டிட்வா சூறாவளியினால் (Cyclone Ditwah) இலங்கை மின்சார சபையின் (CEB) உட்கட்டமைப்பு வசதிகளுக்கு ஏற்பட்ட சுமார் 20 பில்லியன் ரூபா சேதத்திற்கான செலவை மின்சார பாவனையாளர்களே ஏற்க வேண்டிய நிலை ஏற்படும் என அறியமுடிகின்றது.
இந்த சூறாவளி, (Transmission) மற்றும் விநியோக (Distribution) வலைப்பின்னல்கள் ஆகிய இரண்டிற்கும் பாரிய சேதங்களை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து மின்சார சபையின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் டெய்லி மிரரிடம் கூறுகையில், மின் கடத்தல் பாதைகளுக்கு சுமார் 1 பில்லியன் ரூபா பெறுமதியான சேதங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், விநியோகப் பாதைகளுக்கான இழப்பு சுமார் 19 பில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
மின் கடத்தல் பாதைகள் என்பவை பெரிய கோபுரங்களைப் பயன்படுத்தி 132,000 kV போன்ற மிக அதிக மின்னழுத்தத்தில் நீண்ட தூரத்திற்கு மின்சாரத்தை மொத்தமாக கொண்டு செல்பவை ஆகும். அதேசமயம், விநியோகப் பாதைகள் என்பவை சிறிய மின்கம்பங்கள் மூலம் துணை மின்நிலையங்களிலிருந்து வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு குறைந்த மின்னழுத்த மின்சாரத்தை குறுகிய தூரத்திற்கு கொண்டு செல்பவை ஆகும்.
இந்த இழப்புகள் அதிக கட்டணங்கள் மூலம் பாவனையாளர்களுக்கு மாற்றப்படுமா என்று கேட்டதற்கு, அந்த அதிகாரி பதிலளிக்கையில், இந்த செலவுகள் ஒரே நேரத்தில் வசூலிக்கப்படமாட்டாது என்றும், காலப்போக்கில் படிப்படியாகச் சேர்க்கப்படும் என்றும் கூறினார். சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) திட்டத்தின் கீழ், செலவை பிரதிபலிக்கும் விலை நிர்ணய முறையை (Cost-reflective pricing) கடைப்பிடிக்க வேண்டிய கட்டாயத்தில் இலங்கை மின்சார சபை உள்ளது.
மின்சாரக் கட்டண திருத்தங்கள் ஒவ்வொரு காலாண்டு அடிப்படையிலும் திட்டமிடப்படுகின்றன. அண்மையில், கடந்த காலாண்டில் ஏற்பட்ட இழப்புகளை ஓரளவு ஈடுகட்டுவது உட்பட, வருவாயை 11.57 சதவீதத்தால் அதிகரிப்பதற்காக மின்சார சபை கட்டண உயர்வை கோரியிருந்தது. இருப்பினும், நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் முறையான முன்மொழிவைச் சமர்ப்பிக்கத் தவறியதைக் காரணம் காட்டி, 2026 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் கட்டண திருத்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டாம் என்று இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) தீர்மானித்துள்ளது.
முறையான முன்மொழிவை உரிய நேரத்தில் சமர்ப்பிக்கத் தவறியமை, அசல் சமர்ப்பிப்பில் உள்ள குறைபாடுகள் மற்றும் எஞ்சியுள்ள குறைந்த காலப்பகுதிக்குள் செங்குத்தான சதவீத அதிகரிப்புடன் கூடிய கட்டணத் திருத்தத்தை அமுல்படுத்துவதில் உள்ள நடைமுறைச் சிக்கல்கள் உள்ளிட்ட பல காரணிகளைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
2026 ஆம் ஆண்டு ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலப்பகுதிக்கான கட்டணத் திருத்த முன்மொழிவை 2025 நவம்பர் 14 ஆம் திகதிக்குள் சமர்ப்பிக்குமாறு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் மின்சார சபைக்கு எழுத்து மூலம் அறிவித்ததாக ஆணைக்குழு ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இதேவேளை, அரசாங்கமும் இந்தத் தருணத்தில் மின்சாரக் கட்டணத் திருத்தத்தை அமுல்படுத்த ஆர்வம் காட்டவில்லை. இருப்பினும், 2026 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் கட்டணங்கள் மாறாமல் இருந்தால், அடுத்த மதிப்பாய்வின் போது, IMF பரிந்துரைத்த செலவு-பிரதிபலிப்பு விலை சூத்திரத்திற்கு இணங்க, மின்சார விலை திருத்தத்தை – ஒருவேளை அதிக விகிதத்தில் – கோருவதற்கு மின்சார சபைக்கு அழுத்தம் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
DAILY MIRROR