திங்கட்கிழமை, 3 ஆகஸ்ட் 2026
-
இலங்கையின் பொருளாதார மீட்சி அதன் உள்ளார்ந்த பலத்தைப் பிரதிபலிக்கிறது என சிட்டி குரூப்பின் இந்தியா மற்றும் இலங்கைகளுக்கான இயக்குநர் மற்றும் பொருளாதார நிபுணர் பாகர் ஜைதி தெரிவிப்பு.
-
சீர்திருத்தங்கள், கொள்கை ஸ்திரத்தன்மை மற்றும் மேக்ரோ ஸ்திரத்தன்மை ஆகியவை நல்ல பலன்களைத் தந்துள்ளதாகப் பாராட்டு.
-
இருப்பினும், பொருளாதாரத்தின் பல துறைகள் இன்னும் 2018 ஆம் ஆண்டு மட்டத்தை விடக் குறைவாகவே உள்ளதாக எச்சரிக்கை.
-
கடந்த காலத்தை விட மிகவும் சவாலான புவிசார் அரசியல் சூழலில், இந்த மீட்சியைத் தக்கவைத்து வளர்ச்சியைத் தூண்டுவதே இலங்கைக்கு முன்னாலுள்ள சவாலாகும் எனக் கருத்து.
-
கடன் நிலைத்தன்மை முன்னேறியுள்ளதை ஏற்றுக்கொண்ட அவர், எதிர்காலக் கடன்களை இலங்கை செலுத்தும் என்ற நம்பிக்கையை வெளியிட்டார்.
-
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) சீர்திருத்தத் திட்டங்களை தொடர்ந்து திறம்பட அமல்படுத்துமாறு இலங்கையை வலியுறுத்தினார்.
-
இந்தியாவின் வளர்ச்சி வாய்ப்புகளை இலங்கை அதிகபட்சமாகப் பயன்படுத்திக் கொள்வதன் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டினார்.
இலங்கையின் பொருளாதார மீட்சியானது அனைவரின் எதிர்பார்ப்புகளையும் விஞ்சி, “வியக்கத்தக்க வகையிலும்” “சீராகவும்” அமைந்திருப்பதாக சிட்டி குரூப் நிறுவனத்தின் இந்தியா மற்றும் இலங்கைகளுக்கான இயக்குநரும் பொருளாதார நிபுணருமான பாகர் ஜைதி அண்மையில் விவரித்துள்ளார்.
“இது ஒரு வியக்கத்தக்க மீட்சியாகும். ஒரு நாடு சந்தை எதிர்பார்ப்புகளை இவ்வளவு சீராக முறியடித்ததை நான் சமீப காலத்தில் பார்த்ததில்லை. எதிர்பார்ப்புகளைத் தாண்டி வளர்ச்சி அடைந்தது மட்டுமன்றி, பொருளாதாரத்தின் அனைத்து முக்கியக் காரணிகளிலும் (macros) இந்த நேர்மறையான ஆச்சரியங்கள் தொடர்ச்சியாகக் கிடைத்திருப்பதே இதன் சிறப்பம்சமாகும்” என்று கொழும்பில் ‘Daily FT’ இதழுக்கு அளித்த சிறப்புச் பேட்டியில் ஜைதி தெரிவித்தார்.
இலங்கை தொடர்ச்சியான காலாண்டுகளில் நேர்மறையான வளர்ச்சியைப் பதிவு செய்திருப்பதை அவர் குறிப்பிடத்தக்க அம்சமாகச் சுட்டிக்காட்டினார்.
“எந்தவொரு பிரதான பொருளாதாரக் காரணியை எடுத்தாலும், இலங்கை தொடர்ந்து சிறப்பாகச் செயல்பட்டுள்ளது,” என்று வலியுறுத்திய ஜைதி, 5% வளர்ச்சியைத் தொடர்ந்து தக்கவைத்துக்கொள்வது பாராட்டுக்குரியது என்றார்.
“நிதி நெருக்கடிகளுக்கு மத்தியிலும் இலங்கை இந்த அளவிலான வளர்ச்சியை எட்டியிருப்பது, தனியார் துறையின் உள்நாட்டுத் தேவை நன்கு மீட்சியடைந்துள்ளதைக் காட்டுகிறது. இதைத் தொடர்ந்து செய்யும்போது, அதற்குப் பின்னால் ஒரு திட்டமிடலும், பொருளாதாரத்தின் உள்ளார்ந்த பலமும் இருக்கிறது என்பதை உணர முடிகிறது,” என்றும் அவர் மேலும் கூறினார்.
அரசாங்கத்தின் நிதி நிலைமை சந்தை எதிர்பார்த்ததை விட மிகச் சிறப்பாக இயங்கியுள்ளதாகவும், நடப்புக் கணக்குச் சமநிலையிலும் (current account) இலங்கை எதிர்பார்த்ததை விடச் சிறப்பான ஆற்றலை வெளிப்படுத்தியுள்ளதாகவும் ஜைதி குறிப்பிட்டார்.
