-
விலைக்கட்டுப்பாடு எதிர்ப்பாராத எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தி, பொருட்களுக்கு தட்டுப்பாட்டை உருவாக்கக்கூடும் என எச்சரிக்கை
-
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் மீண்டும் வெடித்துள்ள மோதலால் உணவுகளின் விலையில் லேசான உயர்வு
-
இலக்கு வைக்கப்பட்ட குறிப்பிட்ட நடவடிக்கைகளை எடுக்க அரசு திட்டம்
உணவுப் பொருட்களுக்கு விலைக்கட்டுப்பாடுகளை விதிக்கக்கூடும் என்ற பேச்சுகளை அரசாங்கம் மறுத்துள்ளதுடன், இத்தகைய நடவடிக்கைகள் எதிர்ப்பாராத எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தி பொருட்களின் தட்டுப்பாட்டைத் தூண்டக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது.
தி சண்டே மார்னிங் பிசினஸ் நாளிதழுக்கு கருத்து வெளியிட்ட வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு பிரதி அமைச்சர் ஆர்.எம். ஜெயவர்தன, மத்திய கிழக்கில் மீண்டும் வெடித்துள்ள மோதலுடன் உணவுப் பொருட்களின் விலையில் லேசான உயர்வினை அரசாங்கம் அவதானித்துள்ளதாக ஒப்புக்கொண்டார்.
“உணவுப் பொருட்களின் விலையில் லேசான உயர்வு ஏற்பட்டுள்ளது. போக்குவரத்து மற்றும் காப்பீட்டுச் செலவுகள் அதிகரிப்பு மற்றும் நாணய மாற்று விகிதத்தின் வீழ்ச்சி ஆகியவையே இதற்குக் காரணம்” என்று அவர் கூறினார்.
இருப்பினும், விலைக்கட்டுப்பாடுகளை கொண்டுவர அரசாங்கம் முனையாது என்றும், ஏனெனில் அத்தகைய நடவடிக்கைக்கு தொடர்ச்சியான நிர்வாகமும் விலைகளின் ஒப்பீடும் தேவைப்படும் என்றும் அவர் கருத்து தெரிவித்தார்.
மேலும், இத்தகைய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டால், உலகளாவிய விலைகளில் ஏற்படும் எந்தவொரு திடீர் மாற்றமும், உள்ளூரில் திடீரென பொருட்களின் தட்டுப்பாட்டை எதிர்கொள்ளும் நிலையை நாட்டிற்கு ஏற்படுத்தக்கூடும் என்று அவர் கூறினார்.
தற்போது நிலவும் கொந்தளிப்பான வெளிநாட்டு சந்தை சூழலைக் கருத்தில் கொண்டு பார்க்கும்போது, விலைக்கட்டுப்பாடுகளை நாடுவது ஆபத்தானது என பிரதி அமைச்சர் தெரிவித்தார்.
அதற்குப் பதிலாக, உணவுப் பொருட்களின் விலை உயர்வுக்கான காரணங்களை தனித்தனியாகக் கண்டறிந்து, விலைகளை சீராகப் பேணுவதற்காக அந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண குறிப்பிட்ட நடவடிக்கைகளை எடுக்க அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் மோதல் வெடித்ததில் இருந்து சந்தையில் உணவுப் பொருட்களின் உண்மையான விலை உயர்வு, அதற்கு உடனடியாகப் பிந்தைய காலத்தில் அரசாங்கம் கணித்த ஆரம்பகட்ட கணிப்புகளை விட கணிசமாகக் குறைவாகவே உள்ளதாக ஜெயவர்தன மேலும் தெரிவித்தார்.
“போர் வெடித்ததுடன் அதைச் சுற்றியுள்ள நிச்சயமற்ற தன்மையால், உணவுப் பொருட்களின் விலைகள் குறைந்தபட்சம் 50% உயரும் என்று நாங்கள் பயந்தோம். இருப்பினும், திரட்டப்பட்ட தரவுகளின்படி, அந்த உயர்வை சுமார் 6–10% க்குள் எங்களால் கட்டுப்படுத்த முடிந்தது. எனினும், என்னிடம் இன்னும் அண்மைக்கால சமீபத்திய புள்ளிவிவரங்கள் இல்லை” என்றும் அவர் கூறினார்.
