தேசிய மக்கள் சக்தி அரசின் கொள்கைத் திட்டங்களுக்கு அமைய, யாழ்ப்பாண மாவட்டத்தில் எதிர்வரும் காலங்களில் நடைமுறைப்படுத்தவுள்ள அபிவிருத்தி திட்டங்களை அடையாளம் காண்பதற்கான முன்னாயத்தக் கலந்துரையாடல், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில், பாராளுமன்ற உறுப்பினர் ஜெயசந்திரமூர்த்தி றஜீவன் பங்குபற்றுதலுடன், 06.02.2026 அன்று முற்பகல் 11.00 மணிக்கு யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இக் கலந்துரையாடலின் போது, பாராளுமன்ற உறுப்பினர் ஜெயசந்திரமூர்த்தி றஜீவன் கருத்துத் தெரிவிக்கையில், அரசாங்கத்தின் கொள்கைத் திட்டங்களுக்கு அமைவாக 2027 மற்றும் 2028 ஆண்டுகளில் காலத்திற்கு பொருத்தமான அபிவிருத்தி திட்டங்களை அடையாளம் கண்டு நடைமுறைப்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். இத்திட்டங்களின் மூலம் வேலைவாய்ப்புக்கள் உருவாக்கப்பட்டு, வறுமையற்ற சமூக நிலை உருவாக வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்

.
மேலும், இக்கூட்டத்தின் பிரதான நோக்கம் பங்குபற்றிய அனைவரதும் அறிவும் அனுபவமும் பகிரப்பட்டு, பயனுறுதி மற்றும் நிலைத்தன்மை கொண்ட அபிவிருத்தி திட்டங்களை அடையாளம் காண்பதாகும் எனவும், வறுமை ஒழிப்பு, Clean Sri Lanka, டிஜிட்டல் மயமாக்கல் ஆகிய அரசாங்கக் கொள்கைகளுடன் இணைந்த வகையில் சுற்றுலா, கல்வி மற்றும் உட்கட்டமைப்பு துறைகளுடன் தொடர்புடைய திட்டங்கள் முன்மொழியப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
அதேநேரம், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் அவர்கள் கருத்துத் தெரிவிக்கையில், அரசாங்கம் பொறுப்பேற்றதன் பின்னர், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான இராமலிங்கம் சந்திரசேகர் அவர்கள், யாழ்ப்பாண மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய பெரிய அளவிலான சிறப்பான அபிவிருத்தி திட்டங்களுக்கான முன்மொழிவுகளை கோரியுள்ளதாகத் தெரிவித்தார்.
அபிவிருத்தி திட்டங்களை நடைமுறைப்படுத்தும் போது, நடைமுறைக்கு சாத்தியமானதும், நிலைத்திருக்கக் கூடியதும், பயனுறுதி வாய்ந்ததுமான திட்டங்களை அடையாளம் காண வேண்டிய பொறுப்பு அரசாங்க அதிகாரிகளுக்கு உண்டு எனவும், முன்மொழியப்படும் திட்டங்கள் தோல்வியடையாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டியது அதிகாரிகளின் கடமையாகும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
இக் கலந்துரையாடலின் போது, யாழ்ப்பாண மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள அபிவிருத்தி திட்டங்களுக்கான ஆரம்ப கட்ட முன்மொழிவுகள் ஆராயப்பட்டு, அவை தொடர்பாக பல்வேறு கருத்துக்கள் ஆரோக்கியமான முறையில் பரிமாறப்பட்டன.
மேற்படி கலந்துரையாடலில், வடமாகாண பிரஜாசக்தி தலைவரும் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைப்பாளருமான திரு. எஸ். கபிலன், போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் கௌரவ அமைச்சர் அவர்களின் இணைப்பாளர் திரு. எஸ். சிறிவாகீசன், திட்டமிடல் பணிப்பாளர் திரு. இ. சுரேந்திரநாதன், மாவட்ட பிரதி மற்றும் உதவி திட்டமிடல் பணிப்பாளர்கள், பிரதேச செயலாளர்கள் மற்றும் உதவி திட்டமிடல் பணிப்பாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
