BBC
ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்புடன் பதவியேற்ற பிறகு, துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் (JD Vance) தனது மிகக்கடினமான பணியைத் தற்போது தொடங்கியுள்ளார்.
இஸ்லாமாபாத்தில் நடைபெறவுள்ள அமெரிக்கா – ஈரான் பேச்சுவார்த்தையில் அமெரிக்கத் தூதுக்குழுவை வழிநடத்தும் வான்ஸ், இந்த வார இறுதியில் அனைவரது கவனத்தையும் ஈர்க்கவுள்ளார். இரு தரப்பினரும் இரண்டு வார கால தற்காலிகப் போர்நிறுத்தத்திற்குச் சம்மதித்ததைத் தொடர்ந்து இந்தப் பேச்சுவார்த்தைகள் நடைபெறுகின்றன.
ட்ரம்ப், ஈரான், இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் நட்பு நாடுகளைத் திருப்திப்படுத்தும் வகையில், போரை நிரந்தரமாக முடிவுக்குக் கொண்டுவர வான்ஸ் ஒரு சவாலான சமநிலையைப் பேண வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.
மேலும், ட்ரம்ப் மற்றும் வான்ஸின் “தலையீடற்ற கொள்கையை” (anti-interventionist) ஆதரிக்கும் மாகா (MAGA) ஆதரவாளர்கள் இதனை ஒரு வெற்றியாகக் கருதும் வகையில் முடிவுகளை எட்ட வேண்டிய அழுத்தமும் அவருக்கு உள்ளது.
இந்த மோதலில் அனைத்துத் தரப்பினரையும் மகிழ்ச்சிப்படுத்தக்கூடிய தீர்வு எது என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. அதேபோல், ஹார்முஸ் ஜலசந்தியை (Strait of Hormuz) மீண்டும் திறப்பதற்கும், உலகளாவிய எண்ணெய் விலையைக் குறைப்பதற்கும் உடனடி தீர்வு ஏதேனும் உள்ளதா என்பதும் கேள்விக் குறியாகவே உள்ளது.
வெள்ளிக்கிழமை காலை வொஷிங்டனில் இருந்து புறப்படும்போது பேசிய வான்ஸ், இந்தப் பேச்சுவார்த்தைகளுக்காக ட்ரம்ப் அமெரிக்கக் குழுவிற்கு “மிகவும் தெளிவான வழிகாட்டுதல்களை” வழங்கியுள்ளதாகக் குறிப்பிட்டார். அந்த வழிகாட்டுதல்கள் என்ன என்பதும், இந்த விவாதங்களின் முடிவு என்னவாக இருக்கும் என்பதும் இனிமேல்தான் தெரியவரும்.
