ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் (SriLankan Airlines) நிறுவனம், தனது பயணிகள் மற்றும் வாடிக்கையாளர்களை இலக்கு வைத்து முன்னெடுக்கப்படும் அதிகரித்த மோசடி நடவடிக்கைகள் குறித்து பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளது.
இவ்விடயம் தொடர்பாக அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் பின்வருவன குறிப்பிடப்பட்டுள்ளன:
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் ஊழியர்களைப் போல நடித்து, வாட்ஸ்அப் (WhatsApp) அல்லது நேரடியாக தொலைபேசி அழைப்புகள் மூலம் நபர்களை மோசடிக்காரர்கள் தொடர்பு கொள்கின்றனர்.
செயலிகள் மற்றும் தரவு திருட்டு: மோசடிக்காரர்கள் குறிப்பிட்ட மொபைல் செயலிகளை நிறுவுமாறு கோருதல், தொலைபேசித் திரையைப் பகிருமாறு (Screen Share) கேட்டல் அல்லது தனிப்பட்ட நிதித் தகவல்களைக் கோருதல் போன்றவற்றில் ஈடுபடுகின்றனர்.
இரகசியத் தகவல்கள்: ஒருமுறை பயன்படுத்தும் கடவுச்சொற்கள் (OTP), வங்கி PIN எண்கள் மற்றும் கடன் அட்டை (Credit Card) விபரங்களை மோசடிக்காரர்கள் கோருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விளக்கம்:
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் ஒருபோதும் வாட்ஸ்அப் ஊடாக வாடிக்கையாளர்களைத் தொடர்பு கொள்வதில்லை.
டிக்கெட் விநியோகம், விளம்பரங்கள் அல்லது வேறு எந்த நோக்கத்திற்காகவும் முன் அறிவிப்பின்றி (Unsolicited calls) அழைப்புகளை மேற்கொள்வதில்லை.
குறிப்பாக, OTP எண்கள், வங்கி இரகசிய எண்கள், கடன் அட்டை விபரங்கள் அல்லது திரையைப் பகிருமாறு நிறுவனம் ஒருபோதும் வாடிக்கையாளர்களிடம் கோர மாட்டாது.
பொதுமக்களுக்கான அறிவுறுத்தல்:
பயணிகள் மற்றும் பொதுமக்கள் இத்தகைய போலித் தொடர்புகள் குறித்து விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறான அழைப்புகளைப் புறக்கணிக்குமாறும், இது குறித்து உரிய அதிகாரிகளிடம் முறைப்பாடு செய்யுமாறும் கோரப்பட்டுள்ளனர்.
அனைத்து விளம்பரங்கள் மற்றும் சலுகைகளை நிறுவனத்தின் உத்தியோகபூர்வ இணையதளமான www.srilankan.com அல்லது உறுதிப்படுத்தப்பட்ட சமூக ஊடகப் பக்கங்கள் வாயிலாக மட்டுமே சரிபார்க்குமாறு விமான நிறுவனம் வலியுறுத்தியுள்ளது
