அமைச்சர், செயலாளரின் பதவி விலகல்கள் பலனற்றவை என கூட்டு எதிர்க்கட்சி தெரிவிப்பு
சர்ச்சைக்குரிய தரமற்ற நிலக்கரி இறக்குமதி தொடர்பான விவரங்கள் அடங்கிய கணக்காய்வு அ அறிக்கையை, நாடாளுமன்றத்தின் ஊடாக உடனடியாக சட்டமா அதிபரிடம் (AG) சமர்ப்பிக்குமாறு ஐக்கிய மக்கள் சக்தி (SJB) கோரிக்கை விடுத்துள்ளது.
கட்சியின் சிரேஷ்ட உபதலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி லக்ஷ்மன் கிரியெல்ல, நேற்று (19) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது இந்தக் கோரிக்கையை முன்வைத்தார்.
இந்த விவகாரத்தை நேரடியாகக் கையாள்வதற்குப் பதிலாக, நடவடிக்கைகளைத் தாமதப்படுத்தும் நோக்கில் அரசாங்கம் பல்வேறு குழுக்களை நியமித்து வருவதாக அவர் குற்றம் சாட்டினார்.
“தரமற்ற நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டதை அரசாங்கம் ஒப்புக்கொண்டுள்ளது. கணக்காய்வாளர் நாயகம் இதனை உறுதிப்படுத்தி அறிக்கை சமர்ப்பித்துள்ளார். நிதி அதிகாரம் நாடாளுமன்றத்திடமே உள்ளது. கணக்காய்வாளர் நாயகம் அறிக்கை சமர்ப்பிக்கும் போது, அது முதலில் பொது நிறுவனங்கள் பற்றிய குழுவிடம் (COPE) ஒப்படைக்கப்படும். இப்போது செய்ய வேண்டிய ஒரே நடவடிக்கை, அந்த அறிக்கையை நாடாளுமன்றத்தின் ஊடாக சட்டமா அதிபரிடம் அனுப்புவதுதான். ஆனால் அதற்குப் பதிலாக, செயல்முறையைத் தாமதப்படுத்த அரசாங்கம் குழுக்களை நியமித்துள்ளது,” என்று அவர் கூறினார்.
மேலும், இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் எவ்வித கருத்து வேறுபாடுகளுமின்றி ஒன்றிணைந்து செயற்பட்டதாக கிரியெல்ல தெரிவித்தார். “நிலக்கரி கொள்வனவு விவகாரத்தில் அனைத்து எதிர்க்கட்சிகளும் இணைந்து செயற்பட்டன. தேர்தல் அறிவிக்கப்பட்டால் எதிர்க்கட்சிகளின் கூட்டணி அமைக்கப்படும். அக்கூட்டணியின் தலைமைத்துவம் ஐக்கிய மக்கள் சக்திக்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் வழங்கப்படும். இந்த அரசாங்கம் பல வாக்குறுதிகளுடன் ஆட்சிக்கு வந்தது, ஆனால் அந்த வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை,” என்றார்.
இதற்கிடையில், நிலக்கரி கொள்வனவு தொடர்பான விசாரணைகளைத் தொடர்ந்து பதவி விலகிய எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடி மற்றும் அமைச்சின் செயலாளர் பேராசிரியர் உதயங்க ஹேமபால ஆகியோரின் பதவி விலகல் குறித்து கூட்டு எதிர்க்கட்சி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில், ஒரு அமைச்சரின் பதவி விலகல் என்பது வழக்கமாக ஒரு குறிப்பிட்ட விவகாரம் தொடர்பான பொறுப்பை ஏற்றுக்கொள்வதாகவே கருதப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், அமைச்சரின் பதவி விலகல் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் நடவடிக்கைகளில் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்றும், அத்தகைய நியாயப்படுத்துதல்கள் அடிப்படையற்றவை என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
சமீபத்தில் நிலக்கரி கொள்வனவு ஒப்பந்தம் வழங்கப்பட்ட நிறுவனம், ஒப்பந்தம் வழங்கப்பட்ட நேரத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கவில்லை என்றும் அந்த அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இத்தகைய சூழ்நிலையில் ஒப்பந்தத்தை வழங்க எடுத்த முடிவிற்கு அரசாங்கம் கூட்டுப் பொறுப்பேற்க வேண்டும் என்றும் அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
