சனிக்கிழமை முதல் ஈரானின் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களின் விளைவாக 1,332 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக ஐநாவுக்கான ஈரானிய தூதர் அமிர் சயீத் இரவானி தெரிவித்துள்ளார்.
நியூயார்க்கில் உள்ள ஐநா தலைமையகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய இரவானி, ஈரானிய செம்பிறை சங்கத்தின் (Iranian Red Crescent Society) கூற்றுப்படி, கொல்லப்பட்டவர்களில் பெண்களும் குழந்தைகளும் அடங்குவர் என்று கூறினார்.
“ஆயிரக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர், பலியானவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது,” என்று கூறிய அவர், பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் பிற பொதுமக்களுக்கான உள்கட்டமைப்புகள் “திட்டமிட்டு” இலக்கு வைக்கப்பட்டதாகக் குற்றம் சாட்டினார்.
பெண்கள் பள்ளி ஒன்றின் மீது நடத்தப்பட்ட கொடூரமான தாக்குதல் குறித்து விசாரணை நடத்தி வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ள போதிலும், பொதுமக்களின் உள்கட்டமைப்புகளைத் தான் இலக்கு வைக்கவில்லை என்று அது மறுத்துள்ளது. அதேவேளையில், ஈரான் தனது நாட்டுப் பொதுமக்களை இலக்கு வைப்பதாக இஸ்ரேல் குற்றம் சாட்டியுள்ளது.
