BBC
ஹோர்முஸ் நீரிணை (Strait of Hormuz) மீண்டும் திறக்கப்படாவிட்டால், ஈரானின் மின் உற்பத்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என டொனால்ட் டிரம்ப் விடுத்த எச்சரிக்கை, “நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது” போல் அமைந்துள்ளதாக ஈரானியர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
டிரம்ப் தாக்குதல் நடத்தினால், “தண்ணீர், மின்சாரம் மற்றும் எரிவாயு விநியோகம் அனைத்தும் துண்டிக்கப்படும்” என்று தெஹ்ரானைச் சேர்ந்த 40 வயதுடைய பெண் ஒருவர் பிபிசி பாரசீக சேவையிடம் தெரிவித்தார்.
தெஹ்ரானைச் சேர்ந்த 20 வயதுடைய இளைஞர் ஒருவர் கூறுகையில், தாக்குதல்கள் அதிகரித்தால் மின்வெட்டு ஏற்படும் என்றும் வங்கி அமைப்பு முடங்கக்கூடும் என்றும் தான் அஞ்சுவதாகக் குறிப்பிட்டார். “அவர்கள் சிவப்புக் கோடுகள் மற்றும் கட்டுப்பாடுகளைத் தாண்டிச் செல்லும் அளவுக்கு நெருப்பைத் தூண்டுகிறார்கள்,” என்று அவர் கூறினார்.
“கடந்த ஆண்டு 12 நாட்கள் நீடித்த போரின் போது, எங்களுக்கு மூன்று வாரங்களாகத் தண்ணீர் கிடைக்கவில்லை. இது போரை விட எனக்கு மிகவும் மோசமான அனுபவமாக இருந்தது,” என்று தெஹ்ரானைச் சேர்ந்த 20 வயதுடைய இளம்பெண் ஒருவர் தெரிவித்தார்.
“முல்லாக்களின் ஆட்சி (ஈரானிய மதத் தலைவர்களின் ஆட்சி) முடிவுக்கு வர வேண்டுமானால், எங்கள் மீது ஒரு அணு குண்டு வீசப்பட்டால் மட்டுமே அது சாத்தியம்,” என்று ஈரானின் வடக்குப் பகுதியிலுள்ள ராஷ்ட் (Rasht) நகரைச் சேர்ந்த மற்றொரு 20 வயது இளைஞர் கூறினார்.
டிரம்ப் மின் உற்பத்தி நிலையங்களைத் தாக்குவார் என்பது “உண்மையில் நம்ப முடியாத ஒன்றாக” இருப்பதாகக் கூறும் அவர், அமெரிக்கா தங்களை “மிக மோசமாகத் தாக்கும்” என்று தான் நினைக்கவில்லை என்றும் தெரிவித்தார்.