தொற்றுநோய் மரணங்களா அல்லது சாட்சியங்களை அழிக்கும் முயற்சியா? பேராசிரியர் சோமதேவாவின் செம்மணி அறிக்கையை நிராகரிக்க வேண்டிய 5 காரணங்கள்

Dr Murali Vallipuranathan
யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் தொல்பொருள் பேராசிரியர் ராஜ் சோமதேவாவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள செம்மணி இடைக்கால அறிக்கை பெரும் சர்ச்சையையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. செம்மணியில் புதைக்கப்பட்ட உடல்கள் போர்க்காலப் படுகொலைகள் அல்ல என்றும், அவை ஏதோ ஒரு தொற்றுநோய், இயற்கை அனர்த்தம் அல்லது வழக்கமான மதச் சடங்கு ரீதியான புதைப்புகள் என்றும் நிறுவுவதற்கு அவ்வறிக்கை முயல்கிறது.
நீதித்துறைப் பதிவுகள், தடயவியல் உண்மைகள் மற்றும் வரலாற்று ஆதாரங்களை திட்டமிட்டுப் புறந்தள்ளும் இந்த அறிக்கையின் அடிப்படையற்ற கூற்றுகளை அம்பலப்படுத்த வேண்டியது அவசியமாகும்.
1. எலும்புக்கூடுகளின் காயங்களையும் தளைகளையும் திட்டமிட்டு மறைத்தல்
• தியான நிலை (சமாதி) என்ற போலி விளக்கம்: 227-ஆம் இலக்க எலும்புக்கூடு வழக்கமான மதச் சடங்கின்படி “தியான நிலையில்” (சமாதி) புதைக்கப்பட்டதாக அறிக்கை சித்திரிக்கிறது. ஆனால், முந்தைய நீதிமன்ற நடவடிக்கைகள் மற்றும் தடயவியல் பதிவுகளின்படி, அதே எலும்புக்கூட்டின் கைகள் பின்புறமாகக் கட்டப்பட்டிருந்ததும், மண்டை ஓடு மற்றும் தாடை எலும்புகள் கொடூரமான ஆயுதங்களால் அடித்து நொருக்கப்பட்டிருந்ததும் புகைப்படச் சான்றுகளுடன் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. கைகள் கட்டப்பட்டு, மண்டை ஓடு பிளக்கப்பட்ட கொலையை “தியான நிலை” என வர்ணிப்பது தடயவியல் மோசடியாகும்.
• முறையற்ற புதைப்புகள்: பல எலும்புக்கூடுகள் தலை துண்டிக்கப்பட்ட நிலையிலும், ஒன்றன் மேல் ஒன்றாக அவசரக் கோலத்தில் வீசப்பட்ட நிலையிலும் காணப்பட்டதை அறிக்கை திட்டமிட்டு மூடிமறைக்கிறது.
2. சமகாலப் பொருட்களும் சான்றுகளும் புறக்கணிக்கப்படல்
• குழந்தைகளின் பொருட்கள்: 25-ஆம் இலக்க எலும்புக்கூடு ஒரு 4-5 வயதுக் குழந்தையினுடையது. அக்குழந்தையின் அருகே ஆங்கில எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட நவீன பாடசாலைப் பை, விளையாட்டு பாதணிகள் மற்றும் பால் போத்தல்கள் மீட்கப்பட்டுள்ளன.
• சவப்பெட்டி என்ற புனைவு: அங்கிருந்த சிறு ஆணிகளையும் உக்கிய துணித் துண்டுகளையும் வைத்து, அது ஏதோ மரபுவழிச் சவப்பெட்டிப் புதைப்பு என அறிக்கை அனுமானிக்கிறது. ஆனால், பாடசாலைப் பையுடனும் விளையாட்டுப் பொருட்களுடனும் ஒரு குழந்தை புதைக்கப்பட்டிருப்பது, அது திட்டமிட்ட கடத்தல் மற்றும் படுகொலை என்பதையே திட்டவட்டமாக நிரூபிக்கிறது.
3. நோயியல் மற்றும் மூலக்கூற்று ஆதாரங்கள் இன்மை
• ஒரு பெரும் தொற்றுநோயால் மக்கள் கொத்துக்கொத்தாக இறந்தார்கள் என்று வாதிடுவதற்கு, பற்களின் கூழ்மத்திலிருந்து (dental pulp) பெறப்படும் பண்டைய டி.என்.ஏ (aDNA) பரிசோதனைகள் மூலமாகவோ அல்லது எலும்புகளில் உள்ள நோய்க்கூற்று அடையாளங்கள் (காலரா, பிளேக், டைபாய்டு போன்றவை) மூலமாகவோ உயிரியல் சான்றுகள் நிறுவப்பட வேண்டும்.
• சோமதேவாவின் அறிக்கையில் இத்தகைய எந்தவொரு விஞ்ஞானபூர்வ ஆய்வுகளோ, ஆய்வக நோயியல் (pathological) உறுதிப்படுத்தல்களோ கிடையாது. வெறும் அனுமானங்களை மட்டுமே அறிக்கையாகத் தந்துள்ளார்.
