ஐக்கியநாடுகள் முன்னாள் மனித உரிமை ஆணையாளர் நவநீதம் பிள்ளை தனது வாழ்நாள் முழுவதும் ஒடுக்கப்பட்ட புறக்கணிக்கப்பட்ட மக்களின் தளம்பாத குரலாக விளங்கிவந்துள்ளார்-என கனேடிய தமிழ்பேரவை தெரிவித்துள்ளது
நவநீதம் பிள்ளைக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளதை வரவேற்று வாழ்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கனேடிய தமிழர் பேரவை மேலும் தெரிவித்துள்ளதாவது
நவநீதம் பிள்ளைக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளதை வரவேற்று வாழ்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கனேடிய தமிழர் பேரவை மேலும் தெரிவித்துள்ளதாவது

பெருமதிப்புமிக்க அமைதிக்கான நோபல் பரிசை இவ்வாண்டு பெற்றிருக்கும் கலாநிதி நவநீதம் “நவி” பிள்ளை அவர்களுக்கு கனேடியத் தமிழர் பேரவை தனது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க அங்கீகாரம், அனைத்துலகச் சட்டம், மனித உரிமைகள், மற்றும் விளிம்புநிலையிலுள்ள மக்களின் நீதி ஆகியவற்றிற்காக அவரது வாழ்நாள் முழுமையான, துணிச்சலான அர்ப்பணிப்புக்கு ஒரு உறுதியான சான்றாகும்.
மனித உரிமைகளிலும் கனேடிய தமிழர்களின் நல்வாழ்விலும் அக்கறை கொண்டுள்ள ஒரு அமைப்பாக, கலாநிதி பிள்ளையின் இந்த வரலாற்றுச் சாதனை குறித்து கனேடியத் தமிழர் பேரவை அளவிலாத பெருமிதம் கொள்கிறது. தனது பணிவாழ்வு பூராகவும், பல தடைகளைத் தகர்த்து, ஒடுக்கப்பட்ட மற்றும் ஓரங்கட்டப்பட்ட மக்களின் தளம்பாத குரலாக அவர் தொடர்ந்து உறுதியுடன் விளங்கிவந்துள்ளார்.
கலாநிதி பிள்ளை அவர்களைப் பல சந்தர்ப்பங்களில் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்ததைப் பேரவை நெகிழ்வோடு நினைவுகூர்கிறது. குறிப்பாக, 2009 ஆம் ஆண்டு ஜெனீவாவில் – தமிழர்களுக்கு இக்கட்டானதும் பேரிடரானதுமான காலகட்டத்தில் – அவர் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் உயர் ஆணையாளராகப் பணியாற்றிய போது, கனேடியத் தமிழர் பேரவையின் தூதுக்குழுவைச் சந்தித்தார். அந்த நெருக்கடியான காலப்பகுதியில் அவரது வெளிப்படைத்தன்மையும், இரக்க மனமும், கொள்கைபற்றுடனான நிலைப்பாடும் உலகளாவிய புலம்பெயர் தமிழர்களுக்குப் பெரும் நம்பிக்கை அளிப்பதாக இருந்தன. அவரது கருத்துக்களும் வழிகாட்டுதலும் இலங்கையில் பொறுப்புக்கூறல் மற்றும் நிலையான, நீதியான அமைதிக்காக கனேடியத் தமிழர் பேரவை தொடர்ந்து மேற்கொண்டு வரும் பரிந்துரைப் பணிகளை கணிசமானவளவு வலுப்படுத்தின.
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க அடைவைக் கொண்டாடும் வகையில், கனேடியத் தமிழர் பேரவையின் தலைவர் சிறீதரன் துரைராஜா பின்வருமாறு தெரிவித்தார்:
“இது உலகம் முழுவதும் உள்ள மனித உரிமை ஆர்வலர்களுக்கு ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தருணமும் உலகளாவிய தமிழ் சமூகத்திற்கு மிகவும் பெருமைக்குரிய தருணமும் ஆகும். தடைகளைத் தகர்த்து எங்கும் வாழும் ஓரங்கட்டப்பட்ட மக்களின் கண்ணியத்தை நிலைநாட்டிய ஒரு வாழ்நாள் சாதனையை இந்த விருது அங்கீகரிக்கிறது. உண்மை, நீதி, மற்றும் மனித உரிமைகளுக்காக நாங்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் இவ்வேளையில், கலாநிதி பிள்ளையின் பேரடைவுகளால் நாங்கள் தொடர்ந்தும் புத்தூக்கம் பெறுகிறோம். உலகெங்கும் மனித கண்ணியத்திற்காக உழைப்பவர்களுக்கு ஒரு வழிகாட்டியாக விளங்கும் அவருக்கு, தொடர்ந்தும் வலிமையும் வெற்றியும் கிடைக்க வாழ்த்துகிறோம்