ஜெருசலேம் அருகே உள்ள பெய்ற் ஷமேஷ் (Beit Shemesh) நகரில் ஈரானிய ஏவுகணை தாக்கியதில், அங்கிருந்த பதுங்குழிக்குள்தஞ்சம் புகுந்திருந்த ஒன்பது பேர் கொல்லப்பட்டதாக இஸ்ரேலிய காவல்துறை தெரிவித்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமை மதிய வேளையில் ஏவப்பட்ட அந்த ஏவுகணை, புகலிடத்தின் மீது நேரடியாக விழுந்து தாக்கியதாக அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். இந்தத் தாக்குதலின் தாக்கத்தால் பதுங்குழிமுற்றிலும் இடிந்து விழுந்ததாக அவசரகால சேவை அமைப்பான ‘சாகா’ (Zaka) தெரிவித்துள்ளது. முன்னதாக இந்தத் தாக்குதல் ஒரு குடியிருப்பு கட்டிடத்தின் மீது நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்திலிருந்து சிஎன்என் (CNN) செய்தியாளர் ஜெரமி டைமண்ட் கூறுகையில், அந்தபதுங்குழி ஒரு வழிபாட்டுத் தலத்திற்கு (Synagogue) அடியில் அமைந்துள்ளதாகவும், தாக்குதலில் இருந்து தப்பிக்க மக்கள் அங்கு தஞ்சம் புகுந்திருந்ததாகவும் தெரிவித்தார். இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளவர்களை மீட்புக் குழுவினர் தேடி வருவதால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
தாக்குதல் நடந்த இடத்தை நேரில் பார்த்த இஸ்ரேலிய அவசரகால சேவை அமைப்பான மேகன் டேவிட் அடோம் (Magen David Adom) அதிகாரி டிரோர் ஐனி கூறுகையில், “அழிந்த வீடுகள், கட்டிடங்களிலிருந்து எழும் தீ மற்றும் புகை, நொறுங்கிய கார்கள் என அந்த இடமே பெரும் குழப்பமாக காட்சியளிக்கிறது,” என்றார்.