்கையின் கடல்சார் வளங்களைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தையும் எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், கொள்கை உருவாக்கம் மற்றும் நடைமுறைப்படுத்தலை மேம்படுத்துவதற்காகப் புதிய நிறுவனக் கட்டமைப்புகள் மற்றும் சிந்தனைக் குழாம்கள் (think tanks) ஊடாக நாட்டின் வெளியுறவுக் கொள்கை தீர்மானிக்கும் செயல்முறையை நவீனமயப்படுத்த வேண்டும் எனவும் பிரேமதாச முன்மொழிந்தார்.
அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பால், இலங்கையின் தேசிய நலன்களை முன்னேற்றும் மற்றும் நாட்டின் 22 மில்லியன் மக்களுக்கும் பயனளிக்கும் சர்வதேச முயற்சிகளுக்கு எதிர்க்கட்சி ஆக்கபூர்வமான ஆதரவை வழங்கும் எனவும் அவர் உறுதியளித்தார்