வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர குற்றம் சுமத்தியுள்ளார்.
இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் ஜயசேகர, வளிமண்டலவியல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் தனது சொந்த மகளுடன் கூட பேசுவதற்கு அனுமதிக்கப்படவில்லை என்று தெரிவித்தார்.
வளிமண்டலவியல் திணைக்களம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் ஆகிய இரண்டும் ஜனாதிபதியின் கீழ் வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
“பாதுகாப்பு அமைச்சில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்துமாறு பணிப்பாளர் நாயகத்திற்கு நான் சவால் விடுகிறேன். அவர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். ஏனெனில் அவர் ஏதேனும் உண்மைகளை வெளிப்படுத்தி விடுவார் என்று இந்த அரசாங்கம் அஞ்சுகிறது. சிலர் அவரை பதவியை ராஜினாமா செய்யுமாறு கேட்டுள்ளனர். ஆனால் அவர் தவறு செய்ததாகக் கருதப்படும் என்பதால் அதனை அவர் மறுத்துள்ளார். தயவுசெய்து அரச அதிகாரிகளுக்கு இவ்வாறு செய்யாதீர்கள்,” என அவர் மேலும் தெரிவித்தார்.