மத்திய கிழக்கில் உள்ள 18 அமெரிக்க தொழில்நுட்ப மற்றும் நிதி நிறுவனங்களை இலக்கு வைக்கத் தொடங்கப்போவதாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC) செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது. மார்ச் மாத தொடக்கத்தில் இது போன்றதொரு அச்சுறுத்தலை விடுத்திருந்த IRGC, நாட்டின் “சட்டபூர்வமான இலக்குகள் படிப்படியாக விரிவடைந்து வருகின்றன” என்று எச்சரித்திருந்தது.
செவ்வாய்க்கிழமை டெலிகிராம் (Telegram) செயலியில் பதிவிடப்பட்ட ஒரு செய்தியில், அமெரிக்காவைச் சேர்ந்த 18 நிறுவனங்கள் அமெரிக்க அரசாங்கத்திற்காக “ஒற்றர்களாக” (Spies) செயல்படுவதாகவும், தாக்குதல்களை நடத்த உதவுவதாகவும் IRGC குற்றம் சாட்டியுள்ளது.
இது குறித்து IRGC தெரிவித்துள்ளதாவது:
“பயங்கரவாத நடவடிக்கைகளை நிறுத்த வேண்டியதன் அவசியம் குறித்து நாங்கள் விடுத்த தொடர்ச்சியான எச்சரிக்கைகளை அமெரிக்கா புறக்கணித்துள்ளது. இன்று, உங்களது மற்றும் உங்கள் இஸ்ரேலிய கூட்டாளிகளின் பயங்கரவாதத் தாக்குதல்களில் பல ஈரானிய குடிமக்கள் கொல்லப்பட்டுள்ளனர் (Martyred). பயங்கரவாத இலக்குகளை வடிவமைப்பதிலும் கண்காணிப்பதிலும் அமெரிக்க தகவல் தொழில்நுட்ப (ICT) மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) நிறுவனங்களே முக்கிய அங்கமாக இருப்பதால், இந்தப் பயங்கரவாத நடவடிக்கைக்குப் பதிலடியாக, இனிமேல் பயங்கரவாதச் செயல்பாடுகளில் ஈடுபடும் முக்கிய நிறுவனங்கள் எங்களது சட்டபூர்வமான இலக்குகளாக இருக்கும்.”
இந்த நிறுவனங்களின் ஊழியர்கள் தங்களது உயிரைக் காப்பாற்றிக்கொள்ள உடனடியாக பணியிடங்களை விட்டு வெளியேறுமாறு அந்தப் பதிவில் எச்சரிக்கப்பட்டுள்ளது. மேலும், பிராந்தியத்திலுள்ள அனைத்து நாடுகளிலும் இந்த நிறுவனங்களுக்கு அருகில் வசிப்பவர்கள், ஒரு கிலோமீட்டர் சுற்றளவிற்கு அப்பால் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இப்பட்டியலில் Microsoft, Apple, Google, Meta, IBM மற்றும் Cisco போன்ற முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன. அத்துடன், நிதித்துறையில் முன்னணியிலுள்ள J.P. Morgan, எலான் மாஸ்க்கின் Tesla, பாதுகாப்பு ஒப்பந்த நிறுவனமான Boeing மற்றும் நுண்செயலி (Microchip) தயாரிப்பு நிறுவனமான Nvidia ஆகியவையும் பெயரிடப்பட்டுள்ளன