சவுதிஅரேபிய அதிகாரிகள் 2025ம் ஆண்டில் 356 பேருக்கு மரணதண்டனையை நிறைவேற்றியுள்ளனர் என சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
மரணதண்டனைக்கு எதிரான சர்வதேச தினமான இன்று மனித உரிமை கண்காணிப்பகம் மேலும் தெரிவித்துள்ளதாவது
சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் தனது கண்காணிப்பை ஆரம்பித்த பின்னர் கடந்த வருடமே அதிகளவான மரணதண்டனை நிறைவேற்றம் இடம்பெற்றுள்ளது.
2024 இல் 345 மரணதண்டனை நிறைவேற்றம் பதிவாகயிருந்த நிலையில் 2025 இல் இதனை விட அதிகளவான மரண தண்டனை நிறைவேற்றம் இடம்பெற்றுள்ளது.
தொடர்ந்து இரண்டாவது வருடம் மரணதண்டனை நிறைவேற்றம் புதிய அளவை எட்டியுள்ளமை சவுதி அரேபியாவில் காணப்படும் ஒரு கொடுரமான போக்கை வெளிப்படுத்தியுள்ளது என சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் சவுதி அரேபியாவிற்கான ஆய்வாளர் ஜோய் ஷீ தெரிவித்துள்ளார்.
அனைத்து மரணதண்டனைகளையும் உடனடியாக நிறுத்துமாறு முடிக்குரிய இளவரசர் முகமது பின் சல்மானின் அதிகாரிகளை உலக நாடுகள் கேட்டுக்கொள்ளவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கொலையுடன் தொடர்பில்லாத போதைப்பொருள் குற்றங்களுக்காக அதிகளவு வெளிநாட்டவர்களுக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டமையே 2025 இல் சவுதி அரேபியாவில் மரணதண்டனை அதிகரிக்க காரணம்.
அரசசார்பற்ற நிறுவனங்கள் மற்றும் சவுதி அரேபிய மனித உரிமை அமைப்புகளின்படி மரணதண்டனை நிறைவேற்றப்பட்டவர்களில் 240பேர் கொலையுடன் தொடர்பில்லாத மரண தண்டனை குற்றங்களுக்காக தண்டனை நிறைவேற்றப்பட்டவர்கள்,இவர்களில் 188 வெளிநாட்டவர்கள் என மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.