2026 ஜனவரி 31
சுமார் 25,000 அரச உயரதிகாரிகள் கடந்த ஐந்து வருடங்களுக்கும் மேலாக தீர்வையற்ற வாகன அனுமதிப்பத்திரங்களை (Duty-Free Vehicle Permits) கையில் வைத்துள்ள போதிலும், வாகனம் ஒன்றைக் கொள்வனவு செய்ய முடியாமல் பெரும் சிரமத்திற்குள்ளாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தீர்வையற்ற வாகன அனுமதிப்பத்திரங்களுக்குப் பதிலாக வெளிநாட்டிலிருந்து வாகனங்களை இறக்குமதி செய்ய அரசாங்கம் இன்னும் அனுமதி வழங்காத காரணத்தினாலேயே இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பாக அரச நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்னவிடம் வினவியபோது, இந்தச் சிக்கல் எதிர்காலத்தில் தீர்க்கப்படும் எனத் தான் எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்தார்.
நாட்டில் வாகன இறக்குமதி நிறுத்தப்பட்ட பின்னர், அரச ஊழியர்களுக்காக வழங்கப்பட்ட தீர்வையற்ற வாகன அனுமதிப்பத்திரங்களின் எண்ணிக்கை 25,508 ஆகும்.
ஆண்டு வாரியாக வழங்கப்பட்ட அனுமதிப்பத்திரங்கள்:
2020: 5,373
2021: 2,972
2022: 3,340
2023: 5,718
2024: 6,062
2025: 2,043
இதேவேளை, சில அரச ஊழியர்கள் தங்களின் அவசரத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக, தங்களுக்குக் கிடைத்த இந்தத் தீர்வையற்ற வாகன அனுமதிப்பத்திரங்களை கடந்த காலங்களில் வாகன விற்பனையாளர்களுக்கு மிகக் குறைந்த விலைக்கு விற்றுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.