ஐக்கிய அரபு அமீரகத்தின் (UAE) வான்வெளி மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வணிக ரீதியிலான விமானங்களுக்கான வான்வெளித் தடை நீக்கப்பட்ட சில மணிநேரங்களிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
எமிரேட்ஸ் (Emirates), திங்கள்கிழமை முதல் “குறைக்கப்பட்ட விமான அட்டவணையுடன்” தனது சேவையை மீண்டும் தொடங்கியிருந்தது. முன்னதாக, துபாய் சர்வதேச விமான நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தை அடுத்து, “முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக” துபாய் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் விமானச் சேவைகளை தற்காலிகமாக நிறுத்தி வைத்திருந்தது.
ஐக்கிய அரபு அமீரகத்தின் மற்றொரு முதன்மை விமானச் சேவையான எதிஹாட் ஏர்வேஸ் (Etihad Airways), அபுதாபியில் இருந்து “வரையறுக்கப்பட்ட வணிக ரீதியிலான விமான அட்டவணையை” இயக்கி வருகிறது.
“பாதுகாப்பு மற்றும் தற்காப்பு குறித்த விரிவான மதிப்பீடுகளைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது” என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
போர் தொடங்கியதிலிருந்து, ஈரான் இராணுவம் ஐக்கிய அரபு அமீரகத்தை (UAE) நோக்கி 1,900-க்கும் மேற்பட்ட ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை ஏவியுள்ளது. அமீரகத்தின் போக்குவரத்து மற்றும் எண்ணெய் கட்டமைப்புகளை ஈரான் இலக்கு வைத்து வருகின்றது.
சர்வதேச பயணங்களுக்கான உலகின் பரபரப்பான மையமான துபாய் சர்வதேச விமான நிலையத்திற்கு அருகில், “ட்ரோன் தொடர்பான சம்பவத்தால்” தீ விபத்து ஏற்பட்டதையடுத்து, திங்கள்கிழமை அன்று விமானங்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன. மேலும், பிராந்தியத்தின் மிகப்பெரிய எண்ணெய் சேமிப்பு நிலையங்களில் ஒன்றான புஜைரா (Fujairah) துறைமுகத்தின் மீது நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலும் அங்கு பெரும் தீ விபத்தை ஏற்படுத்தியது.
அபுதாபியின் புறநகர்ப் பகுதியில் கார் ஒன்றின் மீது நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில் பாலஸ்தீனியர் ஒருவர் கொல்லப்பட்டதாக அபுதாபி ஊடக அலுவலகம் தெரிவித்துள்ளது.
ஈரான் தனது பழிவாங்கும் தாக்குதல்களைத் தொடங்கியதிலிருந்து, துபாய் சர்வதேச விமான நிலையம் பலமுறை தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. இது பெரும் தாமதங்களையும் இடையூறுகளையும் ஏற்படுத்தியுள்ளது. பிப்ரவரி பிற்பகுதியில் துபாயில் உள்ள ஒரு சொகுசு ஹோட்டலும் இத்தாக்குதலில் பாதிக்கப்பட்டது.
“இந்த போருக்குள் தாம் அநீதியான முறையில் இழுத்து விடப்பட்டதாக ஐக்கிய அரபு அமீரகம் கருதுகிறது” என்று பிபிசி செய்தியாளர் அஸாதே மோஷிரி பிபிசி குளோபல் நியூஸ் போட்காஸ்டில் திங்கள்கிழமை தெரிவித்தார்.
“இவ்வாறான அழுத்தங்கள் மூலம் இங்கிருக்கும் தலைவர்கள் போரை நிறுத்துமாறு அமெரிக்காவிற்கு அழுத்தம் கொடுப்பார்கள் என்று ஈரான் நினைக்கலாம், ஆனால் உண்மையில் இங்குள்ள அதிகாரிகள் மிகுந்த ஆத்திரத்தில் உள்ளனர்” என்று அவர் கூறினார்.
ஐக்கிய அரபு அமீரகம் ஒரு “பாதுகாப்பான மற்றும் வளமான நாடாக” உருவெடுக்க நீண்ட காலம் எடுத்துள்ள நிலையில், தற்போது இவ்வாறான தொடர் தாக்குதல்களை எதிர்கொள்வது அதன் நீண்டகால தாக்கம் குறித்த கவலையை மக்களிடையே ஏற்படுத்தியுள்ளதாக மோஷிரி மேலும் குறிப்பிட்டார்