ஆரம்பத்தில் சில வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மற்றும் ஆய்வாளர்களிடம் தயக்கங்கள் இருந்தபோதிலும், பொதுவான கொள்கை மற்றும் அரசியல் ஸ்திரத்தன்மையிலும் இலங்கை சிறப்பாகச் செயல்பட்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
இலங்கையின் மீள்தன்மை குறித்து மேலும் விவரித்த அவர், அமெரிக்காவின் அதிக வரிவிதிப்பு தாக்கம், மத்திய கிழக்கில் ஏற்பட்ட மோதல்களால் உருவான விநியோகச் சங்கிலி பாதிப்புகள் மற்றும் ‘டித்வா’ புயல் (Cyclone Ditwah) போன்ற உள்நாட்டுச் சவால்கள் உள்ளிட்ட பல வெளிநாட்டுப் பின்னடைவுகளுக்கு மத்தியிலும்தான் இந்த 5% வளர்ச்சி சாத்தியமாகியுள்ளது என்றார்.
“இலங்கையின் உள்நாட்டுப் பொருளாதாரம் தொடர்ந்து சிறப்பாக இயங்கி வருகிறது. முதலீடுகளும் நல்ல முன்னேற்றத்தைக் கண்டுள்ளன. இது இரு விஷயங்களை உணர்த்துகிறது: முதலாவது, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பின்னடைவுகளுக்கு ஏற்பத் தகவமைத்துக் கொள்ளப் பொருளாதாரம் பழகிக்கொண்டுள்ளது. இரண்டாவது, தொடர்ச்சியான சீர்திருத்தங்கள், கொள்கை ஸ்திரத்தன்மை மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மை ஆகியவை இறுதியாக நல்ல பலன்களைத் தரத் தொடங்கியுள்ளன.”
இலங்கைக்கு இன்னமும் நீடிக்கும் சவால்கள்
இலங்கையின் மீட்சிக்கு உயர் தரச்சான்றிதழ் அளித்தபோதிலும், நாட்டிற்கு இன்னும் சவால்கள் நீடிப்பதை சிட்டி குரூப் இயக்குநர் ஒப்புக்கொண்டார். 5% வளர்ச்சி என்பது நல்ல விஷயம்தான் என்றாலும், அதை விரிவாக ஆராய்ந்தால் பொருளாதாரத்தின் சில துறைகள் இன்னும் 2018 ஆம் ஆண்டின் நிலையை அடையவில்லை என்பதை சுட்டிக்காட்டினார்.
“உதாரணமாக, கட்டுமானம் மற்றும் சுரங்கத் துறைகள் இரட்டை இலக்க வளர்ச்சியைப் பதிவு செய்து வருகின்றன. ஆனால், கடந்த இரண்டாண்டுகளாக இரட்டை இலக்க வளர்ச்சி இருந்தபோதிலும், அவற்றின் பொருளாதார நடவடிக்கைகள் இன்னும் 2018 ஆம் ஆண்டின் அளவை விட 25% முதல் 30% வரை குறைவாகவே உள்ளன,” என்று அவர் விளக்கினார்.
“2019 முதல் 2020 வரையிலான காலத்தில் ஏற்பட்ட கடுமையான பாதிப்பின் காரணமாக, சீரான மீட்சி இருந்தபோதிலும், ஒட்டுமொத்தப் பொருளாதாரத்தையும் மீண்டும் 2018 நிலைக்குக் கொண்டுவர இந்த வளர்ச்சி போதுமானதாக இல்லை. ஒட்டுமொத்த அளவில் நிலைமை பரவாயில்லை என்றாலும், பொருளாதாரத்தின் சில குறிப்பிட்ட துறைகள் இன்னும் நெருக்கடிக்கு முந்தைய நிலையை அடையவில்லை,” என்று ஜைதி மேலும் தெரிவித்தார்.
மேலும், சர்வதேச மேக்ரோ சூழல் மிகவும் சவாலாக இருக்கும் பின்னணியில், இந்த மீட்சியைத் தக்கவைத்து வளர்ச்சியைத் தூண்டுவதே இலங்கைக்கு முன்னாலுள்ள சவாலாகும் என்றும் அவர் குறிப்பிட்டார். “இது சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) திட்ட இலக்குகளை எட்டுவதில் சில சிரமங்களை ஏற்படுத்தலாம்,” எனக் குறிப்பிட்ட அவர், கச்சா எண்ணெய் விலையேற்றம் மற்றும் நடப்புக் கணக்கில் பற்றாக்குறை ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகளையும் சுட்டிக்காட்டினார்.
கடன் நிலைத்தன்மையில் முன்னேற்றம்
இலங்கையின் பொதுக் கடன் நிலைத்தன்மை (public debt sustainability) மேம்பட்டு வருவதை ஜைதி வரவேற்றார்.