No photo description available.
Dr Murali Vallipuranathan
4. யாழ்ப்பாணத்தின் சுகாதார மற்றும் மரணப் பதிவேடுகளில் சான்றுகள் இல்லை
• செம்மணியில் மீட்கப்பட்ட உடல்களில் 60 சதவீதத்திற்கும் அதிகமானவை பச்சிளங்குழந்தைகள் மற்றும் சிறுவர்களுடையவை. அப்படியொரு கொடிய தொற்றுநோய் பரவி நூற்றுக்கணக்கான மக்கள் ஒரேயடியாக இறந்திருந்தால், அதற்குரிய ஆவணங்கள் யாழ்ப்பாணத்தின் பொதுச் சுகாதாரத் துறை, போதனா வைத்தியசாலை அல்லது தேவாலயங்களின் மரணப் பதிவேடுகளில் பதிவாகியிருக்க வேண்டும். ஆனால், அப்படியொரு தொற்றுநோய் அனர்த்தம் நிகழ்ந்ததற்கான எந்தவொரு நிர்வாகப் பதிவும் வரலாற்றில் இல்லை.
5. இராணுவத்தினரின் நீதிமன்ற வாக்குமூலங்களை மூடிமறைத்தல்
• செம்மணி புதைகுழி என்பது தொல்பொருள் ஆய்வின் போது தற்செயலாகக் கண்டெடுக்கப்பட்ட ஒன்றல்ல. 1998-ஆம் ஆண்டு கிரிஷாந்தி குமாரசுவாமி வழக்கு விசாரணையின் போது, முன்னாள் இராணுவச் சிப்பாய் சோமரத்ன ராஜபக்ச உள்ளிட்ட படையினரால் நீதிமன்றில் பகிரங்கமாக அளிக்கப்பட்ட சாட்சியங்களின் அடிப்படையிலேயே இந்த புதைகுழிகள் அடையாளம் காணப்பட்டன. பாதுகாப்புப் படையினரால் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டனர் என்ற உறுதிப்படுத்தப்பட்ட வாக்குமூலங்களையும் சாட்சியங்களையும் ஒதுக்கிவிட்டு, இதனைத் “தொற்றுநோய் மரணம்” என்று திசைதிருப்புவது அப்பட்டமான நீதிமறுப்பு.
யார் இந்த பேராசிரியர் ராஜ் சோமதேவா?
பேராசிரியர் சோமதேவாவின் முந்தைய வரலாற்று மற்றும் தொல்பொருள் நிலைப்பாடுகளைக் கவனித்தால், அவரது அணுகுமுறை எப்போதுமே பக்கச்சார்பானதாகவே இருந்து வந்துள்ளது:
• விஜயனுக்கு முற்பட்ட தமிழர் வரலாற்றை மறுத்தல்: இலங்கையில் விஜயனின் வருகைக்கு முந்தைய பெருங்கற்காலப் பண்பாடு (Megalithic Iron Age), பொம்பரிப்பு, கந்தரோடை, ஆனைக்கோட்டை முத்திரை (கோ வேதா), மற்றும் தமிழ் பிராமிச் சான்றுகள் என தமிழர்களும் சைவ வழிபாட்டு எச்சங்களும் இந்த மண்ணில் தொன்றுதொட்டு வாழ்ந்ததற்கான உறுதியான தொல்பொருள் ஆதாரங்கள் நிரூபிக்கப்பட்டுள்ளன. ஆனால், பேராசிரியர் சோமதேவா இந்த வரலாற்று உண்மைகளை ஒருபோதும் ஏற்றுக் கொண்டதில்லை.
• திஸ்ஸமஹாராம பானை ஓட்டு முரண்பாடு: திஸ்ஸமஹாராமவில் கண்டெடுக்கப்பட்ட பானை ஓட்டு எழுத்துக்களை (எண் 53) ஐராவதம் மகாதேவன் மற்றும் பேராசிரியர் ப. புஷ்பரட்ணம் ஆகியோர் “திரளி முறி” என்ற தமிழ் பிராமி எழுத்தாக வாசித்த போது, அதனை மறுத்து அது சிங்கள-பிராகிருத வடிவம் என வலிந்து திரித்தவர் சோமதேவா.
• “ஹெள” (Hela) மேலாதிக்கக் கோட்பாடு: இலங்கையின் தொல்வரலாறு முழுவதும் சிங்கள பௌத்தர்களின் பூர்வீகத்திற்கு மட்டுமே சொந்தமானது என்ற ஒருதலைப்பட்சமான நிலைப்பாட்டை தொல்பொருள் ரீதியாக நிலைநிறுத்தவே அவர் தொடர்ச்சியாக முயன்று வந்துள்ளார். இப்போது இந்துக்களின் “சமாதி” என்ற புனித வழிபாட்டு முறையையும் போர் வன்முறைகளை மறைக்கத் தவறாகப் பயன்படுத்துகிறார்.
