-
அச்சுறுத்தல்கள் மற்றும் ஆபத்துகளைத் துல்லியமாகக் கணிப்பது கடினமாக இருப்பதால், நிறுவனங்கள் தங்களது சைபர் பாதுகாப்பிற்காகப் நிதி ஒதுக்கத் தயங்குகின்றன என ஸ்ரீலங்கா டெலிகொம் குழுமத்தின் முதன்மைச் செயல் அதிகாரி (Group CEO) ரியாஸ் ரஷீத் தெரிவித்துள்ளார்.
-
மனித தலையீடின்றி சுயமாக இயங்கும் ‘செயற்கை நுண்ணறிவு முகவர்கள்’ (AI agents) உருவாக்குவது, புதிய சைபர்பாதுகாப்பு அச்சுறுத்தல்களை ஏற்படுத்துகிறது என எச்சரிக்கிறார்.
-
நிறுவனங்களின் பணிப்பாளர் சபைகள் டிஜிட்டல் பாதுகாப்பை விட நிதி சார்ந்த கட்டுப்பாடுகளுக்கே தொடர்ந்து முன்னுரிமை அளிக்கின்றன எனக் கூறுகிறார்.
-
மின்சாரக் கட்டணம், குறைக்கடத்தி (Semiconductor) தட்டுப்பாடு மற்றும் திறமையான பணியாளர்களின் பற்றாக்குறை ஆகியவை தொலைத்தொடர்புத் துறை முதலீடுகளுக்குத் தொடர்ந்து அழுத்தத்தை ஏற்படுத்துகின்றன.
அச்சுறுத்தல்கள் நேரடியாக உருவெடுக்கும் வரை, அதற்கான செலவுகளை நியாயப்படுத்துவதில் பணிப்பாளர் சபைகள் சிரமப்படுவதால், இலங்க நிறுவனங்களும் அரசாங்க நிறுவனங்களும் சைபர் பாதுகாப்பில் குறைந்த அளவிலேயே முதலீடு செய்து வருகின்றன என ஸ்ரீலங்கா டெலிகொம் (SLT) PLC குழுமத்தின் முதன்மைச் செயல் அதிகாரி ரியாஸ் ரஷீத் எச்சரித்துள்ளார். செயற்கை நுண்ணறிவின் (AI) அதிவேக வளர்ச்சி காரணமாக, இத்தகைய அணுகுமுறை மிகவும் ஆபத்தானது என்றும் அவர் வாதிடுகிறார்.
‘தேசிய மேலாண்மை கணக்கியல் மாநாடு 2026’ (National Management Accounting Conference 2026) நிகழ்வில் உரைநிகழ்த்திய ரஷீத், தொலைத்தொடர்புத் துறையின் முக்கிய மூலோபாயக் கவலைகளில் ஒன்றாகச் சைப்ரப் பாதுகாப்பு மாறியுள்ளது என்றார். ஏனெனில் AI தொழில்நுட்பமானது, வெறும் ஜெனரேட்டிவ் AI நிலையைத் தாண்டி, மனிதனின் தலையீடு இன்றி மென்பொருள்கள் தங்களுக்குள் சுயமாகத் தொடர்புகொள்ளும் ‘அஜென்டிக் AI’ (Agentic AI) என்ற நிலைக்குத் தீவிரமாக வளர்ந்து வருகிறது.
“நாங்கள் மிகவும் கவலைப்படும் மிகப்பெரிய சவால்களில் ஒன்று சைப்ரப் பாதுகாப்பு. எங்களது வாடிக்கையாளர்களிடம் நாங்கள் எப்போதும் கூறுவது என்னவென்றால்: ‘தயவுசெய்து முதலீடு செய்யுங்கள், உங்கள் சைப்ரப் பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள், ஏனெனில் இப்போது ஒரு AI முகவர் இன்னொரு AI முகவருடன் உரையாடிக்கொண்டிருக்கிறது'” என்று அவர் கூறினார்.
