ஈரான் மின் உற்பத்தி நிலையங்கள் மீது குண்டு வீசப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் விடுத்த எச்சரிக்கையை அவர் நடைமுறைப்படுத்தினால், ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) காலவரையறையின்றி மூடத் தயாராக இருப்பதாக ஈரானின் ஆயுதப்படை தலைமையகம் அறிவித்துள்ளது.
நாட்டின் மின்சக்தித் துறை மீதான எந்தவொரு தாக்குதலுக்கும் பதிலடி கொடுக்கப்படும் என தெஹ்ரானிலிருந்து ஞாயிற்றுக்கிழமை விடுக்கப்பட்ட சமீபத்திய எச்சரிக்கை இதுவாகும்.
48 மணிநேரத்திற்குள் ஹோர்முஸ் நீரிணை கப்பல் போக்குவரத்திற்காக முழுமையாக திறக்கப்படாவிட்டால், ஈரானின் உட்கட்டமைப்புகள் மீது குண்டுவீச்சு நடத்த உத்தரவிடப்போவதாக டிரம்ப் சனிக்கிழமை தெரிவித்திருந்தார்.
இதற்குப் பதிலளித்துள்ள ஈரானிய இராணுவம், “ஈரானின் மின் உற்பத்தி நிலையங்கள் தொடர்பான அமெரிக்காவின் அச்சுறுத்தல்கள் செயல்படுத்தப்பட்டால், ஹோர்முஸ் நீரிணை முற்றாக மூடப்படும். அழிக்கப்பட்ட மின் உற்பத்தி நிலையங்கள் மீண்டும் கட்டப்படும் வரை அது திறக்கப்பட மாட்டாது,” என ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.
மேலும், இஸ்ரேலின் அனைத்து எரிசக்தி மற்றும் தகவல் தொடர்பு உட்கட்டமைப்புகளும், “அமெரிக்கப் பங்குதாரர்களைக் கொண்ட பிராந்தியத்திலுள்ள ஒத்த நிறுவனங்களும்” இலக்கு வைக்கப்படும் என்றும் அது கூறியுள்ளது.
“அமெரிக்கத் தளங்களைக் கொண்டுள்ள பிராந்திய நாடுகளின் மின் உற்பத்தி நிலையங்கள் எங்களின் முறையான இலக்குகளாக இருக்கும்,” என்றும் இராணுவத் தலைமையகம் மேலும் சேர்த்துக் கொண்டது.
முன்னதாக, ஈரானிய நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாப் (Mohammad Baqer Qalibaf) எக்ஸ் (X) தளத்தில் வெளியிட்ட பதிவில், ஈரானிய மின் உற்பத்தி நிலையங்கள் இலக்கு வைக்கப்பட்டால் மத்திய கிழக்கிலுள்ள முக்கியமான உட்கட்டமைப்புகள் மற்றும் எரிசக்தி வசதிகள் “மீள முடியாத வகையில் அழிக்கப்படலாம்” என்று எச்சரித்திருந்தார்.
READ MORE
டிரம்பின் 48 மணிநேரக் காலக்கெடு மற்றும் அச்சுறுத்தல்- ஈரான் பணியவில்லை