ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள அமெரிக்க தூதரகம், ஏவுகணைகள் மற்றும் ட்ரோன் (Drone) தாக்குதல்களுக்கு இலக்காகியுள்ளதாக ரொய்ட்டர்ஸ்Reuters) மற்றும் ஏஎஃப்பி (AFP) செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
“தாக்குதல்கள் தொடங்கப்பட்டதிலிருந்து இதுவே மிகவும் தீவிரமான தாக்குதல்” என்று ஈராக் பாதுகாப்பு வட்டாரங்கள் ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளன.
இந்தத் தாக்குதலுக்கு சுமார் ஆறு மணி நேரத்திற்கு முன்னதாகவே, ஈராக்கில் உள்ள அமெரிக்க குடிமக்களுக்குத் தூதரகம் புதிய பாதுகாப்பு எச்சரிக்கையை விடுத்திருந்தது. அதில், மத்திய பாக்தாத்தில் உள்ள ‘சர்வதேச வலயத்தின்’ (International Zone) மீது “ஈரானுடன் தொடர்புடைய பயங்கரவாதக் குழுக்கள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன” என்று எச்சரிக்கப்பட்டிருந்தது.
இந்த வாரம் ஈராக்கில் தொடர்ச்சியான தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன, அவை செவ்வாய்க்கிழமை அதிகாலை வரையிலும் நீடித்தன.
திங்கள்கிழமை அன்று, பாக்தாத்தின் பலத்த பாதுகாப்புமிக்க ‘பசுமை வலயத்தில்’ (Green Zone) உள்ள ஒரு சொகுசு ஹோட்டல் மீது ட்ரோன் (Drone) மூலம் நடத்தப்பட்ட தாக்குதலில் தீ விபத்து ஏற்பட்டது. அரசாங்கக் கட்டிடங்கள் மற்றும் வெளிநாட்டுத் தூதரகங்கள் அமைந்துள்ள பகுதியே இந்தப் பசுமை வலயம் ஆகும்.
தொடர்ந்து செவ்வாய்க்கிழமை அதிகாலை, பசுமை வலயத்தில் அமைந்துள்ள அமெரிக்கத் தூதரகம் இலக்கு வைக்கப்பட்டது. “மூன்று ட்ரோன்கள் மற்றும் நான்கு ஏவுகணைகள் மூலம் தூதரகம் தாக்கப்பட்டது; இதில் குறைந்தது ஒரு ட்ரோன் தூதரக வளாகத்திற்குள் விழுந்து நொறுங்கியது” என்று பாதுகாப்பு அதிகாரி ஒருவர் ஏஎஃப்பி (AFP) செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.
அமெரிக்க தூதரகத்தை நோக்கி குறைந்தது மூன்று ட்ரோன்கள் பறந்து வந்ததை தாம் கண்டதாக நேரில் பார்த்தவர் ஒருவர் ராய்ட்டர்ஸ் (Reuters) நிறுவனத்திடம் தெரிவித்தார். இதில் இரண்டு ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்ட போதிலும், மூன்றாவது ட்ரோன் தூதரக வளாகத்திற்குள் மோதியதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
“தாக்குதல்கள் தொடங்கப்பட்டதிலிருந்து இதுவே மிகவும் தீவிரமான தாக்குதல்” என்று ஈராக் பாதுகாப்பு வட்டாரங்கள் ஏஎஃப்பி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளன