அரசாங்கத்தின் உறுதிமொழிக்கமைய, அடுத்த மூன்று ஆண்டுகளில் மின்சாரக் கட்டணம் 30 சதவீதத்தால் குறைக்கப்படும் என்று எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடி இன்று (பெப்ரவரி 5) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
மின் உற்பத்திச் செலவைக் குறைப்பதன் மூலம் இந்தக் குறைப்பை எட்ட முடியும் என்று அவர் கூறினார். தற்போதைய அரசாங்கம் பதவியேற்றது முதல் ஒரு யூனிட் மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கான செலவு 37 ரூபாயிலிருந்து 29 ரூபாயாகக் குறைந்துள்ளதாகவும், இது 22 சதவீத வீழ்ச்சி என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
“ஒரு யூனிட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் செலவைக் குறைக்காமல் மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க முடியாது. தற்போது நாம் அதிக விலைக்கு மின்சாரத்தை வாங்கி நட்டத்தில் விற்பனை செய்கிறோம்,” என்று அவர் கூறினார்.
உற்பத்திச் செலவை ஒரு யூனிட்டுக்கு 25 ரூபாயாகக் குறைக்க அரசாங்கம் இலக்கு வைத்துள்ளதாகவும், இதன் மூலம் நுகர்வோருக்கு வாக்குறுதி அளிக்கப்பட்ட 30 சதவீத மின்கட்டணக் குறைப்பை வழங்க முடியும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.