CNN
வியாழக்கிழமை ஹோர்முஸ் நீரிணையில் ஈரானால் நடத்தப்பட்ட பலமுனைத் தாக்குதல்களை அமெரிக்கக் கடற்படையின் மூன்று வழிகாட்டப்பட்ட ஏவுகணை அழிப்பு நாசகாரிகப்பல்கள் (Guided-missile destroyers) வெற்றிகரமாக முறியடித்ததாக அமெரிக்க மத்திய கட்டளைப் பணியகமும் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து தனது ‘Truth Social’ தளத்தில் பதிவிட்டுள்ள ட்ரம்ப், “மூன்று உலகத்தரம் வாய்ந்த அமெரிக்க நாசகாரி கப்பல்கள் தாக்குதல்களுக்கு மத்தியிலும் ஹோர்முஸ் நீரிணையை மிக வெற்றிகரமாகக் கடந்துள்ளன. இந்த மூன்று கப்பல்களுக்கும் எந்தச் சேதமும் ஏற்படவில்லை, ஆனால் ஈரானியத் தாக்குதல்தாரிகளுக்கு பெரும் சேதம் விளைவிக்கப்பட்டுள்ளது,” என்று குறிப்பிட்டுள்ளார்.
ஆளில்லா விமானங்கள், வேகமான தாக்குதல் படகுகள் மற்றும் ஏவுகணைகள் மூலம் ஈரான் இந்தத் தாக்குதலை நடத்தியதாகவும், அவை எளிதில் தோற்கடிக்கப்பட்டதாகவும் ட்ரம்ப் மேலும் கூறினார்.
பயன்படுத்தப்பட்ட கப்பல்களின் விபரம்:
இந்த மோதலில் ஈடுபட்ட USS Truxtun, USS Rafael Peralta மற்றும் USS Mason ஆகிய மூன்று போர்க்கப்பல்களும் ‘ஆர்லி பர்க்’ (Arleigh Burke) ரகத்தைச் சேர்ந்தவை. அமெரிக்கக் கடற்படையில் தற்போது சேவையில் உள்ள 75-க்கும் மேற்பட்ட இத்தகைய கப்பல்கள், அந்நாட்டின் கடற்படை வலிமையின் முதுகெலும்பாகக் கருதப்படுகின்றன.
சுமார் 500 அடி நீளமும், 8,200 முதல் 9,700 தொன் எடையும் கொண்ட இந்தக் கப்பல்கள் பலதரப்பட்ட தற்காப்பு ஆயுதங்களைக் கொண்டுள்ளன:
-
ஏவுகணைத் தடுப்பு: உள்வரும் ஏவுகணைகளைத் தகர்க்கும் பல மில்லியன் டொலர் பெறுமதியான அதிநவீன ‘Standard’ ஏவுகணைகள் மற்றும் குறுகிய தூர அச்சுறுத்தல்களைச் சமாளிக்கும் ‘Sea Sparrow’ ஏவுகணைத் தொகுதிகள் இவற்றில் உள்ளன.
-
இறுதிக்கட்டத் தற்காப்பு: ஏவுகணைகளையும் மீறி இலக்குகள் நெருங்கினால், ஒரு நிமிடத்திற்கு 4,500 ரவுண்டுகளைச் சுடக்கூடிய ‘Phalanx Close-In’ எனும் ரேடார் மூலம் இயங்கும் மெஷின் துப்பாக்கிகள் கடைசி தற்காப்பு அரணாகச் செயல்படும்.
-
தரைவழித் தாக்குதல்: ஈரானிய வேகப்படகுகள் போன்ற இலக்குகளைத் தாக்க கப்பலின் முன்புறத்தில் 127 மி.மீ பீரங்கி பொருத்தப்பட்டுள்ளது.
ஈரானிய ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்ட விதம் குறித்து ட்ரம்ப் வர்ணிக்கையில், “ஏவுகணைகள் எமது கப்பல்களை நோக்கி ஏவப்பட்டன, அவை மிக எளிதாகத் தகர்க்கப்பட்டன. அதேபோல் ட்ரோன்கள் வான்வெளியிலேயே எரித்து சாம்பலாக்கப்பட்டன. அவை பட்டாம்பூச்சி ஒன்று அதன் கல்லறைக்குள் விழுவதைப் போல அழகாக கடலுக்குள் விழுந்தன!” என்று பதிவிட்டுள்ளார்.
