ஹோர்முஸ் நீரிணையில் (Strait of Hormuz) இன்று இரண்டு கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளதாக இஸ்லாமியப் புரட்சிகர காவற்படை (IRGC) அறிக்கை வெளியிட்டுள்ளதாக ஈரானின் அரை-அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான ‘ஃபார்ஸ்’ (Fars) தெரிவித்துள்ளது.
தாய்லாந்து நாட்டின் கொடியுடன் கூடிய “மயூரி நாரி” (Mayuree Naree) என்ற சரக்குக் கப்பல், “எச்சரிக்கைகளை அலட்சியப்படுத்திவிட்டு, ஹோர்முஸ் நீரிணை வழியாக சட்டவிரோதமாக நுழைய முயன்றதால்” அதன் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக ஐ.ஆர்.ஜி.சி தெரிவித்துள்ளது.
அதேபோல், லைபீரிய நாட்டின் கொடியுடன் கூடிய “எக்ஸ்பிரஸ் ரோம்” (Express Rome) என்ற மற்றொரு கப்பலும், “ஐ.ஆர்.ஜி.சி கடற்படையின் எச்சரிக்கைகளைப் புறக்கணித்ததால், இன்று காலை ஈரானிய ஏவுகணைகளால் தாக்கப்பட்டதாக” ஆயுதப் படைகள் தெரிவித்துள்ளன.
மெரைன் ட்ராஃபிக் (MarineTraffic) தரவுகளின்படி, இவ்விரு கப்பல்களும் இன்று காலை ஹோர்முஸ் நீரிணையில்இருந்ததை உறுதிப்படுத்துகின்றன.
தொடரும் பதற்றம்
யுகே கடல்சார் வர்த்தகச் செயல்பாட்டு அமைப்பின் (UKMTO) படி, பிப்ரவரி 28 அன்று ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேலிய தாக்குதல்கள் மற்றும் ஈரானின் பதிலடித் தாக்குதல்கள் தொடங்கியதிலிருந்து, பாரசீக வளைகுடா, ஹோர்முஸ் நீரிணை மற்றும் ஓமன் வளைகுடா பகுதிகளில் கப்பல்கள் மீது குறைந்தது 13 தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. இதில் மூன்று தாக்குதல்கள் இன்று மட்டுமே நிகழ்ந்துள்ளன.
முன்னதாக இன்று காலை, தெஹ்ரானின் காத்தம் அல்-அன்பியா (Khatam al-Anbiya) ராணுவத் தலைமையகத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், “அமெரிக்கா, சீயோனிஸ்டுகள் அல்லது அவர்களின் கூட்டாளிகளின் நலனுக்காக ஹோர்முஸ் நீரிணைவழியாக ஒரு லிட்டர் எண்ணெயைக் கூட செல்ல நாங்கள் அனுமதிக்க மாட்டோம்” என்று தெரிவித்தார்.
மேலும், “அமெரிக்கா அல்லது இஸ்ரேலிய ஆட்சியுடன் தொடர்புடைய எந்தவொரு கப்பலும் அல்லது எண்ணெய் சரக்குகளும் முறையான இலக்காகக் கருதப்படும். நீங்கள் உங்கள் செயல்களுக்காக வருந்தும் வரை தொடர்ந்து தாக்குதல்களை நடத்துவோம்” என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது
