ஈரான் மீதான தனது இராணுவத் தாக்குதல்களை அடுத்த இரண்டு முதல் மூன்று வாரங்களுக்குள் அமெரிக்கா முடிவுக்குக் கொண்டுவரக்கூடும் என்றும் இந்தப் போர் முடிவுக்கு வருவதற்கு ஈரானுடன் எந்தவித உடன்படிக்கையும் செய்துகொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்றும் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
செவ்வாய்க்கிழமை வெள்ளை மாளிகையில் உரையாற்றிய ட்ரம்ப் “நாங்கள் மிக விரைவில் வெளியேறுவோம். இன்னும் இரண்டு வாரங்கள் அல்லது மூன்று வாரங்களுக்குள் இந்த வெளியேற்றம் நிகழலாம்” என்று குறிப்பிட்டார்.
இந்த மோதலை முடிவுக்குக் கொண்டுவர ஈரானுடன் வெற்றிகரமான இராஜதந்திர பேச்சுவார்த்தைகள் அவசியமா என்று கேட்கப்பட்டபோது “இல்லை ஈரான் என்னுடன் எந்த உடன்படிக்கையும் செய்துகொள்ள வேண்டிய அவசியமில்லை” என்று அவர் பதிலளித்தார்.
முன்னதாக தனது ‘ட்ரூத் சோஷியல்’ சமூக வலைதளப் பக்கத்தில் ஐரோப்பிய நட்பு நாடுகளைச் சாடியிருந்த அமெரிக்க ஜனாதிபதிஹோர்முஸ் நீரிணைப் பகுதிகளில் நிலவும் கட்டுப்பாடுகளால் எரிபொருளைப் பெற முடியாத ஐக்கிய இராச்சியம் போன்ற நாடுகள் “தாமதமான தைரியத்தை வரவழைத்துக்கொண்டு நீரிணைக்குச் சென்று அங்கிருக்கும் எண்ணெயை நீங்களே எடுத்துக் கொள்ளுங்கள்” என்று பதிவிட்டிருந்தார்.
இதேவேளை மத்திய கிழக்கில் மோதல்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளன. லெபனான் தலைநகர் பெய்ரூட் மீது இஸ்ரேல் கடும் வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது. ஹிஸ்புல்லா அமைப்பின் தளபதி மற்றும் மற்றொரு மூத்த உறுப்பினரை இலக்கு வைத்தே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.
மேலும் ட்ரம்ப் புதன்கிழமை மாலை தேசத்திற்கு உரையாற்றவுள்ளதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.