மத்திய கிழக்கு மோதலால் ஏற்பட்டுள்ள பொருளாதாரப் பாதிப்புகளினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக, 2026 ஆம் ஆண்டின் 03 ஆம் இலக்கத் துணை மதிப்பீட்டின் (Supplementary Estimate) மூலம் ஒதுக்கப்பட்ட ரூபா 71.7 பில்லியன் நிவாரணப் பொதிக்கு அரசாங்க நிதி பற்றிய குழு (CoPF) அனுமதி அளித்துள்ளது.
தற்போதுள்ள பொருளாதாரச் சிரமங்களால் பாதிக்கப்பட்ட மக்களின் சுமையைக் குறைப்பதற்காக அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட நிவாரணப் பொதியின் கீழ் செய்யப்பட்ட ஒதுக்கீடுகள் மற்றும் அந்த நிதி பயன்படுத்தப்படும் விதம் குறித்தும் இக்குழு மதிப்பாய்வு செய்ததாக நாடாளுமன்றத் தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தலைமையில் அண்மையில் நாடாளுமன்றத்தில் கூடிய அரசாங்க நிதி பற்றிய குழுவின் கூட்டத்தின் போதே இவ்விடயங்கள் ஆராயப்பட்டன.
இக்கலந்தரையாடலின் போது, ரூபா 71.7 பில்லியன் நிவாரணப் பொதியில் அதிகபட்ச ஒதுக்கீடான ரூபா 52.8 பில்லியன் பெட்ரோலியத் துறைக்கென ஒதுக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
எரிபொருள் இறக்குமதிச் செலவு அதிகரிப்பால் ஏற்படக்கூடிய இழப்புகளை ஈடுசெய்வதற்கும், எரிபொருள் விநியோகம் தடங்கலின்றி கிடைப்பதை உறுதி செய்வதன் மூலம் நாட்டில் ஏற்படக்கூடிய தட்டுப்பாடுகளைத் தடுப்பதற்குமே இந்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் குழுவுக்குத் தெரிவித்தனர்.
இந்த ரூபா 71.7 பில்லியன் ஒதுக்கீடானது இரண்டு பகுதிகளைக் கொண்டது என்றும் அதிகாரிகள் மேலும் விளக்கமளித்தனர். முதலாவது பகுதி, 2026 மே மற்றும் ஜூன் மாதங்களில் வழங்கப்பட்ட எரிபொருள் மானியங்கள் உட்பட நிவாரண நடவடிக்கைகளுக்கான கொடுப்பனவுகளைத் தீர்ப்பதற்காக மீண்டும் ஒதுக்கப்பட்ட ரூபா 52.8 பில்லியன் ஆகும். இரண்டாவது பகுதி, இலங்கை கனிமநெய் கூட்டுத்தாபனம் மற்றும் ஏனைய எரிபொருள் விநியோகஸ்தர்களுக்கான 2026 ஏப்ரல் மாத எரிபொருள் மானியம், சிறுதேயிலை தோட்ட உரிமையாளர்களுக்கான உர மானியம் மற்றும் மீன்பிடித்துறைக்கு வழங்கப்பட்ட உதவிகள் ஆகியவற்றுக்காகப் பயன்படுத்தப்பட்ட ஆண்டறிக்கை அவசரகாலக் கையிருப்பு நிதியை (Budget contingency reserve) மீண்டும் நிரப்புவதற்காக ஒதுக்கப்பட்ட ரூபா 18.9 பில்லியன் ஆகும்.
மேலும், இந்த முழுமையான ரூபா 71.7 பில்லியன் ஒதுக்கீடும், ‘டிட்வா’ சூறாவளியைத் (Cyclone Ditwah) தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட நிவாரணம் மற்றும் மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்காக ஒதுக்கப்பட்ட 2026 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்கத் துணை மதிப்பீட்டின் ரூபா 500 பில்லியனில் பயன்படுத்தப்படாத மீதித் தொகையிலிருந்தே நிதியளிக்கப்படும் என்பதும் வெளிப்படுத்தப்பட்டது.
2026 ஜூன் 30 ஆம் திகதி நிலவரப்படி, அந்த ஒதுக்கீட்டில் ரூபா 243.9 பில்லியன் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருந்தது.
அதன்படி, இந்த எரிபொருள் மானியமானது எரிபொருள் நிறுவனங்களுக்கு வழங்கப்படும் மானியமாக அல்லாமல், நுகர்வோர் நிவாரண நடவடிக்கையாகவே பார்க்கப்பட வேண்டும் என்றும், தற்போதைய சூழ்நிலைக்குப் பதிலளிக்கும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்ட தற்காலிகக் தலையீடு இது என்றும் குழு குறிப்பிட்டது.
