மக்கள் ஆதரவை இழந்துவரும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பௌத்தர்களின் நலன்களை விட்டுக்கொடுத்து சிறுபான்மையினத்தவர்களை திருப்திப்படுத்த முயல்கின்றது என ஐக்கிய மக்கள் சக்தி மல்வத்தைபீடாதிபதியிடம் தெரிவித்துள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தலைமையிலான குழுவினர் மல்வத்துபீட மகாநாயக்க தேரர் திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கள மகாநாயக்க தேரரை சந்தித்து உரையாடினர்.
இந்த சந்திப்பின்போது அரசாங்கம் பல விடயங்களை கையாளும் முறை குறித்து கடும் விமர்சனங்களை முன்வைத்த ஐக்கிய மக்கள் சக்தி குழுவினர் பௌத்த மதகுருமார் மற்றும் பௌத்த சாசனம் தொடர்பான விடயங்கள் குறித்த தமது கரிசனைகளை வெளியிட்டனர்.
புதிய சட்டமொன்று நிறைவேற்றப்படும் வரை பௌத்தமதகுருமார் ஆடை தொடர்பான விடயங்களை உரிய மரியாதையுடன் கையாளவேண்டும் என தெரிவித்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியல்ல,நிறைவேற்று அதிகார ஜனாதிபதிக்கு இடைக்கால ஏற்பாடுகளை மேற்கொள்வதற்கான அதிகாரம் உள்ளது என குறிப்பிட்டார்.
இதேவேளை அரசாங்கம் குறுகிய காலத்திற்குள் புதிய சட்டமூலத்தை நிறைவேற்றுவதாக உறுதியளித்துள்ளதாக மகாநாயக்க தேரர் தெரிவித்தார்.
அரசாங்கத்திற்கான மக்கள் ஆதரவு குறைவடைவதால்,பௌத்தர்களின் நலன்களை விட்டுக்கொடுத்து அரசாங்கம் சிறுபான்மை மக்களை திருப்திப்படுத்த முயல்கின்றது என ஐக்கிய மக்கள் சக்தி குழுவினர் தெரிவித்தனர்.
பௌத்த மதகுருமார் இணையவழி மூலமான அவதூறு பிரச்சாரங்களையும் விமர்சனங்களையும் எதிர்கொண்டுள்ளனர், எனஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
இவ்வாறான நடவடிக்கைகளை கட்டுப்படுத்த முடியுமான என கேள்வி எழுப்பிய மகாநாயக்க தேரர்இதற்கு காரணமானவர்களை கண்டுபிடித்து இதனை தடுப்பதற்கான வழிமுறைகள் உள்ளதா எனவும் கேள்வி எழுப்பினார்.