கொழும்பில் உள்ள பிரிட்டிஷ் உயர் ஸ்தானிகராலயம் (British High Commission) விடுத்துள்ள அறிக்கையில், சூறாவளி ‘தித்வா’வுக்குப் பிறகு இலங்கைக்கு வழங்கிவரும் உதவிகளை ஐக்கிய இராச்சியம் (UK) அதிகரித்துள்ளதாகவும், அதன் மூலம் மொத்த மனிதாபிமான உதவி £1 மில்லியன் (1.32 மில்லியன் அமெரிக்க டாலர்கள்) ஆக உயர்ந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
இங்கிலாந்தின் உதவி இலங்கையின் மிகவும் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு உயிர்காக்கும் ஆதரவையும் ஆரம்பகால மீட்சிக்கான (early recovery) உதவிகளையும் வழங்கி வருவதாக அது கூறியது.
“1.8 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நாங்கள் இப்போது கூடுதல் நிதியை வழங்கி வருகிறோம் — இதன் மூலம் பிரித்தானியாவின் ஆதரவு £1 மில்லியனாக (1.32 மில்லியன் டாலர்கள்) உயர்ந்துள்ளது. செஞ்சிலுவைச் சங்கம், UNOPS, விருத்தி மற்றும் நிவாரணப் பணிகளை வழங்கும் பங்காளிகளுக்கு நன்றி” என்று பிரிட்டிஷ் உயர் ஸ்தானிகராலயம் ‘X’ சமூக ஊடகத்தில் தெரிவித்துள்ளது.
முன்னதாக, சூறாவளி ‘தித்வா’வால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆதரவளிப்பதற்காக £675,000 (890,000 அமெரிக்க டாலர்கள்) அவசரகால உதவியை UK அறிவித்திருந்தது.
செஞ்சிலுவைச் சங்கம், ஐ.நா. முகவர் நிறுவனங்கள் மற்றும் உள்ளூர் அமைப்புகள் மூலம் வழங்கப்படும் இந்த உதவியில், வீடுகளையும் வாழ்வாதாரங்களையும் இழந்த சமூகங்களுக்கான தங்குமிடப் பொருட்கள், சுத்தமான நீர், சுகாதார வசதிகள் மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்கள் ஆகியவை அடங்கும்.
வெளிவிவகார அமைச்சர் விஜயதாஸ் ஹேரத்துடன் இடம்பெற்ற சந்திப்பின்போது, பதில் பிரிட்டிஷ் உயர் ஸ்தானிகர் தெரேசா ஓ’மஹோனி (Theresa O’Mahony), கடுமையான வானிலைத் தாக்கங்களிலிருந்து இலங்கை மீள்வதற்கு உதவுவதில் இங்கிலாந்தின் அா்ப்பணிப்பை மீண்டும் வலியுறுத்தினார்.
ஒரு தனிச் செய்தியில், மாட்சிமை தங்கிய மன்னர் (His Majesty the King), இந்த அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் தனது மனமார்ந்த அனுதாபங்களைத் தெரிவித்ததோடு, நிவாரணம் வழங்கும் அவசரநிலை பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்களின் துணிச்சலைப் பாராட்டினார்.
இந்த ஆதரவானது இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால பங்காண்மை மற்றும் நட்புறவைப் பிரதிபலிப்பதாகவும், இந்த கடினமான நேரத்தில் இலங்கைக்கு அதன் ஒற்றுமையை (solidarity) மீண்டும் உறுதிப்படுத்துவதாகவும் இங்கிலாந்து தெரிவித்துள்ளது.
