2026 ஜனவரி 30 |
டிட்வா (Ditwah) புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகள் மற்றும் நட்டஈடு வழங்கும் செயல்முறை தற்போது அதன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் எஸ். ஆலோக பண்டார இன்று (30) தெரிவித்தார்.
அதன்படி முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் வருமாறு:
-
வீடுகளைச் சுத்தப்படுத்துவதற்கான கொடுப்பனவு: அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட வீடுகளைச் சுத்தப்படுத்துவதற்காக வழங்கப்படும் ரூ. 25,000 கொடுப்பனவுக்கு 434,375 வீடுகள் தகுதியுடையவையாக அடையாளம் காணப்பட்டுள்ளன. இவற்றில், 423,914 வீடுகளுக்கு ஏற்கனவே நட்டஈடு வழங்கப்பட்டுள்ளது.
-
தளபாடங்கள் மற்றும் உபகரணங்களுக்கான நட்டஈடு: புயலால் சேதமடைந்த தளபாடங்கள் மற்றும் உபகரணங்களை மீளமைப்பதற்காக வழங்கப்படும் ரூ. 50,000 கொடுப்பனவுக்கு 163,509 வீடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதுவரை 115,757 வீடுகளுக்கு இக்கொடுப்பனவை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
-
மாணவர்களுக்கான கொடுப்பனவு: அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு ரூ. 15,000 கொடுப்பனவை வழங்குவதற்கான வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன. மொத்தம் 195,157 மாணவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அவர்களில் 141,382 மாணவர்களுக்கு ஏற்கனவே கொடுப்பனவுகள் வழங்கப்பட்டுள்ளன.
நட்டஈடு செலுத்துதலின் துல்லியத்தன்மை மற்றும் பாதிக்கப்பட்ட நபர்களைச் சரியாக அடையாளம் காண்பதை உறுதி செய்ய மாவட்டச் செயலாளர்கள் மற்றும் பிரதேச செயலாளர்கள் பணியாற்றி வருவதாக திரு. பண்டார மேலும் தெரிவித்தார்.
இந்தச் செயல்முறை மிகவும் சிக்கலானது மற்றும் கவனமான சரிபார்ப்புத் தேவைப்படுவதால், தாமதங்கள் குறித்த புகார்கள் நியாயமானவை அல்ல என்று அவர் சுட்டிக்காட்டினார். நட்டஈடு வழங்கும் பணிகளை விரைவில் நிறைவு செய்ய அனைத்துத் தரப்பினரின் ஒத்துழைப்பும் அவசியமென அமைச்சின் செயலாளர் வலியுறுத்தினார்.