
கிம் ஜூ-ஏ-வின் சமீபத்திய பொதுத் தோற்றங்கள், ஜனாதிபதியின் அடுத்த வாரிசு யார் என்பதற்கான அறிகுறிகளைக் காட்டுகின்றன.
வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங்-உன்னின் மகள் துப்பாக்கிச் சூடு நடத்தும் முன்னெப்போதும் இல்லாத ஒரு புகைப்படத்தை வடகொரியா வெளியிட்டுள்ளது.
அரசு நடத்தும் கொரிய மத்திய செய்தி நிறுவனம் (KCNA) வெளியிட்ட அந்தப் புகைப்படத்தில், பழுப்பு நிற லெதர் ஜாக்கெட் அணிந்திருக்கும் கிம் ஜூ-ஏ, ஒரு துப்பாக்கியின் வியூஃபைண்டர் (viewfinder) வழியாகப் பார்த்து இலக்கைக் குறிவைத்துச் சுடுவது போல் காணப்படுகிறார்.
குறிப்பாக, இந்தப் புகைப்படத்தில் கிம் ஜூ-ஏ மட்டும் தனியாக இருப்பது வழக்கத்திற்கு மாறான ஒன்றாகக் கருதப்படுகிறது. இது கிம் தனது மகளையே தனது வாரிசாகத் தேர்ந்தெடுத்துள்ளார் என்ற ஊகங்களுக்கு மேலும் வலுசேர்க்கிறது.
“புதிய தலைமுறை” துப்பாக்கிகள் மற்றும் பரிசு வழங்கல்
கட்சியின் மத்திய செயற்குழு தலைமையகத்தில் கிம் முன்னனி அதிகாரிகளையும், ராணுவத் தளபதிகளையும் சந்தித்தபோது இந்தப் புகைப்படம் எடுக்கப்பட்டது. அங்கு அவர்களுக்கு “புதிய தலைமுறை” ஸ்னைப்பர் ரகத் துப்பாக்கிகளை கிம் வழங்கினார்.
நாட்டின் மீதான அவர்களின் அர்ப்பணிப்பைப் பாராட்டும் வகையில் இந்த “சிறப்புப் பரிசுகளை” தாம் தனிப்பட்ட முறையில் தயார் செய்ததாக கிம் தெரிவித்தார். இது குறித்து அவர் கூறுகையில்:
“நமது பாதுகாப்பு அறிவியல் அகாடமி உருவாக்கி உற்பத்தி செய்துள்ள இந்த புதிய தலைமுறை ஸ்னைப்பர் துப்பாக்கி உண்மையில் ஒரு அற்புதமான ஆயுதம். இந்தப் பரிசுகள் தேசத்திற்காகவும் மக்களுக்காகவும் நீங்கள் காட்டிய அசாத்திய பற்றுக்கான எனது அங்கீகாரமாகும்.”
துப்பாக்கிகளைப் பெற்றுக்கொண்டவர்கள், நாட்டைப் பாதுகாப்பதில் தங்களது விசுவாசத்தை உறுதிப்படுத்தும் வகையில் உறுதிமொழி எடுத்துக்கொண்டதாக அரசு ஊடகங்கள் தெரிவித்தன.
வாரிசு குறித்த ஊகங்கள்
புகைப்படங்களில், தனது தந்தை இந்தப் பரிசுகளை வழங்குவதற்கு கிம் ஜூ-ஏ உதவி செய்வதையும், துப்பாக்கிச் சுடும் பயிற்சியில் பங்கேற்பதையும் காண முடிகிறது.
இந்த வார தொடக்கத்தில், வடகொரியாவின் மிக முக்கியமான அரசியல் நிகழ்வான ஒன்பதாவது கட்சி மாநாட்டிலும் (Ninth Party Congress) கிம் தனது மகளுடன் பங்கேற்றார். பியோங்யாங் தெருக்களில் உற்சாகமடைந்த குடிமக்களுக்கு முன்னால் தந்தை-மகள் இருவரும் ஒரே மாதிரியான கருப்பு நிற லெதர் கோட்களை அணிந்து காட்சியளித்தனர்.
கிம் ஜூ-ஏ சமீபகாலமாகத் தனது தந்தையுடன் இணைந்து அதிக அளவிலான பொது நிகழ்வுகளில் பங்கேற்று வருவது குறிப்பிடத்தக்கது.