சர்வதேசம் தலையிட வேண்டிய கட்டாயம்
இலங்கையின் தொல்பொருள் திணைக்களமும் அரச அதிகார நிறுவனங்களும் எத்தகைய அரசியல் மற்றும் இன ரீதியான பக்கச்சார்புடன் இயங்குகின்றன என்பது ஏற்கனவே பல்வேறு சர்வதேச மற்றும் உள்நாட்டு ஆய்வுகளிலும், கொழும்பு டெலிகிராப் (Colombo Telegraph) உள்ளிட்ட ஊடகப் பதிவுகளிலும் ஆதாரங்களுடன் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.( https://www.colombotelegraph.com/…/a-challenge-to…/

)

1. சோமதேவாவின் அறிக்கையை நிராகரித்தல்: தமிழ்த் தரப்பும், மனித உரிமைச் செயற்பாட்டாளர்களும், சட்டத்தரணிகளும் எந்தவித விஞ்ஞானபூர்வ அடிப்படையும் அற்ற இந்த போலி அறிக்கையை முழுமையாக நிராகரிக்க வேண்டும்.
2. தமிழர் பகுதிகளில் இத்தகைய பணிகளுக்குத் தடை: வரலாற்றுத் திரிபுகளையும் தடயவியல் மூடிமறைப்புகளையும் செய்யும் உள்நாட்டு ஆய்வாளர்கள் தமிழ் பகுதிகளில் ஆய்வு என்ற போர்வையில் தொடர்ந்து குழப்பங்களை விளைவிக்க அனுமதிக்கக் கூடாது.
3. சர்வதேச நிபுணர்களின் நேரடி ஆய்வு: உள்நாட்டுப் பொறிமுறைகள் திட்டமிட்டு உண்மைகளைத் திரிக்கும் சூழலில், ஐக்கிய நாடுகள் சபையின் ‘மினசோட்டா நெறிமுறைக்கு’ (Minnesota Protocol) அமைய, நடுநிலையான சர்வதேச தடயவியல் நிபுணர்கள், நோயியல் வல்லுநர்கள் மற்றும் தொல்பொருள் ஆய்வாளர்களின் கண்காணிப்பில் மட்டுமே செம்மணி உள்ளிட்ட அனைத்துப் புதைகுழிகளும் மீளாய்வு செய்யப்பட வேண்டும்.
Dr Murali Vallipuranathan
MBBS (Jaffna), PGD (Population Studies), MSc (Colombo), MD (Community Medicine), FCCP (SL), FRSPH (UK)
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

bimal
செம்மணி மனித புதைகுழி- எந்தவொரு தனிநபரும் இறுதி முடிவினை முன்வைக்க முடியாது – வெளிநாட்டுஅமைப்புகள் உள்நாட்டு பொறிமுறையை சிதைப்பதற்கு அனுமதிக்ககூடாது- அமைச்சர் பிமல்
Mujibur-Rahman-L
ஈரானிய கப்பல்களில் உள்ளவர்களுக்கு குடிப்பதற்கான நீரை கூட வழங்குவதற்கு அரசாங்கம் மறுத்துவிட்டது – முஜிபூர்
Police-1
வஸ்கவிய எனப்படும் சாபக்கவிதைகளை சமூக ஊடகங்களில் பகிர்ந்துகொண்டமைக்காக எவரையும் விசாரணை செய்யவில்லை – பொலிஸ் ஊடகப்பிரிவு
fe4ab0b7-b072-4987-8290-5662176a30b2
இலங்கையில் அரசியல் விவாதத்தை கிளப்பியுள்ள ஜனாதிபதியை இலக்குவைத்து இயற்றப்பட்ட வஸ்கவிய ( சாபக்கவிதைகள்)
ukra war
ரஸ்ய உக்ரைன் மோதல்- கொல்லப்பட்ட இலங்கையரின் சடலத்தை ரஸ்யாவிடம் கையளித்தனர் உக்ரைன் அதிகாரிகள்
arrest-monk-protest
பௌத்தமதகுருமார் ஆர்ப்பாட்டத்தில் கத்தியுடன் நபர்
16930815621492431198
பௌத்தமதகுருமார் ஆர்ப்பாட்டத்தில் பதற்றநிலை
kasap
ஜனாதிபதி ஞானசாரதேரருக்கு பொதுமன்னிப்பு வழங்கவேண்டும் அல்லது பதவியை இராஜினாமா செய்யவேண்டும் - கஸ்ஸப்ப தேரர்
gajendra
ராஜ்சோமதேவ ஒரு சிங்கள பௌத்த தேசியவாதி- ஒருநிகழ்ச்சி நிரலுடன் செயற்படுகின்றார்- நாடாளுமன்றத்தில் கஜேந்திரகுமார்
Suresh-Sallay
கருணா அம்மான் பிரித்தானியா செல்வதற்காக கடவுச்சீட்டுகளை சுரேஸ்சாலேயை பெற்றுக்கொடுத்தார் – நீதிமன்றில் தகவல்