“ஒட்டுமொத்த அளவில் கடன் இன்னும் அதிகமாகவே உள்ளது. எனவே, சில ஆண்டுகளுக்கு முன்பு சர்வதேச நாணய நிதியம் நிர்ணயித்த கடன் நிலைத்தன்மை இலக்குகளை அடைய இன்னும் நிறைய வேலைகள் செய்ய வேண்டியுள்ளது,” என்று அவர் கூறினார்.
இருப்பினும், 2028 ஆம் ஆண்டிலிருந்து இலங்கை தனது கடன் பொறுப்புகளைச் சரியாகச் செலுத்த முடியும் என்று அவர் நம்பிக்கை வெளியிட்டார்.
கடன் நிலைத்தன்மை, கடன் சேவை செலுத்துதல் மற்றும் கடன் நிதியளிப்பு ஆகிய முக்கியக் காரணிகள் ஒவ்வொன்றிலும், மார்ச் 2023 இல் சர்வதேச நாணய நிதியம் கணித்ததை விட இலங்கை மிகச் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. இதுவும், இதுவரை உருவாக்கப்பட்டுள்ள நிதிப் பாதுகாப்புகளும் (buffers), கடன் சேவையாற்றுவதில் பெரிய கவலைக்கு இடமில்லை என்பதைக் காட்டுகின்றன. எனினும், நடப்புக் கணக்கு மற்றும் அந்நியச் செலவாணி கையிருப்புக்கு அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடிய தொடர்ச்சியான உலகளாவிய விநியோகச் சங்கிலிப் பாதிப்புகளை மட்டுமே கவனமாகக் கையாள வேண்டும்.
“எனவே, தற்போதைய நிலவரப்படி, இலங்கை வெளிநாட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாத நிலை ஏற்படும் என்பதற்கான அபாயம் மிகவும் குறைவாகவே உள்ளது என்று நாம் உறுதியாகக் கூற முடியும்,” என்று சிட்டி குரூப்பின் இந்தியா மற்றும் இலங்கைகளுக்கான இயக்குநர் தெரிவித்தார்.
சர்வதேச நாணய நிதியத்தின் சீர்திருத்த இலக்குகளை இலங்கை தொடர்ந்து சிறப்பாகச் செயல்படுத்த வேண்டும் என்பது அவரது கருத்தாக இருந்தது. “அந்த இலக்குகள் நல்ல பலனைத் தருகின்றன,” என்றும் அவர் கூறினார்.
மேலும், மேம்படுத்தப்பட்ட பொருளாதார ஸ்திரத்தன்மையை இலங்கை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் ஜைதி கூறினார்.
“குறிப்பாக அடுத்த இரண்டு ஆண்டுகளில், இலங்கையின் கடன் செலுத்தும் காலம் தொடங்கும் போது, ஒட்டுமொத்தப் பொருளாதார ஸ்திரத்தன்மை பேணப்பட்டால், உண்மையான பொருளாதாரம் தனது கடமையைச் செய்யும். சுற்றுலா, உற்பத்தி அல்லது கட்டுமானம் என எதுவாக இருந்தாலும் வளர்ச்சி தொடர வேண்டும். துரதிர்ஷ்டவசமாக, இந்த ஒவ்வொரு துறையிலும் இலங்கை கடந்த காலத்தை விட மிகவும் சவாலான புவிசார் அரசியல் சூழலையே எதிர்நோக்கியுள்ளது,” என்று அவர் விளக்கினார்.
இந்தியா வழங்கும் நல்வாய்ப்பு
இலங்கை, இந்தியா வழங்கும் வாய்ப்புகளை அதிகபட்சமாகப் பயன்படுத்திக் கொள்வதன் முக்கியத்துவமும் வலியுறுத்தப்பட்டது.
“மிக வேகமாகக் வளர்ந்து வரும் பெரிய பொருளாதார நாடான இந்தியாவிற்கு மிக அருகில் இலங்கை உள்ளது. இந்தியாவின் விநியோகச் சங்கிலியின் ஒரு பகுதியாகவும், இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தின் ஒரு பகுதியாகவும் இருப்பதன் மூலம் இலங்கை இதன் பலனைப் பெற முடியும்,” என்று அவர் கூறினார்.
உற்பத்தி, சுற்றுலா, புதுப்பிக்கத்தக்க ), தகவல் தொழில்நுட்ப சேவைகள் மற்றும் இலங்கையின் உயர் மனிதவள மேம்பாட்டுச் சுட்டெண், கல்வியறிவு பெற்ற திறமைசாலிகள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு இலங்கை தனது மதிப்பை மேலும் உயர்த்திக்கொள்ள வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களின் சீர்திருத்தங்கள் மற்றும் பொது-தனியார் பங்களிப்பை (PPP) அதிகரிப்பது உள்ளிட்ட சீர்திருத்தங்களைத் தொடர்ந்து முன்னெடுப்பது வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க உதவும் என்றும் ஜைதி தெரிவித்துள்ளார்.