தாக்குதலுக்கு உள்ளாவதற்கு முன்னரே, வணிக நிறுவனங்களை இதற்காகப் பணத்தை ஒதுக்கச் சம்மதிக்க வைப்பதே இதில் உள்ள வணிக ரீதியான சவாலாகும் என ரஷீத் சுட்டிக்காட்டினார்.
“பல வணிக நிறுவனங்களும் அரசு நிறுவனங்களும் தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கான முதல் அடியை எடுத்து வைக்க விரும்புவதில்லை. ஏனெனில் அதற்கான செலவும் குறைவானது அல்ல. மேலும், அதனால் ஏற்படும் சேதம் எவ்வளவு பெரியதாக இருக்கும் என்றும் உங்களுக்குத் தெரியாது. எனவே, நீங்கள் அத்தகைய ஒரு தாக்குதலைச் சந்திக்காத வரை, அதன் ஆபத்தின் அளவை உங்களால் கணிக்க முடியாத ஒரு விஷயத்திற்காக மேசையில் பணத்தை வைக்க மிகவும் தயங்குகிறீர்கள்” என்று அவர் கூறினார்.
சைபர்பாதுகாப்பில் ஆரம்பத்திலேயே முதலீடு செய்வதை ஊக்குவிப்பதற்காக, SLT நிறுவனம் நிறுவனங்களின் உயர் நிர்வாகிகள் மற்றும் தொழில்நுட்பத் தலைவர்களுடன் கலந்துரையாடல்களை தீவிரப்படுத்தியுள்ளது. இது ஒரு சாதாரண நடவடிக்கை அல்ல, மாறாக இது ஒரு தேசியக் கவலை என்றும் அவர் விவரித்தார்.
“சி.இ.ஓ-க்கள் (CEO) முதல் சி.ஐ.ஓ-க்கள் (CIO) வரை அனைத்துத் தளங்களிலும் விழிப்புணர்வை ஏற்படுத்த முயல்கிறோம். ஒரு நாடாக நாம் எடுக்கக்கூடாத அபாயம் இது. நாம் அந்தப் பாதையில் செல்லவே கூடாது என்று கூறுகிறோம்” என்றார்.
AI-ன் அதிவேக வளர்ச்சி, பல நிறுவனங்கள் நினைப்பதை விடக் மிக வேகமாகச் சைபர் அச்சுறுத்தலின் தன்மையை மாற்றி அமைத்து வருகிறது என்றும் ரஷீத் தெரிவித்தார்.
“நாங்கள் 10-15 ஆண்டுகளுக்கு முன்பே AI நுட்பத்தைத் தொடங்கினோம். பின்னர் அது திடீரெனப் வெடித்துப் பரவியது. AI-லிருந்து நாங்கள் Gen AI-க்குச் சென்றோம். இப்போது Agentic AI பற்றிப் பேசுகிறோம்,” என்று அவர் கூறினார். “நடுவில் மனிதர்கள் இல்லாமல் ஒரு AI முகவர் மற்றொரு முகவருடன் தொடர்பு கொள்ளும்போது என்ன நடக்கும்? என்ன நடக்கும் என்று யாருக்கும் தெரியாது. அது மிகவும் சிக்கலானது. எனவே நாம் மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டும்.”
சைபர் பாதுகாப்பிற்கு அப்பால், தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்களது மூலதனச் செலவுகளையும் நெட்வொர்க் பாதுகாப்பையும் நேரடியாகப் பாதிக்கும் கட்டமைப்பு ரீதியான கட்டுப்பாடுகளுடன் தொடர்ந்து போராடி வருவதாகக் கூறினார்.
SLT இன் வணிகப் பிரிவானது சைப்ரப் பாதுகாப்பு, கிளவுட் சேவைகள் (Cloud services), அரசு இணைப்புச் சேவைகள் மற்றும் தரவு மையங்களை (Data centres) உள்ளடக்கியுள்ளது. இதனால் தடையில்லாத உள்கட்டமைப்பைப் பராமரிப்பது என்பது வெறும் செயல்பாட்டு இலக்கு மட்டுமல்ல, அது ஒரு மூலோபாயத் தேவையாகும்.
