உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்துமுன்னதாகக் கிடைத்த புலனாய்வு எச்சரிக்கைகள் குறித்து யாரும் எனக்குத் தெரிவிக்கவில்லை; வவுணதீவுப் படுகொலை குறித்தும் தவறான தகவல் வழங்கப்பட்டது – முன்னாள் ஜனாதிபதி
2019 உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு முன்னதாகக் கிடைத்த புலனாய்வு எச்சரிக்கைகள் குறித்துப் பாதுகாப்புச் செயலாளரோ அல்லது பொலிஸ் மா அதிபரோ தமக்கு எவ்விதத் தகவலையும் வழங்கவில்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய விசேட நேர்காணலின் போதே அவர் இவ்விடயங்களைக் குறிப்பிட்டுள்ளார்.
நேர்காணலில் அவர் மேலும் தெரிவித்ததாவது:
“2019 ஏப்ரல் 4ஆம் திகதி முதல் ஏப்ரல் 21ஆம் திகதி குண்டுவெடிப்புகள் இடம்பெறும் வரை தினமும் புலனாய்வுத் தகவல்கள் கிடைத்துக்கொண்டே இருந்தன. புலனாய்வுப் பிரிவினர் பாதுகாப்பு அதிகாரிகளுக்குத் தகவல்களை வழங்கிக் கொண்டிருந்தனர். ஆனால், அந்தத் தகவல்களை யாரும் எனக்கு வழங்கவில்லை. பாதுகாப்புச் செயலாளர் என்னிடம் கூறவில்லை; பொலிஸ் மா அதிபரும் என்னிடம் கூறவில்லை. ஏன் யாரும் என்னிடம் கூறவில்லை என்ற கேள்வி இன்றும் என்னிடம் உள்ளது.
ஒருவரைக் கைது செய்வதற்குப் பொலிஸார் ஜனாதிபதியிடமோ அல்லது பிரதமரிடமோ அனுமதி கேட்க வேண்டிய அவசியமில்லை. அந்தந்தப் பகுதிகளுக்குப் பொறுப்பான பொலிஸ் மற்றும் இராணுவ அதிகாரிகள் இருந்தனர். இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படையில் புலனாய்வுப் பிரிவுகள் இருந்தன. சஹ்ரானுக்குப் பயிற்சி முகாம்கள் இருந்தன, அத்துடன் வவுனியா போன்ற இடங்களில் ஏற்கனவே சம்பவங்கள் இடம்பெற்றிருந்தன.
வவுணதீவுப் படுகொலை குறித்த தவறான தகவல்
2018 நவம்பரில் வவுணதீவில் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் கொல்லப்பட்ட போது, அது குறித்து விரைவாக விசாரணை நடத்துமாறு நான் இராணுவத்திற்குப் பணிப்புரை விடுத்தேன். சுமார் ஒரு வாரத்தின் பின்னர் அதிகாரி ஒருவர் எனக்குத் தொலைபேசியில் அழைத்து, ‘சேர், ஒரு நல்ல செய்தி. நாம் சந்திக்கும் போது சொல்ல வேண்டும்’ என்றார்.
நான் வீட்டில் இருந்தேன். அவர் என் வீட்டிற்கு வந்து, பொலிஸாரைக் கொன்றது யார் என்பதைக் கண்டுபிடித்துவிட்டதாகக் கூறினார். யார் அதைச் செய்தது என நான் கேட்டதற்கு, ‘விடுதலைப் புலிகள் தான் செய்தார்கள்’ என அவர் பதிலளித்தார்.
ஆனால், உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பின்னர், பாதுகாப்புப் படையினர் கிழக்கில் சஹ்ரானின் குழுவினருடன் மோதலில் ஈடுபட்டு வீடுகளைச் சோதனையிட்ட போது, கொல்லப்பட்ட அந்த இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கும் சொந்தமான கைத்துப்பாக்கிகள் சஹ்ரானின் வீட்டிலிருந்து மீட்கப்பட்டதாக நான் அறிந்துகொண்டேன். அப்படியானால், ஆரம்பத்தில் எனக்கு ஏன் அவ்வாறானதொரு தவறான தகவல் வழங்கப்பட்டது?