இலங்கைக்கான அமெரிக்க தூதரகத்தின் உயர்மட்ட அதிகாரிகள், இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு வர்த்தக உறவுகள் மற்றும் முதலீட்டு வாய்ப்புகளை விரிவுபடுத்துவதற்கான வழிகளை ஆராயும் நோக்கில்,ஏற்றுமதி அபிவிருத்தி சபையுடன் (EDB) கலந்துரையாடல்களை நடத்தினர்.
இந்தக் கூட்டத்தில் இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகத்தின் பொருளாதார மற்றும் வணிக அதிகாரி டேனியல் ஜாக்சன் மற்றும் வணிக மற்றும் பொருளாதார உதவியாளர் திலோமா அபயநாயக்க ஆகியோர் கலந்துகொண்டனர். அவர்கள் ஈடிபி தலைவர் மங்கள விஜேசிங்க மற்றும் பதில் கூடுதல் பணிப்பாளர் நாயகம் (மேம்பாடு) குமுதினி முதலிகே, ஏற்றுமதி விவசாயப் பணிப்பாளர் ஜனக் படுகம, வர்த்தக வசதி மற்றும் வர்த்தக தகவல் பணிப்பாளர் கலாநிதி எஸ்.யு. ரத்னசேகர உள்ளிட்ட மூத்த அதிகாரிகளைச் சந்தித்தனர்.
இக்கலந்துரையாடலின் போது, இரு தரப்பினரும் இலங்கையிலிருந்து அமெரிக்காவிற்கும், அமெரிக்காவிலிருந்து இலங்கைக்குமான சாத்தியமான முதலீட்டு வரவுகளை ஆராய்ந்ததோடு, தனியார் துறை ஈடுபாட்டை நெருக்கமாக்குவதற்கான வாய்ப்புகளையும் சுட்டிக்காட்டினர். சர்வதேச முதலீட்டாளர்களை அமெரிக்க பொருளாதார மேம்பாட்டு அமைப்புகளுடன் இணைக்கும் ஒரு முக்கிய தளமான, வாஷிங்டனில் நடைபெறவுள்ள ‘SelectUSA 2026 முதலீட்டு உச்சிமாநாட்டிற்கு’ வருமாறு இலங்கை ஏற்றுமதியாளர்களுக்கு ஜாக்சன் அழைப்பு விடுத்தார்.
இதற்குப் பதிலளிக்கும் விதமாக, இலங்கையின் பன்முகப்படுத்தப்பட்ட ஏற்றுமதி மற்றும் முதலீட்டுத் திறனை சர்வதேச அளவில் வெளிப்படுத்தும் ஸ்ரீலங்கா எக்ஸ்போ 2026 (Sri Lanka Expo 2026) நிகழ்வில் பங்கேற்குமாறு அமெரிக்க கொள்வனவாளர்கள், முதலீட்டாளர்கள் மற்றும் ஊடகப் பிரதிநிதிகளுக்கு தலைவர் விஜேசிங்க அழைப்பு விடுத்தார்.
இந்தக் கூட்டத்தின் முக்கிய நோக்கமாக வரி விலக்குகள் மற்றும் அமெரிக்க சந்தையில் நுழையும் இலங்கை ஏற்றுமதியாளர்களுக்கு மிகவும் சாதகமான சந்தை அணுகல் நிலைமைகளை உருவாக்குவதற்கான வழிகளை அடையாளம் காண்பது அமைந்திருந்தது. இரு தரப்பினரும் பரஸ்பரம் பயனளிக்கும் வர்த்தக ஏற்பாடுகளை நோக்கி இணைந்து பணியாற்றுவதற்கான உறுதிப்பாட்டை வெளிப்படுத்தினர்.
இலங்கையின் மிகப்பெரிய ஏற்றுமதி இடமாக அமெரிக்கா தொடர்ந்து திகழ்கிறது. 2025 ஆம் ஆண்டில், அமெரிக்காவிற்கான இலங்கையின் ஏற்றுமதி 2,999.15 மில்லியன் டொலர்களாக இருந்தது, அதே நேரத்தில் அமெரிக்காவிலிருந்து இறக்குமதி 732.22 மில்லியன் டொலர்களாக இருந்தது. 2024 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2025 இல் அமெரிக்காவிற்கான இலங்கையின் ஏற்றுமதி 3.07% வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
அமெரிக்க சந்தைக்கான முக்கிய ஏற்றுமதி தயாரிப்புகளில் ஆயத்த ஆடைகள், ரப்பர் சார்ந்த தயாரிப்புகள், தேங்காய் பருப்பு தயாரிப்புகள், வாசனை திரவியங்கள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகள் ஆகியவை அடங்கும்.
இந்தச் சந்திப்பு இலங்கை-அமெரிக்க பொருளாதாரக் கூட்டாண்மையின் வலிமையை மீண்டும் உறுதிப்படுத்தியதுடன், வரவிருக்கும் ஆண்டுகளில் வர்த்தகம் மற்றும் முதலீட்டு உறவுகளை மேலும் ஆழப்படுத்துவதற்கான இரு நாடுகளின் பகிரப்பட்ட உறுதிப்பாட்டை அடிக்கோடிட்டுக் காட்டியது.