தற்போது நீடித்து வரும் போர்ச் சூழல் வரும் வாரங்களில் கட்டுப்பாட்டுக்குள் வராவிட்டால், அடுத்த எரிபொருள் விலை திருத்தத்தின் போது மக்களால் தாங்கிக்கொள்ள முடியாத அளவுக்கு விலை உயர்வு ஏற்படக்கூடும் என அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நலிந்த ஜயதிஸ்ஸ எச்சரித்துள்ளார்.
உலகளாவிய ரீதியில் ஏற்படும் மாற்றங்களை அரசாங்கம் உன்னிப்பாகக் கவனித்து வருவதாகவும், ஆனால் எரிபொருள் விலையில் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்தும் இந்தப் போரின் போக்கை முன்கூட்டியே கணிக்க முடியாது என்றும் அவர் தெரிவித்தார். “தற்போதைக்கு எரிபொருள் விலையை மாற்றியமைக்கும் எந்த முடிவும் இல்லை,” என்றும் அவர் மேலும் கூறினார்.
இன்றைய ஊடகவியலாளர் சந்திப்பில் விளக்கமளித்த அமைச்சர் ஜயதிஸ்ஸ, இந்த மாதத்தின் முதலாவது விலை திருத்தத்தின் போதே எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டதாகக் குறிப்பிட்டார். இருப்பினும், தற்போதைய மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை மற்றும் டொலர் பெறுமதிக்கு ஏற்ப அதிகரிக்கப்பட வேண்டிய தொகையை விட, மிகக் குறைந்த அளவிலேயே அந்த அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டதாக அவர் கூறினார். “சந்தை விலைக்கு ஏற்ப முழுமையாக விலையை அதிகரித்திருந்தால், நாட்டின் பொருளாதாரத்தால் அதனை ஒரேயடியாகத் தாங்கியிருக்க முடியாது,” என்றார்.
நுகர்வோரைப் பாதுகாப்பதற்காக, எரிபொருள் விலை உயர்வால் ஏற்படும் கூடுதல் செலவின் ஒரு பகுதியை அரசாங்கமே ஏற்றுக்கொண்டுள்ளது. எவ்வாறாயினும், போர் உள்ளிட்ட உலகளாவிய நிலைமைகள் தொடர்ந்து மோசமடைந்தால், மே மாதம் திட்டமிடப்பட்டுள்ள அடுத்த விலை திருத்தத்தின் போது கணிசமான விலை உயர்வு ஏற்படக்கூடும் என அவர் எச்சரித்தார்.
