:இலங்கையில் ஸ்கைடைவிங் (வான்குடை பாய்தல்) நடவடிக்கைகளை அறிமுகப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராயும் கூட்டம் பாதுகாப்பு அமைச்சில் நடைபெற்றது. பாதுகாப்புச் செயலாளர் ஓய்வுபெற்ற எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துயகன்த மற்றும் ‘ஸ்கைடைவ் ஸ்ரீலங்கா’ (Skydive Sri Lanka) அமைப்பின் பிரதிநிதிகள் குழுவினருக்கும் இடையில் இச்சந்திப்பு இடம்பெற்றது.
இக்கலந்துரையாடலின் போது, ஸ்கைடைவ் ஸ்ரீலங்கா பிரதிநிதிகள் ஸ்கைடைவிங் விளையாட்டு குறித்த விரிவான விளக்கக்காட்சியை வழங்கினர். ஒரு சாகச சுற்றுலா நடவடிக்கையாக இதன் மூலம் கிடைக்கக்கூடிய நன்மைகள் மற்றும் முன்மொழியப்பட்ட செயல்பாட்டு அம்சங்கள் குறித்து அவர்கள் இதன்போது விளக்கமளித்தனர். இலங்கையில் ஸ்கைடைவிங்கை ஒரு புதிய சுற்றுலா ஈர்ப்பாக உருவாக்குவதற்கான வாய்ப்புகள் மற்றும் நாட்டின் சுற்றுலாத் துறைக்கு அதன் பங்களிப்பு குறித்து இக்கூட்டத்தில் கவனம் செலுத்தப்பட்டது.
நாட்டில் ஸ்கைடைவிங் நடவடிக்கைகளை ஊக்குவிப்பதில் ஏற்படக்கூடிய தடைகள் மற்றும் சவால்களை முன்கூட்டியே கண்டறிவதன் முக்கியத்துவத்தை பாதுகாப்புச் செயலாளர் வலியுறுத்தினார்.
ஒழுங்குமுறை, பாதுகாப்பு, செயல்பாடு மற்றும் ஏனைய தொடர்புடைய விடயங்களை உன்னிப்பாக ஆராயுமாறும், இலங்கையில் ஸ்கைடைவிங்கை அறிமுகப்படுத்துவதற்கான ஒட்டுமொத்த சாத்தியக்கூறுகளை மதிப்பிடுமாறும் அவர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். மேலும், இந்த ஆய்வுகளின் முடிவுகள் மீளாய்வு செய்யப்பட்டு, உரிய நேரத்தில் மேலதிக கலந்துரையாடல்களுக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
இக்கலந்துரையாடலில் சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபை, இலங்கை சுற்றுலா வளர்ச்சி அதிகார சபை, வெளிவிவகார அமைச்சு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு ஆகியவற்றின் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் ஸ்கைடைவ் ஸ்ரீலங்கா அமைப்பின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.