சர்வதேச ஆழ்கடல் கேபிள்களில் (Submarine cables) ஏற்படும் பழுதுகள், இத்துறை எதிர்கொள்ளும் மிக முக்கியமான வெளிப்புற ஆபத்துகளில் ஒன்றாக உள்ளது என்றும் அவர் கூறினார்.
“இந்தக் கேபிள்களில் ஒன்று துண்டிக்கப்பட்டால் என்னவாகும் என்று யோசித்துப் பாருங்கள். இது நாட்டிற்கும் அதன் பொருளாதாரத்திற்கும் மிகப்பெரிய சவாலாக அமையும்” என்று ரஷீத் கூறினார்.
சர்வதேச நெட்வொர்க்கில் நிறுவனம் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்திருந்தாலும், ஒரு பெரிய கேபிள் துண்டிப்பு முழுப் பொருளாதாரத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அவர் கூறினார்.
குறைக்கடத்திகள் (Semiconductors / Microchips) தட்டுப்பாடு உள்கட்டமைப்பு முதலீட்டிற்கு பெரும் முட்டுக்கட்டையாக இருப்பதைச் சுட்டிக்காட்டிய அவர், விலையை விட விநியோகமே இதில் முக்கிய சவாலாக மாறியுள்ளது என்றார்.
“இந்த நெருக்கடியில் நாம் எதிர்கொண்ட மிகப்பெரிய சவால்களில் ஒன்று வன்பொருட்களின் (Hardware) பற்றாக்குறை ஆகும். அதிக விலை என்பது இங்கே பெரிய விஷயம் அல்ல; அதிக விலை கொடுக்கத் தயாராக இருந்தாலும், அவற்றைச் சந்தையில் பெற முடிவதில்லை” என்றார்.
உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள், தங்களது குறைக்கடத்தி உற்பத்தியை பல ஆண்டுகளுக்கு முன்பே முன்பதிவு செய்து வைத்துள்ளன. இதனால் நெட்வொர்க் விரிவாக்கம் மற்றும் பழைய உள்கட்டமைப்புகளை மாற்றுவதற்கு தொலைத்தொடர்பு நிறுவனங்கள் முன்கூட்டியே வன்பொருள்களைப் பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளன.
“தேவை அதிகரிக்கும் போது, உங்களுக்கு அதிக வன்பொருள்கள் தேவைப்படுகின்றன. ஐந்து அல்லது ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு பழைய வன்பொருள்களை வைத்துக் கொண்டு இயக்க முடியாது” என்று ரஷீத் கூறினார்.
மின்சாரக் கட்டணம் மற்றும் திறமையான தொழில்நுட்ப வல்லுநர்கள் வெளியேறுவது ஆகியவை இத்துறை எதிர்கொள்ளும் ஏனைய கட்டமைப்பு அழுத்தங்கள் ஆகும்.
“முதலாவது கண்டிப்பாக மின்சாரக் கட்டணம். இரண்டாவது வன்பொருள் பற்றாக்குறை. மூன்றாவது மனித வளம். எனவே புதிய நபர்களைப் பயிற்றுவித்து அவர்களைத் தரமான நிலைக்குக் கொண்டு வருவதை நாம் உறுதி செய்ய வேண்டும்” என்றார்.
AI தொழில்நுட்பமானது கணிசமான வணிக வாய்ப்புகளை வழாங்குவதாக இருந்தாலும், பணிப்பாளர் சபைகள் சைப்ரப் பாதுகாப்பை ஒரு விருப்பத்தேர்வுச் செலவாகப் பார்க்காமல், ஒரு மூலோபாய முதலீடாகக் கருத வேண்டும் என ரஷீத் வலியுறுத்தினார்.
